கதவு திறந்தது!

புதுமுகம் தேவை, புதுமுகம் தேவை என்று பலர் கூறி வருகிறார்களே தவிர, இதற்காக பெரும்பாலோர் பிரயாசை எடுப்பதே கிடையாது. முன்பெல்லாம் நடிகர்களைத் தேர்ந்தெடுக்க ஊர் ஊராகச் சுற்றியிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். தற்போது ஏராளமான நாடகங்கள் சென்னையில் அடிக்கடி நடைப்பெறுகின்றன.

பெரும்பாலான தயாரிப்பாளர்கள் சென்னையிலிருப்பதால், நாடகங்களைப் பார்க்கலாம். துடிப்பும் ஆர்வமும் திறமையும் கொண்ட நடிகர்கள் மிகச் சுலபமாகக் கிடைப்பார்கள்.

புதுமுகங்களைத் தேடிப் பிடிப்பதில் தனிச் சிறப்பு பெற்ற சில தயாரிப்பாளர்களில் குறிப்பிடத் தக்கவரான ஜோசப் தளிய (ஜூனியர்) கண்டெடுத்த புது முகம் தான், இவ்விதழில் அறிமுகமாகும் இளைஞர் ஜெய்சங்கர்.

மதுரையிலுள்ள முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டின் குமாரரான ஜெய்சங்கர், தகப்பனார் பல ஊர்களுக்கு மாற்றலாகிப் போய் வந்ததால், தனது பாட்டனாருடன் சென்னையில் தங்கி வளர்ந்தார். அவர் வரை ஒரு சென்னை வாசிதான்.

மயிலை பி.எஸ். உயர்நிலைப் பள்ளியில் சங்கர் படித்தார். பள்ளியில் படிக்கும் போதே அவருக்கு நாடகங்களில் ஈடுபாடு இருந்தது. ஆனாலும் படிப்பை முடித்து விட்டுப் பிறகு அதில் ஈடுபட விரும்பினார்.

பி.எஸ். உயர்நிலைப் பள்ளியில் இறுதிப் பரீட்சையில் தேர்வு பெற்றதும், ராயப்பேட்டை புதுக் கல்லூரியில் இன்டர் வகுப்பில் சேர்ந்தார். அதில் தேறிய பிறகு விவேகானந்தா கல்லூரியில் சேர்ந்து பி. ஏ. பட்டம் பெற்றார்.

இங்கே மாணவர் யூனியன் காரியதரிசியாகவும் தமிழ் மன்றக் காரியதரிசியாகவும் இது போன்ற பல துறைகளில் பொறுப்பேற்றுப் பணியாற்றிப் பாராட்டு பெற்றார்.

கல்லூரி நிதிக்காக நடைபெற்ற பல கதம்ப நிகழ்ச்சிகளில் ஒன்றான ‘காதலுக்கு மருந்து’ நாடகத்தில் நடித்துப் பாராட்டும் பரிசும் பெற்றார். அதுதான் அவர் நடித்த முதல் நாடகம் என்று சொல்ல வேண்டும். இது 56, 57ல் நடைபெற்றது.

பிறகு 57, 58 ஆண்டுகளில் சில நாடகங்களில் சங்கர் நடித்தார். 58-59 ஆண்டில் கல்லூரிகளிடையே நடைபெற்ற நாடகப் போட்டியில், அவர் நடித்த இப்படியும் நடந்ததென்றால் நாடகம் பரிசு பெற்றது. அவரது நடிப்பை யாவரும் பாராட்டினார்கள்.

பி. ஏ. பட்டம் பெற்ற பின் சட்டப் படிப்புக்காக ஓராண்டு பயின்றார். நாடகத்தில் அவர் பெற்ற பாராட்டு, அவரது வாழ்க்கைப் பாதையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. நாடங்களில் நடித்துப் புகழ் பெற விரும்பினர்.

படிப்பை முடித்து பட்டம் பெற்றாகி விட்டது. என்றைக்கும் உத்தியோகம் இருக்கவே இருக்கிறது. ஆகவே கலையார்வம் காரணமாக நாடங்களில் நடித்து, நடிப்பத் திறமையை வளர்க்க முடிவுச் செய்தார்.

விவேகானந்தர் கல்லூரியின் பழைய, புதிய மாணவர்களைக் கொண்ட விவேகா பைன் ஆர்ட்ஸ் 1959-ல் துவக்கப்பட்டது. பகீரதன்  எழுதிய “தேன் மொழியாள்” நாடகம் அரங்கேற்றப்பட்டது. அகில இந்திய வானொலி நிலையத்தைச் சேர்ந்த கூத்தபிரான் இதை நாடகமாகி தந்தார்.

ஹாஸ்ய நடிகர் சோ ராமசாமியும் பங்கு கொண்டார். ஜெய்சங்கர் தான் கதாநாயகன் சோ ஒரு நல்ல கதாசிரியரும் கூட அவர் எழுதிய ‘என்னிடம் கிடைத்தால்’ ‘யாரிடமும் சொல்லாதே’, பொறுத்திருந்து பார்’ ‘எதற்காக’ முதலிய நாடங்களில் கதாநாயகன் வில்லன் பாத்திரங்களில் ஜெய்சங்கர் நடித்தார். சோ பொம்மை படத்தில் நடித்துள்ள  ஸ்ரீனிவாசன்  முதலியோரும் நடித்தார்கள்.

கல்கி பைன் ஆர்ட்ஸ் கிளப் நடத்திய அமரதாரா நாடகத்திலும் சங்கர் தான் கதாநாயகன், இது தவிர தேவகியின் கணவன், என் தெய்வம் ஆகியவற்றிலும்  கதா நாயகனாக  நடித்தார். இவற்றை கூத்தபிரான் நாடகமாக்கித் தந்தார்.

இவற்றுடன், சர்வர் சுந்தரம், மேஜர் சந்திரகாந்த் நாடகங்களை எழுதிப் புகழ் பெற்ற பாலசந்தரின் “வினோத ஒப்பந்தம் நாடகத்திலும், அவரது டைரக்ஷனில் தயாரான, முத்துவின், சொல்லித் தெரிவதில்லை’ நாடகத்திலும் சங்கர் நடித்தார்.

கூத்தபிரான் சொந்தமாக எழுதிய களங்கம் தீர்த்தவள்”. ‘அவள் நினைவு நாடகங்களிலும் சங்கர் நடித்தார். எல்லாம் நாடகங்களிலுமே அவருக்குப் பாராட்டு கிடைத்தது.

படவுலக வாசனை அவர் மேல் அடிக்க ஆரம்பித்தது. புத்தா ஆர்ட்ஸ் நடத்திய ஆடிய அரசு, நாடகம் அவருக்குப் பிரமாத புகழைக் கொடுத்தது. பிரபல எழுத்தாளரான  அருண் எழுதிய இந்த நாடகத்திற்கு நாகிரெட்டி, எம்.ஜி.ஆர்., ஏ.எல். ஸ்ரீனிவாசன் முதலியோர் வந்திருந்து சங்கரை பெரிதும் பாராட்டி ஆசி கூறினார்கள்.

நாகிரெட்டி பாராட்டியதோடு நில்லாமல், தனது படத்தில் சந்தர்ப்பம் தருவதாகவும் கூறினார். சிலரிடம் சிபாரிசும் செய்தார். இந்த உற்சாகத்தில் நாடக நிகேதன் நடத்திய, லட்சுமியின் பெண் மனம் என். எஸ். என். தியேட்டர்ஸின் ‘பிந்துசாரா’, ஸ்ரீரங்கம் நரசிம்மன் கதை எழுதி சுந்தரம் வசனம் எழுதிய “தேவை ஒரு தங்கை” முதலிய நாடகங்களில் நடித்தார்.

நாடகங்களில் நடித்துப் பண்பட்ட நடிகராக விளங்கிய ஜெய்சங்கர், சினிமாவில் தக்க சந்தர்ப்பம் கிட்டாமல் மனம் புண்பட்டார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் அவரது நெருங்கிய நண்பரான ராமானுலும்  என்பவர் மூலம் டில்லி சென்று உத்தியோகத்தில்மாந்தார். அமால்கமேஷன்ஸ் ஸ்தாபனத்தில் அவர் பணியாற்றிய போதிலும் மனம் சென்னை மேடைகளிலேயே இருந்தது.

குடும்பத்தைப் பிரிந்து தனியே இருக்கவும் பிடிக்கவில்லை. அதே சமயம் பாட்டனாருக்கு உடல் நலக்குறைவு ஏற்படவே, இதே சாக்கில் விடுமுறை பெற்று சென்னைக்கு வந்தார்.

அவருக்கு, அடுத்த வீட்டுக்காரர் ராமதாஸ் அவரது நெருங்கியே நண்பரானார். சங்கரின் திறமையையும் ஆர்வத்தையும் அறிந்திருந்த ராமதாஸ், அவரை இசையமைப்பாளர் டி. ஆர். பாப்பாவிடம் அறிமுகம் செய்து, அவரிடம் பலமாகச் சிபாரிசு  செய்தார்.

பாப்பா அப்போது சிட்டாடலின் “இரவும் பகலும்” படத்தின் இசை அமைப்பாளராக அமரத்தப்பட்டிருந்தார். அவர் சங்கரை ஜோசப் தளியத்திடம் அழைத்துச் சென்றார். கதாநாயகன் பாத்திரததிற்குச் சிபாரிசு செய்தார்.

சங்கர் பெற்றிருந்த பாராட்டுப் பத்திரங்கள், பத்திரிகை விமர்சனங்கள், பரிசுகள் முதலியவற்றை பார்த்தார், தளியத். எடுத்த எடுப்பிலேயே அவரது தோற்றமும், நடந்து கொண்ட விதமும் தளியத்தை கவர்ந்தன.

ஆனாலும் தேர்வுப் பரீட்சை வைக்க அவர் முடிவு செய்தார். படவுலகிலேயே முறையோடு காரியங்களைச் செய்பவர்களில் ஜோசப் தளியத் குறிப்பிடத்தக்கவர்.

திறமையைச் சோதித்து திருப்தியடைந்தால் நல்ல முறையில் பயன்படுத்தி உற்சாக மூட்ட அவர் தயங்கமாட்டார். ஆகவே அன்றே ‘மூவிடெஸ்ட்’ எடுத்தார்.

படவுலகில் தனக்கு இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாமல்தான் ஜெய் சங்கர் அங்கு சென்றார். அதற்கேற்றார்ப் போல், இரண்டு தினங்களில் சொல்லியனுப்புவதாக தளியத் கூறி அனுப்பவே, நமக்கு கிடைக்காது என்ற முடிவோடு வீடு திரும்பினார் சங்கர்.

ஆனால் எதிர்பாராதது நடந்தது. படவுலகில் தான் நுழைய விரும்பிய வாயிற்கதவு முடப்பட்டது என்று முடிவு செய்த சங்கருக்குக் கதவு திறந்து வழிவிட்டது! தளியத் “இரவும் பகலும்” படத்திற்கு ஜெய் சங்கரை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தார். அவரது நடிப்பு தளியத்துக்கு மிகுந்த திருப்தியைக் கொடுத்திருக்கிறது.

சங்கர் ஒரு திறமைமிக்க மேடைப் பேச்சாளரும்கூட. பல மேடைகளில் அமைச்சர்கள் தலைமையில் மிக அழகாகப் பேசி பாராட்டுப் பெற்றிருக்கிறார்.

‘துப்பறியும் சாம்பு’ நாடகத்தில் சாம்புவாக நடித்துப் புகழ் பெற்ற நடராஜய்யர் டைரக்னில்தான் பெரும்பாலான நாடகங்களில் சங்கர் நடித்து, தனது நடிப்புத்திறனை வளர்த்துக் கொண்டார்.

புதுமுகங்களைத் தக்க முறையில் ஊக்குவித்து நடிக்கச் செய்யும் தளியத்தின் டைரக்ஷனில் “இரவும் பகலும்” படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

 

படிப்பும் நாடக அனுபவமும் அவருக்குப் படவுலகில் புகழ் பெற துணை நிற்கின்றன.

இந்தப் படம் திரையிடப்பட்டதும். இருபத்தி நான்கே வயதான இளைஞர் ஜெய்சங்கர் நிரந்தரக் கதாநாயகர்கள் பட்டியலில் இடம் பெறுவது நிச்சயம்.

– நன்றி: பேசும் படம் மலர் 1964

Comments (0)
Add Comment