ஏற்கனவே திரையுலகில் ஒரு துறையில் பிரபலமாக இருக்கும் ஒருவர், இன்னொரு துறையில் கால் பதிப்பதென்பது காலம் காலமாக நடந்து வருகிறது.
நடிகர்கள், நடிகைகள் சிலர் படங்களைத் தயாரிப்பது, இயக்குவது, இசையமைப்பது என்று நம்மை ஆச்சர்யப்படுத்தி இருக்கின்றனர்.
போலவே, வெற்றிகரமான இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள் என்று பல்துறை பிரபலங்கள் நடிகர்களாக மிளிர்ந்திருப்பதைக் காட்டுகிறது திரை வரலாறு. அந்த வரிசையில், தமிழ்த் திரையுலகம் கண்டிருக்கும் ஒரு திரையாளுமை விஜய் ஆண்டனி.
அதிர வைத்த தொடக்கம்!
சுக்ரன், டிஷ்யூம், நினைத்தாலே, நான் அவனில்லை, காதலில் விழுந்தேன் என்று தொடர்ச்சியாக ‘மியூசிகல் ஹிட்’ தந்து தமிழ்த் திரையுலகில் வெற்றிகரமான இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் விஜய் ஆண்டனி.
நாயகனாக நடிப்பது என்று அவர் முடிவு செய்தபிறகு, ‘நான்’ வழியே களம் இறங்கினார். தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், யமன், அண்ணாதுரை, காளி என்று அவர் நடித்த படங்களின் டைட்டிலும் சரி, அவற்றின் கதைகளும் சரி, வழக்கத்திற்கு மாறான அம்சங்களுடன் இருந்தன.
அப்படங்களில் அவரது பாத்திர வார்ப்புகள் ஒரு சராசரி கமர்ஷியல் பட நாயகனுக்கான குணாதிசயங்களில் இருந்து வேறுபட்டிருந்தன.
அதே நேரத்தில், அப்பாத்திரங்கள் ‘ஆக்ஷன் நாயகனாக’ மிளிர்வதற்கான அனேக வாய்ப்புகளுடன் வார்க்கப்பட்டிருந்தன. அதற்கேற்ற கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்தது விஜய் ஆண்டனியின் புத்திசாலித்தனம்.

போலவே, ஏற்கனவே படம் இயக்கித் தொடர்ந்து வாய்ப்பில்லாமல் இருக்கிற இயக்குநர்களுக்கு வாய்ப்பு தந்தார்.
‘கொலைகாரன்’ போன்ற ஓரிரு படங்கள் மட்டுமே அந்த வகையில் வெற்றி பெற்றன. சில படங்கள் தோல்விகளாக மாறின.
யூடியூப்பில் பாரத்த குறும்படத்தை ரசித்த காரணத்திற்காகவே,
‘ரோமியோ’ படத்தைத் தயாரித்து நடிக்கச் சம்மதித்தார் விஜய் ஆண்டனி.
அதனை வினாயக் வைத்தியநாதன் இயக்கினார். யாரும் வைக்கத் துணியாத டைட்டில்களை தன் படத்திற்கு அவர் சூட்டியிருக்கிறார்.
இப்படி விஜய் ஆண்டனியின் தேர்வுகள் வழக்கத்திற்கு மாறானதாகவே இருக்கும். மிகப்பெரிய கவனம் அதன் பின்னே இருக்கும்.
ஆனாலும், இடையில் வந்த சில படங்களின் தோல்விகள் அவருக்கான சந்தை மதிப்பை நிலைகுலையச் செய்தன. கோடியில் ஒருவன், பிச்சைக்காரன் 2 போன்றவை அதனை மாற்ற முயற்சித்தன; ஆனாலும் பெரிதாகப் பலன்கள் கிடைக்கவில்லை.
தொடர்ச்சியாக வெளிவருமா?
விஜய் ஆண்டனி, அருண் குமார் உடன் இணைந்து நடித்த ‘அக்னி சிறகுகள்’ நெடுங்காலமாகக் காத்திருப்பில் இருந்து வருகிறது. நவீன் இயக்கியிருக்கும் இப்படத்தைத் தயாரிப்பாளர் டி.சிவா தயாரித்திருக்கிறார்.
‘விரைவில் வெளியாகும்’ என்று இப்படக்குழு ஒன்றரை ஆண்டுகளாகச் சொல்லி வருகிறது. ஆனாலும் பலன் கிடைத்தபாடில்லை.
சுசீந்திரன் இயக்கிய ‘வள்ளிமயில்’ படமும் காத்திருப்பில் உள்ளது. காக்கி, மார்கன், சக்தி திருமகன் படங்களையும் இந்த வரிசையில் சேர்க்கலாம்.
சமீபத்தில் சக்தி திருமகன் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது. அனைத்து தரப்பினரையும் ஈர்க்கிற ‘ஆக்ஷன் பொலிடிகல் த்ரில்லர்’ ஆக இருக்குமென்ற எதிர்பார்ப்பினைத் தந்தது.
அவற்றையெல்லாம் முந்திக்கொண்டு வெளியாகிறது ‘மார்கன்’. படத்தொகுப்பாளர் லியோ ஜான்பால் இயக்குநராக அறிமுகம் இப்படம் வரும் ஜுன் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
பிரிகிடா, திப்ஷிதா, அர்ச்சனா, மகாநதி சங்கர், சமுத்திரக்கனி, வினோத்சாகர் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருக்கின்றனர்.
இது போக, ‘ஜென்டில்வுமன்’ தந்த ஜோஷுவா சேதுராமன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கிறார் விஜய் ஆண்டனி. ஜுன் மாதம் தொடங்குகிறது இப்படம்.
இதற்கு ‘லாயர்’ என்று பெயர் வைத்திருக்கின்றனர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தியிலும் வெளியாகிறது இப்படம்.
விஜய் ஆண்டனிக்கென்று தனிப்பட்ட முறையில் எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அவரது படைப்புகள் நன்றாக இருக்கிற பட்சத்தில் அவர்கள் கொண்டாடத் தயாராக உள்ளனர்.
சமீபகாலமாக அவர் நடத்துகிற இசை நிகழ்ச்சிகளுக்கு வருகை தருகிற கூட்டமே அதனைச் சொல்லும். அவரது கொண்டாட்டமான இசை அதன் பின்னிருக்கிறது.
போலவே, நடிப்பிலும் தனக்கென்று தனி ‘பார்முலா’ வைத்திருப்பவர் விஜய் ஆண்டனி. நல்லவனாக அல்லது கெட்டவனாக நடித்தாலும், தான் நடிக்கிற பாத்திர வார்ப்புகள் தெளிவாக இருக்குமாறு ‘க்ளீனாக’ பார்த்துக் கொள்வார்.
முக்கியமாக, போதைக்கு அடிமையாகிற மாதிரியான காட்சியமைப்புகளைப் பெரிதாக விரும்பமாட்டார்.
ஒரு காட்சியில் சிறு இடத்தில் அரசியல் கருத்து வெளிப்பட்டாலும் கூட தனது நிலைப்பாட்டை சமரசம் இன்றி முன்வைப்பார்.

‘ஒரு கமர்ஷியல் படம் இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்ற நியதிகளோடு அனைத்து தரப்பினரையும் கவர்கிற அம்சங்களைப் புகுத்துவார்.
இத்தனைக்குப் பிறகும், ஒவ்வொரு திரைப்படமும் வெவ்வேறு வகைமைகளில் உருவாகி ரசிகர்களுக்கு வேறுபட்ட அனுபவங்களைத் தர வேண்டுமென்று விரும்புவார்.
அனைத்துக்கும் மேலே, ‘நான்’ படத்தில் கிடைத்த ‘நெகட்டிவ்’ இமேஜை தலைகீழாக மாற்றி ‘சலீம்’ மில் தன்னை ‘ஆக்ஷன் நாயகனாக’ மாற்றத் துணிந்தது பல நாயகர்கள் நினைத்துப் பார்த்திராதது.
அப்படிப்பட்ட விஜய் ஆண்டனி நடித்து தொடர்ந்து பல காலம் படங்கள் காத்திருப்பில் இருப்பது வேதனையான விஷயம்.
மார்கன், லாயர் குறித்த அறிவிப்புகள் அந்தக் காத்திருப்புகளைக் கரைத்தால் நல்லது..!
– மாபா