Take a fresh look at your lifestyle.

‘மாமன்’ படத்தில் என்னை நெகிழ வைத்த வசனம்!

நடிகர் சூரியின் மனம் திறந்த பேச்சு

432

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாமன்’ எனும் திரைப்படத்தில் சூரி, ராஜ் கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, பால சரவணன், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன், சாயா தேவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார்.

தாய் மாமன் உறவை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரித்திருக்கிறார்.

வரும் 16ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், மாரி செல்வராஜ், சிறுத்தை சிவா, பாண்டிராஜ், பொன் ராம், ரவிக்குமார், தயாரிப்பாளர்கள் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், டி. சிவா, அருண் விஷ்வா, கே. கலையரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூரி: ‘சீம ராஜா’ படத்திற்காக இயக்குநர் பொன்ராம் என்னை சிக்ஸ் பேக் வைத்துக்கொள் என்றார். இதற்காக ஆறு மாத காலம் கடினமாக உழைத்தேன். என்னுடைய மனைவியும் உதவி செய்தார்.

இந்தப் படத்தைத் திரையரங்கத்தில் பார்ப்பதற்காக ஆவலுடன் குடும்பத்துடன் சென்றேன். ஆனால் அந்தச் சிக்ஸ் பேக் திரையில் 59 வினாடிகள் தான் இடம்பெற்றது.

சிறிது ஏமாற்றமாக இருந்தாலும் அதுதான் என்னை இந்த அளவிற்கு உயர்வதற்கான நம்பிக்கையை விதைத்தது.

அன்று அது போன்றதொரு வாய்ப்பை நீங்கள் எனக்கு வழங்கவில்லை என்றால். தற்போது என் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கை இருந்திருக்காது. 

இப்படத்தின் கதையை நான் எழுதி இருந்தாலும் எனது பெயர் வரவேண்டாம் என இயக்குநரிடம் சொல்லி இருந்தேன். ஆனாலும் இப்படத்தின் கதை என எனது பெயர் இடம் பிடித்திருக்கிறது.

நான் இங்கு நிற்கிறேன் என்றால் அதற்கு என்னுடைய குடும்பம் தான் காரணம். இந்தப் படத்தில் ஒரு வசனம் இருக்கிறது ‘சாமிக்கு அடுத்து பொண்டாட்டி இல்லடா.. பொண்டாட்டி தான் சாமி’. இது என்னை மிகவும் நெகிழ வைத்தது.

அதேபோல் எனக்கு சாமிக்கு அடுத்து குடும்பம் இல்லை, குடும்பம் தான் சாமி என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். இன்று எனக்கு பல விசயங்களைக் கற்றுக் கொடுத்தது குடும்பம் தான்.

இந்தப் படத்தின் கதை உருவானதும் இங்கிருந்து தான். நான் இந்தப் படத்திற்காக கதையை யோசித்து எழுதவில்லை. எங்கள் குடும்ப உறவுகளில் நடைபெற்ற சம்பவங்களைத் தான் சொல்லி இருக்கிறேன்.

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் என்னை சந்தித்து இரண்டு கதைகளைச் சொன்னார். இரண்டும் நன்றாக இருந்தது.

இருந்தாலும் தயாரிப்பாளர் குமார், ‘உங்களிடம் இருக்கும் கதையை சொல்லுங்கள். அதை பிரசாந்த் திரைக்கதையாக மாற்றி இயக்குவார்’ என சொன்னார்.

நான் முதலில் தயங்கினேன். பிறகு இந்தப் படத்தின் கதையை அவரிடம் சொன்னேன்.

குடும்பத்தில் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, அண்ணன், தங்கை என எத்தனையோ உறவுகள் இருந்தாலும் ஸ்பெஷலான உறவு என்றால் அது தாய் மாமன் உறவு தான்.

தாய்க்குப் பிறகு தாய் ஸ்தானத்தில் இருக்கும் ஒரு உறவு என்றால் அது தாய் மாமன் தான்.‌ தாய் மாமனைப் பற்றி பல படங்கள் வெளியாகி இருக்கிறது. இதில் ஒரு சின்ன பையனுக்கும் அவனுடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவைச் சொல்லி இருக்கிறோம்.

இந்தக் கதையை இயக்குநர் வெற்றிமாறனிடம் ஒரு வருடத்திற்கு முன்பே சொல்லி இருக்கிறேன். அவரும் நன்றாக இருக்கிறது என சொன்னார்.

இந்தக் கதையைக் கேட்டதும் பிரசாந்த் பாண்டிராஜ், ‘அண்ணே இந்தக் கதை என்னுடைய குடும்பத்திலும் நடந்திருக்கிறது’ என்றார்.‌

இந்தப் படம் இன்றையக் காலகட்டத்திற்கு தேவையானதாக இருக்கிறது என சொல்லி இப்படத்தை இயக்கத் தொடங்கினார்.

இந்தப் படத்திற்கு முக்கியமான நடிகரே அந்தச் சின்னப் பையன் தான். அவர் யார்? என்று இயக்குநரிடம் கேட்டேன். அந்தக் கதாபாத்திரத்திற்காக தயாரிப்பாளர் மூன்று குழந்தை நட்சத்திரங்கள் நட்சத்திரங்களை பரிந்துரைத்தார்.

நான் ஒரு பத்து குழந்தை நட்சத்திரங்களை பரிந்துரைத்தேன். காரில் பயணிக்கும் போது எதிரில் தென்படும் குழந்தைகள் எல்லாம் போனில் போட்டோ எடுக்க தொடங்கினேன். படப்பிடிப்பும் தொடங்கியது.

அதன் பிறகு இயக்குநர் மாஸ்டர் பிரகீத் சிவனை அறிமுகப்படுத்தினார். அவர் இயக்குநரின் மகன் என்பது அதன் பிறகு தான் தெரியும். அந்தப் பையனும் மிகச் சிறப்பாக நடித்தார்.

படப்பிடிப்பு தளத்தில் அவனின் சேட்டைகளை அனைவரும் ரசித்தோம். உங்கள் குடும்பத்தை மே 16ஆம் தேதி அன்று திரையரங்கத்திற்கு சென்று பார்க்கப் போகிறீர்கள். பல குடும்பங்களுக்கு இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கும் அல்லது எதிர்காலத்தில் நடக்கும்” என்றார்.