என்னையே எனக்கு உணர்த்தியவர் கே.பி. சார்!

நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

திரைப்படக் கல்லூரியில் நடிப்புப் பயிற்சிப் பெற்ற பிறகு பழையபடி பெங்களூருக்குச் சென்று, கண்டக்டர் வேலையைப் பார்த்துக்கொண்டே பொழுதுபோக்காக கன்னடப் படங்களில் நடிக்கலாமென்று நினைத்திருந்தேன்.

தமிழ்ப் படத்தில் நான் நடிப்பேன் என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை.

ஆனால், எதிர்பாராத விதமாக நான் பாலசந்தர் சாரைச் சந்தித்ததும், அவர் மூலமாக ‘அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானதும் அனைவருக்கும் தெரியும்.

அந்த ‘அபூர்வ ராகங்கள்’ படப்பிடிப்பின்போதுதான் ஒரு நாள் என்னையே எனக்கு உணர்த்தினார் அவர். என்னிடம் என்னென்ன திறமைகள் இருக்கின்றன, அவற்றை எப்படியெல்லாம் வெளிப்படுத்த வேண்டும் என்பனவற்றை எடுத்துக் கூறினார்.

அன்று அவர் வழங்கிய அந்த ஆலோசனைகள் அனைத்தும் எனக்குப் பெரிதும் உதவின. இன்றும் உதவி வருகின்றன.

அவருக்கு அவரே நண்பர்!

அவரது படப்பிடிப்புகளில் நான் அவரைக் கவனித்த வரையில், அவருக்கு அவரே தான் நண்பர் என்பதை உணர்ந்தேன்.

அவரது, அதாவது மனசாட்சி தான் அவருக்கு மிகச் சிறந்த, நெருங்கிய நண்பன். எந்த விஷயமாக இருந்தாலும் தனது மனச்சாட்சிக்கு ஏற்றதாக இருந்தால் தான் செய்கிறார்.

உதாரணமாக படப்பிடிப்பில் ஒரு ‘ஷாட்’ எடுக்கத் திட்டமிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அநேகமாக ஆழ்ந்த யோசனைக்குப் பிறகே ஷாட்டைத் தீர்மானிப்பார்.

சில சமயங்களில் ‘செகண்ட் தாட்’டில் இப்படிச் செய்தால் நன்றாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது. ஆகவே அப்படியே செய்வோம், என்று கூறுவதும் உண்டு. அந்த ‘செகண்ட் தாட்’ தான் அவரது மனசாட்சி

அவரை என் ‘God father’ என்றால் அது மிகையாகாது.

தனது படங்களில் மட்டுமல்லாது, மற்றவர்களின் படங்களிலும் நான் சிறந்து விளங்க வேண்டுமென்று விரும்புகிறவர் அவர்.

அதனால் தான் ‘ரஜினிகாந்த்’தை வெறும் கமர்ஷியல் வேல்யூவிற்காக மட்டும் பயன்படுத்தாதீர்கள். அவரை வித்தியாசமாகக் காட்ட வேண்டும் என்று மற்றவர்களுக்கும் ஆலோசனை கூறுவதுண்டு.

தற்போது எனக்கும் அவருக்குமிடையே ஒரு சிறிய இடைவெளி ஏற்பட்டிருந்தது. சமீபத்தில் அவர் இயக்கும் படம் எதிலும் நான் பணியாற்றக் கூடிய வாய்ப்பு எனக்கு ஏற்படாமலிருந்தது.

அந்த வகையில் எனக்குச் சிறிது வருத்தம் தான். ஏனெனில், என்னால் தொடர்ந்து புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள இயலாமற் போய் விட்டதே! என்பதுதான் என் வருத்தத்திற்குக் காரணம்.

சொந்தப் படம் எடுக்கும் அளவுக்கு நான் முன்னேறியிருந்தாலும் தொழில் முறையில் என்றும் நான் அவருக்கு ஓர் வேலைக்காரன்! ஆம்! இந்தப் பெயரில் அவர் படம் ஒன்றிய நான் நடிக்கும் வாய்ப்பு உருவாகி வருகிறது.

நன்றி: மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்ட (1987, மார்ச்) – ‘திரைக் கலைஞர்கள் வரிசை – இயக்குநர் கே பாலசந்தர்’ என்ற நூலிலிருந்து ஒரு பகுதி.

Comments (0)
Add Comment