தமிழ்நாட்டில் தனியார் தொலைக்காட்சிகள் புற்றீசல் போல் விளைந்து, தினமும் மாலைப்பொழுதில் சினிமாக்களை ஒளிபரப்பியபோது, கோடம்பாக்கத்தில் சின்னதாக அதிர்வு ஏற்பட்டது.
பிரபல தொலைக்காட்சி ஒன்று, திரைப்படங்களை காட்ட தனி சேனலையே ஆரம்பித்தபோது, தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரை அரங்கு உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினருமே மிரண்டு போனார்கள். அவர்களால் தடுக்க இயலவில்லை.
அறிவியல் வளர்ச்சியின் அடுத்த கட்டம் என கடந்து போவதை தவிர அவர்களுக்கு வேறு வழி இல்லாமல் போயிற்று. இப்போது பல்வேறு தமிழ் ‘மூவி’ சேனல்களில் 24 மணி நேரமும் படங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன.
இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் ஓர் அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
என்ன தீர்மானம்?
‘நமது பக்கத்து மாநிலங்களில் உள்ள தியேட்டர்களில் 24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதி உள்ளது – அதுபோல் தமிழ்நாட்டிலும் அனுமதி வழங்கப்பட வேண்டும் திரையரங்குகளில் இத்தனை காட்சிதான் திரையிட வேண்டும் என்று கட்டுப்பாடு இல்லாமல் திரையிட அனுமதி தர வேண்டும்’ என்பதே அந்த தீர்மானம்.
தமிழகத்தில் சாத்தியமாகாத – சாத்தியமானாலும் எந்த தரப்புக்கும் துளியும் பலன் அளிக்காத ஒரு வேண்டுகோளை, தியேட்டர்காரர்கள் அரசிடம் முன் வைத்திருப்பது, சினிமா ஆர்வலர்களை புருவம் உயர வைத்துள்ளது.
இப்போதைய சூழலில் நட்சத்திர நடிகர்களின் படங்களே, அவை ‘ரிலீஸ்’ஆகும் வியாழக் கிழமை ஆரம்பித்து, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள் மட்டுமே ‘ஹவுஸ்ஃபுல்’ ஆக ஓடும் நிலை.
அதுவும் – அனைத்து பரப்புகளிலும் விமர்சனங்கள் நன்றாக இருந்தால் தான் அரங்கு நிறையும்.
நெல்லை மாவட்டம் விக்ரசிங்கபுரம் என்ற ஊரில் உள்ள தாய் சினீஸ் தியேட்டரில் சில மாதங்களுக்கு முன்னர் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் மாலை காட்சிக்கு சென்றிருந்தேன்.
அந்த ஏசி தியேட்டரில் என்னையும் சேர்த்து இரண்டு பேர் மட்டுமே படம் பார்த்தோம். இத்தனைக்கும் அந்த திரையரங்கில், இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அந்தப் படம் திரையிடப்பட்டிருந்தது.
டிக்கெட் கட்டணம் 100 ரூபாய். டிக்கெட் கொடுப்பவர் மற்றும் கிழிப்பவருக்கு, நாள் சம்பளம் தலா 200 ரூபாய் என்றால் கூட, மீதமுள்ள 200 ரூபாயை தியேட்டர் ஓனர், தனது பாக்கெட்டில் இருந்துதான் கொடுத்தாக வேண்டும். மற்றச் செலவுகள்?
நெல்லையை விடுங்கள். சென்னையில் மட்டும் என்ன வாழ்கிறதாம்?. மழைக்காலங்களிலும், பெரிய கிரிக்கெட் போட்டி நடக்கும் நாட்களிலும் சில பல தியேட்டர்கள், இரவுக் காட்சியை ரத்து செய்யும் அவல நிலையை பார்த்துகொண்டுதான் இருக்கிறோம்.
டிவி, ஓடிடி, ஸ்மார்ட்போன் என பல சாதனங்கள் இப்போது, சினிமாவை வீட்டுக்கு அழைத்து வந்து விடுகின்றன.
அதிகாலை வெளியாகும் சினிமாவை சில மணி நேரங்களில் குடும்பத்தோடு இல்லத்தில் பார்க்கும் ‘வசதி’யும் வந்தாகி விட்டது.
தியேட்டர்களில் நேரடியாக போய் சினிமா பார்ப்பது, நடுத்தர மக்கள்தான். நகரங்களில் கூட பேருந்துகள் இரவு 10 மணிக்குள் முடங்கி போய் விடுகின்றன.
இந்த லட்சணத்தில் ‘விடிய விடிய சினிமா காட்டப்போகிறோம் – அனுமதி தாருங்கள்’ என தியேட்டர் அதிபர்கள் விநோத கோரிக்கை வைப்பது ‘பைத்தியக்காரத்தனம்’ என சொல்வதில் தப்பே இல்லை.
தியேட்டர் உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில், ‘ஓடிடி தளத்தில் பெரிய நடிகர்களின் படம் 8 வாரம் கழித்தும், அதற்கு அடுத்த வரிசையில் உள்ள நடிகர்களின் படம் 6 வாரங்கள் கழித்தும் வெளியிட வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அவையெல்லாம், அரதப்பழசானவை. இவற்றுக்கு ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள் என்பதால், விளம்பர வெளிச்சத்துக்காக ‘24 மணி நேர சினிமா’ எனும் சாத்தியம் இல்லாத கோரிக்கையை முன் வைத்துள்ளார்களோ என்னவோ?
– பாப்பாங்குளம் பாரதி.