அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் நடித்த தீனா, பில்லா, மங்காத்தா, ஆரம்பம், வலிமை ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா. இவை அனைத்துமே வெற்றிப் படங்கள். இவர்கள் கூட்டணியில் கடைசியாக வலிமை படம் வந்தது. அதன் பின்னணி இசையை ஜிப்ரான் கவனித்தார்.
இந்நிலையில் அஜித்குமாரை ரெஸ்டாரண்ட் ஒன்றில் நேரில் சந்தித்தார் யுவன் சங்கர் ராஜா. அது குறித்த புகைப்படத்தை யுவன், தனது வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அஜித் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து முடித்த கையோடு ரேசில் பங்கேற்க வெளி நாடுகளுக்குப் பறந்துவிட்டார். அவரது புதிய படத்தின் ‘ஷுட்டிங்’ அக்டோபர் மாதம் தொடங்குகிறது.
இந்தப் படத்துக்கு ஏகே 64 என தற்காலிமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். ஜிவி பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார்.
அஜித்துடனான சந்திப்பு குறித்து யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட பதிவில், ஏ.கே.வை சந்தித்தது ரொம்ப சந்தோஷம். நாங்கள் இருவரும் புதிதாக வந்துள்ள கார்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.
எங்களின் இந்த சந்திப்பு சினிமா சம்பந்தப்பட்டதில்லை. நவீன கார்கள் பற்றிய விசயங்களை அவரிடத்தில் கேட்டறியவே சென்றதாகத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் சினிமா குறித்தும் இருவரும் விவாதித்ததாக இருவருக்கும் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
அஜித்தின் ‘ஏகே 65’ படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக தகவல். வெங்கட் படத்துக்கு வழக்கமாக யுவன் தான் இசை அமைப்பார். எனவே வெங்கட் படம் குறித்து அஜித்தும், யுவனும் ஆலோசனை நடத்தி இருக்கலாம் என்கிறார்கள்.
– பாப்பாங்குளம் பாரதி