புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., நடித்த ‘சர்வாதிகாரி’ திரைப்படத்தில்தான் நான் முதன்முறையாக அவருடன் இணைந்து நடித்தேன்.
அதன்பிறகு தேவர் பிலிம்ஸ் இயக்கிய அனைத்துப் படங்களிலும் இணைந்து நடித்திருக்கிறேன்.
அவர் நடித்த ‘காவல்காரன்’ படத்திலிருந்து தொடர்ந்து அவருடன் பெரும்பாலான படங்களில் நடித்திருக்கிறேன்.
அவரோடு நடித்த ‘பல்லாண்டு வாழ்க’ படத்தில் எனக்கு ஒரு பார்பர் வேடம் கொடுக்கப்பட்டது.
அதில், எம்.ஜி.ஆருக்கு நான் சவரம் செய்யும் காட்சி. அந்தக் காட்சியில், சுற்றி நின்ற திருடர்கள் எல்லாம் சேர்ந்து சவரம் செய்யும்போது அவரது கழுத்தை அறுத்துவிடச் சொல்லி என்னை அனுப்புவார்கள்.
அந்தக் காட்சியின்போது, நான் அவருக்கு சவரம் செய்துவிட்டு கத்தியை கீழே போட்டுவிட்டு, என்னால் அவரை கொல்ல முடியாததால், “மாட்டேன்” என்று அலறிக் கொண்டே அங்கிருந்து ஓடி விடுவேன்.
இந்தக் காட்சி எடுத்து முடிக்கப்பட்ட பின் புரட்சித்தலைவர் என்னிடம் வந்து, “அண்ணே… காட்சி ரொம்ப நல்லா வந்திருக்கு… நீங்க ரொம்ப நல்லா நடிச்சிருக்கீங்க… எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது..” என்றார்.
அந்தக் காட்சியில் நான் நடித்தது ஒரு பக்கம் இருந்தாலும், “என் மீது நம்பிக்கை வைத்து, இந்த வேடத்தைக் கொடுத்து கத்தியையும் என் கையில் கொடுத்தீர்களே, அதுவே எனக்கு ரொம்ப சந்தோஷம்” என்றேன்.
அதை ரசித்து வாய்விட்டு சிரித்தார் எம்.ஜி.ஆர்.
அதன் பிறகு ‘மாட்டுக்கார வேலன்’ திரைப்படத்தில் நடித்தபோது ஒரு காட்சியில், வரலட்சுமி அம்மா அவர்கள் என்னிடம் வந்து, “என்னங்க, இந்த மாட்டுக் கொட்டகைல ஒரு அதிசயத்தைப் பார்த்தீங்களா” என்று கேட்பார்.
அதற்கு நான், “பழையபடி ஏசுநாதர் பிறந்து விட்டாரா?” என்று கேட்பேன்.
படப்பிடிப்புத் தளத்திலேயே இந்தக் காமெடியைப் புரட்சித்தலைவர் மிகவும் ரசித்துச் சிரித்துக் கொண்டே இருந்தார்.
அதன் பின்னரும் இதைப் பற்றிச் சொல்லிப் பலமுறை சிரித்துக் கொண்டே இருந்தார்.
அதன் பிறகும் பட முன்னோட்டக் காட்சியின்போது என்னையும் அழைத்து அவருடன் அமரச்சொல்லி பார்த்து ரசித்து மகிழ்ந்தார்.