இயக்குநர் எம்.ஏ.பாலா தயாரித்து, இயக்கும் புதிய படமான X Ray கண்கள் பூஜையுடன் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.
முன்னாள் ராணுவ வீரரான எம்.ஏ. பாலா, ஏற்கனவே ‘கார்த்திகேயனும் காணாமல்போன காதலியும்’ என்ற படத்தைத் தயாரித்து, இயக்கியுள்ளார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது அடுத்தப் படமான X Ray கண்களை இயக்கி வருகிறார்.
டுவிங்கில் லேப்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.ஏ.பாலா தயாரித்து, இயக்கும் இந்தப் படத்தில் யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மருத்துவரான ராம் பிரசாத் நடிக்கிறார்.
மிஸ்ட்ரி திரில்லர் கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் நாயகனும் நாயகியும் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்புப் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன. சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் முதற்கட்டப் படப்பிடிப்புப் பணிகள் நடைப்பெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது. அதோடு, படப்பிடிப்பு நிறைவை, கேக் வெட்டி கொண்டாடி அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் படக்குழுவினர் பதிவிட்டுள்ளனர்.
இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவுப் பணிகளை மோகனவேலு மேற்கொள்ள, இசையமைப்பாளராக விபின் ஆர் பணியாற்றுகிறார். விரைவில் இந்தப் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.