Take a fresh look at your lifestyle.

திருக்குறள் – கொஞ்சம் நாடகம், கொஞ்சம் சினிமா!

‘திருக்குறள் கதைகள்னு சின்ன வயசுல சீரியல் பார்த்திருக்கேன்’, ‘திருக்குறள், திருவள்ளுவர்ன்னு சினிமா எடுத்தா இந்த காலத்துல யார் பார்ப்பாங்க’, ’திரையில் ரத்தம் ததும்புறதை எதிர்பார்க்குறவங்ககிட்ட எப்படி அறம் பேச முடியும்’.

இப்படி விதவிதமான ‘கமெண்ட்’களுக்கு தயாராகி நம்மை வந்தடைந்திருக்கிறது ‘திருக்குறள் – திருவள்ளுவருடன் ஒரு திரைப்பயணம்’ திரைப்படம்.

கர்ம வீரர் காமராஜரின் வாழ்வைத் தழுவி ஆக்கப்பட்ட ’காமராஜ்’ தந்த ஏ.ஜெ.பாலகிருஷ்ணன் இதனை இயக்கியிருக்கிறார். அதன் எழுத்தாக்கத்தில் பங்களித்த செம்பூர் கே.ஜெயராஜ் இதன் கதை திரைக்கதை வசனத்தை எழுதியிருக்கிறார்.

இளையராஜா இசையமைத்திருக்கிற இப்படத்தில் கலைச்சோழன், தனலட்சுமி, ஓஏகே சுந்தர், கொட்டாச்சி, குணா பாபு, பாடினி குமார், சுகன்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

எப்படிப்பட்ட திரையனுபவத்தை ரசிகர்களுக்குத் தருகிறது ‘திருக்குறள்’?

வழக்கமான கற்பனை!

வள்ளுவ நாட்டில் தனது காதல் மனைவி வாசுகி (தனலட்சுமி) உடன் இனிதே வாழ்ந்து வருகிறார் வள்ளுவர் (கலைச்சோழன்).

தவழும் குழந்தையின் அழகைக் கண்டவாறு, இளம்பருவத்தினரின் காதல் விளையாட்டுகளை உணர்ந்தவாறு, அமைதியான வாழ்வை நோக்கி சமூகம் செல்கிறதா என்று கண்காணித்தவாறு, அரசவையின் முடிவுகள் சாதாரண மக்களின் நலத்தை முன்னிறுத்துகிறதா என்பதை சீர்தூக்கிப் பார்த்தவாறு இருந்து வருகிறார். அது அவர் எழுதிக் கொண்டிருக்கிற ‘திருக்குறள்’ நூலில் பிரதிபலிக்கிறது.

இந்த நிலையில், இன்னொரு நாட்டின் அரசனாக இருக்கிற இளங்குமணன் தனது நாட்டின் மீது படையெடுத்து வருகிற விஷயம் வள்ளுவரைக் கவலைக்குள்ளாக்குகிறது.

குமணன் என்ற வள்ளலை அரச பதவியில் இருந்து சூழ்ச்சியால் அகற்றிப் பதவிக்கு வந்தவரே இளங்குமணன். அதனால், அறம் போற்றுபவர் அரசராக இருந்துவிட்டால், எந்த நாட்டுக்கும் பிரச்சனை இல்லை என்று சிந்திக்கிறார் வள்ளுவர். அதனைச் செயல் வழி காட்ட முயற்சிக்கிறார்.

அவரது முயற்சிக்கு வெற்றி கிடைத்ததா? அவர் எழுதிய திருக்குறள் நிறைவுற்றதா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

திருக்குறளை எழுதிய காலகட்டத்தில் வள்ளுவர் இப்படித்தான் இருந்திருப்பார் என்கிற கற்பனை வழக்கமானது. ஆனால், அதனை எளிமையாக, இனிமையாக, இக்காலத்து ரசிகர்களும் ஏற்கிற வகையில் நேர்த்தியான காட்சியாக்கத்தைக் கொண்டதாக உள்ளது ‘திருக்குறள்’.

’நாடகத்தனம்’ இருக்கிறதா?

ஐம்பதுகள், அறுபதுகளில் வந்த பல அரச படங்களில் ‘நாடகத்தனம்’ மிகுந்திருப்பதைக் காண முடியும். அதிலும், வரலாற்று நிகழ்வுகளைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படங்களின் நிலைமை இன்னும் மோசம்.

காரணம், குறிப்பிட்ட திசை நோக்கியே பாத்திர வார்ப்பு, காட்சியமைப்பு, ஆக்கம் அனைத்தும் நிகழும். அதனைத் தவிர்க்க முடியாது. கைக்கொள்கிற பட்சத்தில் ‘டெம்ப்ளேட்’டுக்குள் மொத்தப் படமும் அடங்கிவிடும்.

அந்த அபாயத்தைத் தொடுகிற வாய்ப்புகள் அனேகம் இருந்தும், முடிந்தவரை இன்றைய இளம் ரசிகர்களும் ரசிக்கிற வகையில் கதை சொல்கிறது ‘திருக்குறள்’. அதனால் ‘கொஞ்சம் சினிமா.. கொஞ்சம் நாடகம்..’ என்று சொல்கிறவாறு இதன் காட்சியாக்கம் இருக்கிறது.

அந்த நாடகத்தனத்தை மட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியிருக்கிறது இளையராஜாவின் பின்னணி இசை.

சில காட்சிகளில் வசனங்களுக்கு, பாத்திரங்களின் நடிப்புக்கு முக்கியத்துவம் தந்து அவர் ‘அமைதி’ காத்திருப்பது அழகு.

’முல்லை வாசம்’, ‘கொத்து கொத்தாய் கதிர் முற்றி நிற்க’ பாடல்கள் திரையில் ‘ராஜ ராகத்தை’ வெளிப்படுத்துகின்றன.

ஒளிப்பதிவாளர் எட்வின் சகாய் அழகியலுடன் ஒவ்வொரு பிரேமையும் வடிக்க முயற்சித்திருக்கிறார்.

கலை இயக்குனர் சுரேஷ் கல்லேரி அதற்கேற்ற உள்ளடக்கத்தை பிரேமில் நிரப்ப முயற்சித்திருக்கிறார். ஆனால், அது திரும்பத் திரும்ப நம்மைத் திரையை உற்றுநோக்கச் செய்வதாக இல்லை.

வினோத் சிவகுமார் ஒவ்வொரு காட்சியையும் சரியான அளவில் நறுக்கியிருக்கிறார்.

செம்பூர் கே.ஜெயராஜின் எழுத்தாக்கத்தில் பாத்திர வார்ப்பு ‘டெம்ப்ளேட்’ ஆக இருக்கின்றன.

அதேநேரத்தில் சமகாலப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகளாக முன்வைக்கப்படும் கலப்பு மணம், சாதி மறுப்பு, சமத்துவம் பேணுதல் போன்ற விஷயங்கள் பிரதான பாத்திரங்களின் இயல்பில், சிந்தனையில், செயல்பாட்டில் பிரதிபலிக்குமாறு செய்திருக்கிறார்.

அரசியலில் மதம் நுழைவதைக் கடுமையாக எதிர்க்கிற, அறத்திற்கு எதிரான கருத்துகள் முன்வைக்கப்படுவதை விலக்குகிற தொனி வசனங்களில் உள்ளது.

அதேநேரத்தில், இன்றைய சூழலில் ஆங்கிலக் கலப்பில்லாமல் ஒருவர் மேடைப்பேச்சு போலில்லாமல் தமிழ் பேசினால் எப்படியிருக்குமோ அது போன்ற வசனத்தையே இதில் அமைத்திருக்கிறார்.

‘இப்படித்தான் இந்தப் படம் இருக்கும்’ என்ற எதிர்பார்ப்பு பெரும்பாலும் பொய்த்துப் போகாத வகையில் ‘திருக்குறள்’ உள்ளடக்கம் இருக்கிறது.

ஆனால், காட்சியாக்கம் வழியே ரசிகர்களுக்கு அயர்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் நிறையவே கவனம் கொட்டியிருக்கிறார் இயக்குனர் ஏ.ஜெ.பாலகிருஷ்ணன்.

தான் சரி என்று நினைக்கிற அரசியலை மட்டுமே முன்வைக்காமல், சமூகப் பொறுப்புணர்வுடன் ஒரு இயக்குனர் செயல்பட்டாக வேண்டுமென்கிற எண்ணத்தோடு இப்படத்தை ஆக்கியிருக்கிறார்.

போலவே, நாடக பாணியில் நடிகர் நடிகைகள் வசனம் பேசிவிடக் கூடாது என்பதில் கவனம் காட்டியிருக்கிறார்.

நாயகன் நாயகி மற்றும் சிலரைத் தவிர்த்து, இதர பாத்திரங்களில் நடித்தவர்கள் அதனைக் கணக்கில் கொள்ளாமல் விட்டிருக்கின்றனர். அந்த இடங்கள் துருத்தலாகத் தெரிகின்றன.

நாயகன் கலைச்சோழன், நாயகி தனலட்சுமி ஆகியோருக்கு இது அறிமுகப் படம். ஆனால், அது திரையில் தெரியாத வண்ணம் இருவரும் நடித்திருக்கின்றனர்.

காதல், கோபம், வருத்தம், சாந்தம் ஆகியவற்றைத் தெளிவாக வெளிக்காட்டுகிறது கலைச்சோழனின் நடிப்பு.

‘இவர் நடனத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவரோ’ என்றெண்ண வைக்கிறது தனலட்சுமியின் இருப்பு. சில காட்சிகளில் அவர் கண்கள் அதிகமாகவே பேசியிருக்கின்றன. அவற்றைக் கொஞ்சம் மட்டுப்படுத்தியிருக்கலாம்.

இவர்களோடு சுகன்யா, சந்துரு, குணா பாபு, பாடினி, சுப்பிரமணிய சிவா, ஓஏகே சுந்தர், கொட்டாச்சி, அரவிந்த் ஆண்டவர் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.

ஓவ்வொரு ஆணும் பெண்ணும் கட்டாயம் களவில் ஈடுபட்டு பின்னர் மணம் புரிய வேண்டும் என்பது போன்ற வசனங்கள், அதனை இரு வீட்டாரும் ஏற்றுக்கொள்கிற காட்சிகள் இன்றைய தலைமுறையினரிடத்தில் சில குழப்பங்களுக்கு வித்திடலாம். அவர்களது கிண்டல் கேலிகளுக்கு இலக்காகலாம்.

ஆனால், அதன் வழியே ‘பழங்காலத்தில் இம்மண்ணில் சாதிக்குழுக்களின் பிரிவினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை’ என்ற கருத்தைப் பதிவு செய்ய முயன்றிருக்கிறார் இயக்குனர்.

அது போன்ற கருத்தாக்கமே, ‘திருக்குறள்’ போன்ற ஒரு திரைப்படைப்பு உருவாக்கப்படுவதன் அடிப்படை.

அந்த திசையில் தன்னாலான பயணத்தை முன்னெடுத்திருக்கிறது படக்குழு. அதுவே இப்படத்தைக் காண்பதற்கான யுஎஸ்பி.

மேற்சொன்ன விஷயங்களே ‘திருக்குறள்’ படத்தைக் கண்டு ரசிப்பவர்கள், அதில் ஏற்க முடியாத விஷயங்களை விமர்சிப்பவர்கள் யார் என்பதை நமக்கு அடையாளம் காட்டிவிடும்..!

உதயசங்கரன் பாடகலிங்கம்