அடிமேல் அடி வாங்கிய இயக்குநர் ஷங்கர்!

கதைத் திருட்டுக்குச் சொத்தை முடக்கிய விநோதம்.

ஏழெட்டு ஆண்டுகளாகவே, நம்ம ஊர் பிரமாண்ட இயக்குநர் ஷங்கருக்கு சோதனை மேல் சோதனை. பிரச்சினைகளின் ‘பிள்ளையார் சுழி’யாக அமைந்தது – ‘இந்தியன் – 2’, படப்பிடிப்பில் காலதாமதம், நிதி  நெருக்கடி, ஷுட்டிங்கில் நிகழ்ந்த உயிர் இழப்புகள்,  உச்சக்கட்டமாக அந்தப் படத்தின் படுதோல்வி.

இந்தியன் – இரண்டாம் பாகம் இயக்கும்போதே, தெலுங்கில் ‘ராம் சரணை வைத்து ‘கேம் சேஞ்சர்’ படமும் டைரக்டு செய்தார். பெரும் முதலீட்டில் உருவான ‘கேம் சேஞ்சர்’ படமும் வணிக ரீதியில் நஷ்டம் அடைந்தது.

மேற்சொன்ன இரு படங்களையும் முடித்து விட்டு, ‘இந்தியன்-3’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளைத் தொடங்க இருந்தார் ஷங்கர்.

இரண்டாம் பாகம் ஓடாததால், மூன்றாம் பாகத்துக்கு கோடிகளை இறைக்கும் மனநிலையில், தயாரிப்பு நிறுவனமான லைகா இல்லை.

‘இந்தியன்-3’, முடிந்ததும், ‘வேள்பாரி’ நாவலை படமாக்க அவர் திட்டமிட்டிருந்தார். எழுத்தாளர் வெங்கடேசனுக்கு நல்ல தொகைத் கொடுத்து அந்த நாவலின் காப்புரிமை பெற்றுள்ள ஷங்கருக்கு, மற்றொரு காப்புரிமை விவகாரம் உச்சக்கட்ட சோதனையாக அமைந்துள்ளது.

விரிவாகவே விவகாரத்தை அலசலாம்.

கொந்தளித்த எழுத்தாளர்:

2010 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த்  நடித்த ‘எந்திரன்’ படம் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்திருந்தார். படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வசூலையும் குவித்தது.

வெற்றி அடையும் படங்களின் கதைகளுக்கு, எழுத்தாளர்கள் சொந்தம் கொண்டாடுவது, தமிழில் காலம் காலமாக நிகழ்ந்து வருகிறது.

‘எந்திரன்’, கதைக்கும் ஒருவர் உரிமை கொண்டாடினார். அவர், ஆரூர் தமிழ்நாடன். ‘இது எனது கதை’ என்று சொந்தம் கொண்டாடிய எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், ஷங்கர்  உள்ளிட்டோருக்கு  நோட்டீஸ் அனுப்பினார்.

‘காப்புரிமை சட்டத்தின்படி இது கிரிமினல் குற்றம்’ என குறிப்பிட்டு எழும்பூர்  நீதிமன்றத்தில்  அவர், வழக்கும் தொடர்ந்தார்.

அதன் அடிப்படையில், அமலாக்கத்துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த விவகாரத்தில் ஒரு பரபரப்பு நிகழ்வாக, இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி மதிப்பிலான 3 அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

சொத்து முடக்கம் செய்யப்பட்டதற்கு அமலாக்கத் துறை அளித்துள்ள விளக்கம்:

‘ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த ‘எந்திரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.290 கோடி வசூல் செய்தது.

இந்தப் படத்துக்காக ஷங்கர் ரூ.11.5 கோடி சம்பளம் பெற்றுள்ளார் – இந்தத் திரைப்படத்தின் கதை அமைப்பு, கேரக்டர்களின் தன்மை, கருப்பொருள் கூறு போன்ற அம்சங்களை, இந்திய திரைப்பட  மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் ஆய்வு செய்தது.

ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ‘ஜுகிபா’ கதைக்கும் ‘எந்திரன்’ திரைப்படத்தின் கதைக்கும்  ஒற்றுமை உள்ளது என அந்த  நிறுவனம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

ஷங்கர் மீதான கதைத் திருட்டு குற்றச்சாட்டு நிரூபணமாகி உள்ளது – காப்புரிமைச் சட்டத்தை ஷங்கர் மீறியுள்ளார் – இது சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ்  குற்றம்.

எனவே, சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ், ஷங்கரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட சொத்துகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது’ என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

காப்புரிமை சட்டத்தின்படி, அமலாக்கத்துறை, இயக்குநர் ஒருவரின் சொத்துக்களை முடக்குவது, தமிழ் சினிமாவில் இதுவே முதல்முறை.

‘சினிமாவில் கதைத் திடுட்டு நடந்தது நிரூபிக்கப்பட்டால், அந்தக் கதையை எழுதியவருக்கு இழப்பீடு அளிக்க நீதிமன்றங்கள் உத்தரவிடுவதே வாடிக்கை – சொத்துக்களை முடக்குவது நடைமுறையில் இல்லாத ஒன்று’ என ஆதங்கத்துடன் சொன்னார் இயக்குநர் ஒருவர்.

இந்தச் சம்பவம், கோடம்பாக்கத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

– பாப்பாங்குளம் பாரதி

Comments (0)
Add Comment