தீபாவளி தினம் என்றாலே புதிய படங்கள் வெளியாகும், அன்றைய தினத்தில் ஏதாவது ஒரு படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் தீவிர சினிமா ரசிகர்களுக்கு இருக்கும்.
80, 90களில் தீபாவளி அன்றே இரண்டு, மூன்று படங்களைப் பார்த்துவிட வேண்டும் என்ற அதி தீவிர ரசிகர்கள் அதிகம் இருந்தனர். அப்போதெல்லாம் முன்னணி நடிகர்களின் படங்கள் போட்டி போட்டு வெளியாகும்.
அப்படித்தான் 1995ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி வந்த தீபாவளி தினத்தன்று முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகின.
ரஜினிகாந்த் நடித்த ‘முத்து’, கமல்ஹாசன், அர்ஜுன் நடித்த ‘குருதிப் புனல்’, சரத்குமார் நடித்த ‘ரகசிய போலீஸ்’, மம்முட்டி நடித்த ‘மக்களாட்சி’, விஜய் நடித்த ‘சந்திரலேகா’, பாண்டியராஜன் நடித்த ‘நீலக்குயில்’ ஆகிய படங்கள் வெளிவந்தன.
இவற்றில் ரசிகர்களை அதிகம் வியக்க வைத்த படமாக ‘குருதிப்புனல்’ படம் அமைந்தது. ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இந்தப் படத்தை இயக்கினார்.
ஹிந்தியில் கோவிந்த் நிஹ்லானி இயக்கிய ‘துரோக்கால்’ படத்தின் ரீமேக்காக உருவான படம். கமல்ஹாசன், அர்ஜுன், நாசர், கவுதமி, கீதா ஆகியோரது நடிப்பு அதிகம் பேசப்பட்டது.
அந்த தீபாவளியில் பெரும் வெற்றி பெற்ற படமாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், ரஜினிகாந்த், மீனா, சரத்பாபு நடித்த ‘முத்து’ படம் அமைந்தது.
இன்று வரையிலும் ரஜினிகாந்தின் பெரும் வெற்றிப் படங்களில் முத்து படத்திற்கு தனி இடமுண்டு.
ஆர்கே செல்வமணி இயக்கத்தில் மம்முட்டி, ரோஜா, ரஞ்சிதா நடித்த ‘மக்களாட்சி’ திரைப்படம் அரசியல் படமாக வெளிவந்து வெற்றிப் படமாக அமைந்தது.
சரத்குமார் நடித்த ‘ரகசிய போலீஸ்’ படம் சுமாராக ஓடியது. விஜய் நடித்து வெளிவந்த ‘சந்திரலேகா’ படமும், பாண்டியராஜன் நடித்து வெளிவந்த ‘நீலக்குயில்’ படமும் தோல்விப் படங்களாக அமைந்தன.
1995 தீபாவளி நாளில் வெளிவந்த முக்கிய படங்களான ‘முத்து, குருதிப்புனல்’ படங்கள் இன்று 30 ஆண்டுகளை நிறைவு செய்தாலும் இன்னமும் பேசப்படும் படங்களாக இருக்கின்றன.
நன்றி: தினமலர்