Take a fresh look at your lifestyle.

தனியாளாய் படத்தைத் தாங்கி நிற்கும் ராஷ்மிகா!

டாக்சிக் ரிலேசன்ஷிப் ஒன்றும் ஒரே நாளில் நிகழ்ந்துவிடுவதில்லை. மெது மெதுவாக ஏறும் விஷம் போல அதிலிருந்து தப்பிக்கவே முடியாதபடிக்கு சூழ்ந்துவிடும். எல்லாமே அன்பென்ற பெயரில் இருக்கும். அதனை ஆரம்பத்தில் சந்தேகம் கொள்ளவும் முடியாது.
 
நீதான் என்னோட அம்மா மாதிரி, நீதான் எனக்காக எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறாய், நீ இல்லன்னா என்னால ஒரு நாளை கூட கடத்த முடியாது.
 
நீ இருந்தாதான் சாப்பிடுவேன், நீ எனக்கு அவ்வளவு முக்கியமானவள் எனச் சொல்லிச் சொல்லி, ஒரு பெண் பிரிய வேண்டும் என்று எண்ணுவதற்கே அஞ்சுகின்ற அளவுக்கு அவளை MANIPULATE செய்துவிடுவார்கள்.
 
இருபதுகளின் தொடக்கத்தில் இருக்கும் பெண்களுக்கு இதுகுறித்த எச்சரிக்கையுணர்வு இருக்காது என்பதால் எளிதில் இம்மாதிரி சூழலுக்குள் அகப்பட்டு விடுவார்கள்.
 
ஆண்களுக்குமே தன்னை அம்மா பார்த்துக் கொள்வது போல ஒரு பெண் பார்த்துக்கொள்வதுதான் காதல் என்று அந்த வயதுகளில் தோன்றிவிடுகிறது.
 
மனைவி என்பவள் அம்மாவின் இடத்தை நிரப்புபவள், அம்மாவுக்கு ஒய்வு கொடுக்க வந்தவள்.
 
காதலியை மனைவியாக்கிக் கொண்டு அம்மாவின் ஸ்தானத்தை தரவேண்டும் அதுதான் காதலின் நிறைவு என்று கொள்கிறார்கள்.
 
பெண்ணுக்கு தனியாக எதுக்கு வெற்றி? ஆணுடைய வெற்றிக்குப் பின்னால் இருக்கும் பெண் போல என்னுடைய வெற்றிக்குப் பின்னால் நீ இரு. உன் சகல தேவைகளையும் நானே பார்த்துக்கொள்கிறேன்.
 
எனக்காக நீ எல்லா பணிவிடைகளையும் செய். நாம் ஆதர்ச தம்பதிகளாக இருப்போம் என்று நினைக்கும் பெரும்பான்மை ஆண்களின் ஒருசோறு பதமே நாயகன்.
 
உனக்குப் பணிவிடை செய்துகொண்டு உன் அம்மா போன்ற இன்னொரு அம்மா வேலைக்காரியாக என்னால் முடியாது, எனக்கு கனவுகள் உண்டு என பெண் திமிரும் போதுதான், தாம் எத்தகைய நச்சு உறவுக்குள் சிக்கி இருக்கிறோம் என்பதே புரியும்.
 
சில்லுன்னு ஒரு காதல் திரைப்படத்தில் சூர்யா பூமிகா காதல் இருக்கிறதல்லவா! அது போல ஏதோ ஒரு கல்லூரி.
 
அங்கு முதுகலைப் படிக்கவரும் மாணவ மாணவியர். அதில் நாயகனுக்கும் நாயகிக்கும் இடையில் காதல், என மிகச் சாதாரணமான மிக வழமையான ஒரு கதையாக ஆரம்பிக்கின்ற திரைப்படம், சற்று நேரத்திலேயே, இல்லை இது வழக்கமான திரைப்படம் இல்லையெனச் சொல்லிவிடுகிறது.
 
எமோசனல் பிளாக்மெயில் என்பதை காதல் என்ற பெயரில் அன்பு என்ற பெயரில் ஒரு பெண்ணின் தலையில் ஆண்கள் எவ்வாறெல்லாம் சுமத்தி தங்களுடைய பொறுப்புகளில் இருந்து விடுபட்டுக் கொள்வார்கள் என்பதைப் பட்டவர்த்தனமாகப் பேசுகிறது திரைப்படம். டாக்சிக் ரிலேஷன்ஷிப் அப்படியாகத்தான் உண்டாகிறது.
 
இன்றைக்கும் எத்தனையோ பெண்கள் “நான் இல்லன்னா அவருக்கு ஒன்றுமே ஓடாது” என்று சொல்வார்கள். அதனை ஏதோ கணவர் தம்மீது வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடாகப் பார்த்துக் கொள்வார்கள்.
 
மொத்த வீட்டு வேலைகளும் அவளின்றி நடக்காது. அவளுக்கென்று எந்தக் கனவுகளும் இருக்காது, கணவர் மற்றும் பிள்ளைகளைக் கவனித்துக் கொள்ளுதல் மட்டும்தான் அவளது ஒரே வேலையாக இருக்கும்.
 
ஆக அவள் இன்றி அவருக்கு மட்டுமல்ல வீட்டில் எதுவுமே நடக்காது என்பதுதான் உண்மை, போட்டது போட்டபடியே கிடக்கும். அவள் வந்துதான் எல்லாவற்றையும் சரிசெய்ய வேண்டியிருக்கும். அதெல்லாம் சமூகத்தில் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட டாக்சிக்.
 
திரைப்படத்தில் நிறைய காட்சிகளுக்கு வசனங்களே இல்லாமல் ஆழமாகப் புரியவைத்து விடுகிறார்கள். ராஸ்மிகா மந்தனா மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.
 
நன்றி: முகநூல் பதிவு