”ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு”!

திரைத் தெறிப்புகள் – 77:

*

பாடுவதில் தனித் தேர்ச்சி பெற்றவரான டி.எம்.சௌந்தரராஜனும், நடிகர் திலகமான சிவாஜி கணேசனும் இணைகிற பல பாடல்கள் பெரும் கவனத்தைப் பெற்றிருக்கின்றன.

அந்த விதத்தில் முக்கியமானது 1964-ம் ஆண்டு வெளிவந்த ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் இடம்பெற்ற  கவித்துவமும், எளிய அழகியலும் கூடிய இந்த வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.

“ஆறு மனமே ஆறு.
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு.
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை ஆறு…”

இந்தப் பாடலை பாடியபடி பல கோவில்களுக்குச் சென்று வருவதைப் போல அமைக்கப் பட்டிருக்கும் காட்சியில், நடிகர் திலகத்தின் நடிப்பு மனதுக்கு அமைதியை ஏற்படுத்துகிற விதத்தில் இருக்கும்.

“ஒன்றே சொல்வார், ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி.
இன்பத்தில் துன்பம், துன்பத்தில் இன்பம்.
இறைவன் வகுத்த நியதி.

சொல்லுக்குச் செய்கை பொன்னாகும்.
வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும்.
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லாம் நன்மையும் உண்டாகும்…”

அடுத்துவரும் எளிய வரிகளைப் பாருங்கள். இதைவிட நச்சென்று வாழ்வின் நெறிகளை உணர்த்திவிட முடியாது என்கிற விதத்தில் அமைந்திருக்கும் கவியரசரின் கவி வரிகள்.

“உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும் – நிலை உயரும்போது
பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்.
உண்மை என்பது அன்பாகும் – பெரும்
பணிவு என்பது பண்பாகும்.
இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்”

மிகவும் இதமான மெட்டில் அமைந்த இந்தப் பாடலுக்கு மிக அருமையாக இசை அமைத்திருப்பார்கள் எம்.எஸ். விஸ்வநாதனும் டி.கே. ராமமூர்த்தியும்.

“ஆசை கோபம் களவு கொள்பவன்
பேசத் தெரிந்த மிருகம்.
அன்பு நன்றி கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம் – இதில்
மிருகம் என்பது கள்ள மனம்.
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம் – இந்த
ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்”.

என்று நிறைவடையும் இந்தப் பாடலில் “அன்பு, நன்றி, கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்” என்கிற சத்தான வரியும் அடக்கம்.

நம்மைச் சுற்றியுள்ள வாழ்வை ஊடுருவிச் செல்லும் பாடல் வரிகளும் மென்மையாக மனதை வருடும் இசையும், டி.எம்.எஸ்.ஸின் கனிந்த குரலும், சிவாஜியின் முதிர்ச்சியான நடிப்பும் இணைந்து ‘மேஜிக்’ போல, ஒரு பாடலை எவ்வளவு சிறப்பான ஒன்றாக மாற்றிவிடுகிறது பாருங்கள்!

*

– மணா.

Comments (0)
Add Comment