Take a fresh look at your lifestyle.

திருப்தி தரும் கதைகள் தீர்மானிக்கும் திரை வெற்றிகள்!

இந்த ஆண்டு தொடங்கி கிட்டத்தட்ட நான்கரை மாதங்கள் முடிந்துவிட்டன. இந்தக் காலகட்டத்தில் தமிழ்த் திரையுலகம் பெற்ற வெற்றிகளின் சதவிகிதத்தை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

ஆனாலும், ‘பாக்ஸ் ஆபிஸில் கிங் யார்’ என்று நட்சத்திர நடிகர்களின் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் நிகழ்த்துகிற ‘மாயப்போர்’ முடிவுக்கு வந்தபாடில்லை.

அதிலும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகித் தோல்வி கண்ட படங்களைத் திரையில் காணும்போது நம் முன் எழுவது ஒரே கேள்விதான்.

ஒரு படத்தின் வெற்றியைத் தீர்மானிப்பது நட்சத்திரக் கலைஞர்களின் பங்களிப்பா, தெளிவான கதையம்சமா அல்லது ரசிகர்களைக் கவர்வதாகத் திட்டமிட்டுச் சேர்க்கப்படுகிற வர்த்தக ஜோடனைகளா? இன்னும் பல அம்சங்கள் இந்த வரிசையில் உண்டு.

உண்மையைச் சொன்னால், எல்லாவற்றின் கலந்து தந்தால் மட்டுமே ஒரு திரைப்படத்தின் வெற்றியைப் பெரிதாக்க முடியும்.

அதாகப்பட்டது, தீப்பற்றும் அளவுக்குப் பொறி இருந்தால் மட்டுமே ஊதிப் பூதாகரமாக்க முடியும். ஆனால், இந்த ஆண்டு வந்த திரைப்படங்களில் பல ‘நீர்த்துப் போனவைகளாக’ இருக்கின்றன.

ஆறுதலளிக்கும் வெற்றிகள்!

கடந்த ஜனவரி முதல் இப்போது வரை வெளியான தமிழ்ப் படங்களில் டிராகன் கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் வரை வசூலித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

மதகஜராஜா மற்றும் வீர தீர சூரன் ஆகியன முறையே 63 மற்றும் 62 கோடி ரூபாயை தியேட்டர் வசூலில் பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

குட் பேட் அக்லி கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

விடாமுயற்சி 138 கோடி, ரெட்ரோ இதுவரையிலும் 127 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாகச் சொல்கின்றன இணைய வழித் தகவல்கள்.

மதகஜராஜா நீண்ட நாட்கள் காத்திருப்பில் இருந்து வெளியானாலும், அதற்கான முதலீடு இன்றைய மதிப்பில் சுமார் 30 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். டிராகனும் கிட்டத்தட்ட அப்படியொரு பட்ஜெட்டில் தயாரானதாகவே சொல்லப்படுகிறது.

அதனால், அப்படங்கள் தயாரிப்புச் செலவை விட இரண்டு மடங்கு, நான்கு மடங்கு வசூல் செய்ததாகக் கருதலாம்.

அஜித், சூர்யா, விக்ரமின் படங்களை அந்த வரிசையில் சேர்க்க முடியாது. ஏனென்றால், அவற்றின் பட்ஜெட் மேற்சொன்னவற்றைவிடச் சில மடங்குகள் அதிகம்.

அதனால், அப்படங்களின் வசூல் என்பது முதலீட்டை விட ஒன்றரை மடங்காவது இருக்குமா என்பது கேள்விக்குறியே. அதனால், அவை ஆறுதல் அளிக்கிற வெற்றிகளாவே கருதப்படும்.

அதேநேரத்தில் சுமார் பட்ஜெட்டில் தயாரான குடும்பஸ்தன், டூரிஸ்ட் பேமிலி ஆகிய படங்களின் வெற்றியைச் சாதாரணமானதாகக் கருத முடியாது.

ஏனென்றால், அவை தங்களது முதலீட்டை விடப் பல மடங்கு லாபகரமானதாக மாறியிருக்கின்றன.

அதனால், சித்ரா லட்சுமணனின் யூடியூப் சேனலுக்குத் திரையுலகப் பிரமுகரான திருப்பூர் சுப்பிரமணியம் அளித்த பேட்டியில் சொன்னது போன்று இப்படங்களுக்குத்தான் வெற்றி விழாக்கள் கொண்டாடப்பட வேண்டும்.

நிலைமையோ வேறுமாதிரியாக இருக்கிறது. இந்தி, தெலுங்குத் திரையுலகப் பாணியில் இரண்டொரு நாட்களில் ‘சக்சஸ் மீட்’ வைக்கிற வழக்கம் இங்கும் சில ஆண்டுகளாக இருந்து வருகிறது.

கதையின் கனம்!

ஒரு திரைப்படத்தின் வெற்றியைத் தீர்மானிப்பது அதிலுள்ள கதையின் கனம் மட்டுமே. எளிமையான நேர்கோட்டில் சொல்ல இயலுகிற கதையைக் கையிலெடுத்துக்கொண்டு, சுவைபடச் சொல்கிற காட்சிகளின் துணையோடு திரைக்கதையில் மாயாஜாலம் செய்தாலே போதும். அதன் வெற்றியில் பாதியைத் தீர்மானித்துவிடலாம்.

கடந்த நான்கரை மாதங்களில் வெளியான தமிழ்த் திரைப்படங்களில் செறிவான திரைக்கதைகளைக் கொண்ட படைப்புகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

தியேட்டரில் அமர்ந்திருக்கையில் ஒரு காட்சி கூட போரடிக்கவில்லை எனும்படியான படங்களையே ரசிகர் கூட்டம் மொய்க்கிறது. குடும்பஸ்தன், டூரிஸ்ட் பேமிலி, டிராகன் ஆகியன அதற்கான உதாரணங்கள்.

’போரடிக்கவில்லை’ என்றவுடன், அந்தப் படங்கள் எல்லாம் செம ஜாலியான காட்சிகளை மட்டுமே கொண்டவை என்று நினைத்திடக் கூடாது. சிரிக்கவும் கொண்டாடவும் செய்கிற கதைகளே பொழுதுபோக்குக்குத் தேவை என்ற எண்ணம் இன்று மலையேறிவிட்டது.

எப்படிப்பட்ட வகைமைப் படமானாலும் சரி, திரையில் விரிகிற கதை புதியதொரு அனுபவத்தைத் தந்தாக வேண்டும் என்றே ரசிகர்கள் விரும்புகின்றனர்.

ஏற்கனவே பார்த்த, ரசித்த, நன்றாக புளித்துப் போன கதையாக இருந்தாலும் கூடத் திரைக்கதையில் சுவாரஸ்யப்படுத்த முனைந்தால் போதும் என்கின்றனர்.

மேற்சொன்ன மூன்று படங்களிலும் நகைச்சுவை, குணசித்திர பாத்திரங்களில் நடித்தவர்கள் முழுக்கப் பிரபலங்கள் அல்ல; பெரும்பாலானவர்கள் ஒரு சில திரைப்படங்களில் தலைகாட்டியவர்கள் தான். ஆனால், அவர்களது ‘பெர்பார்மன்ஸ்’ திரையில் புதிதாகத் தெரிந்தது தான் வெற்றியைத் தந்தது.

‘குடும்பஸ்தன்’ திரைப்படத்தில் நாயகன் வெற்றி பெறுவான் என்பது ரசிகர்களுக்குத் தெரிந்த விஷயம் தான்.

ஆனால், அந்த வெற்றி எத்தகையது, எப்படி வாய்த்தது என்பதைச் சொன்ன வகையில் வித்தியாசப்பட்டது அந்தப் படம்.

அதில் நாயகனாக நடித்த மணிகண்டன் மட்டுமல்லாமல் துணை பாத்திரங்களில் நடித்த குரு சோமசுந்தரம், சான்வி மேஹானா, நிவேதிதா ராஜப்பன், ஆர்.சுந்தர்ராஜன், குடசநாடு கனகம், நாயகனின் நண்பர்களாக வந்த முத்தமிழ், பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர், பாலாஜி சக்திவேல், டிஎஸ்ஆர் சீனிவாசன் என்று ஒவ்வொருவரும் நம் மனதில் பதியுமாறு காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.

டிராகன், டூரிஸ்ட் பேமிலியிலும் துணை பாத்திரங்களுக்குத் தரப்பட்ட முக்கியத்துவம் நாம் அறிந்ததே.

அப்படிப்பட்ட காட்சிகளை ரசிக்கும் அளவுக்கு, அதன் கதையில் இதர பாத்திரங்கள் தெளிவாக வடிவமைக்கப்பட்டிருந்தன.

ஆனால், பெரிய பட்ஜெட் படங்களில் துணை பாத்திரங்கள் மட்டுமல்லாமல் நாயகன், நாயகியின் குணாதிசயங்கள் கூடத் தெளிவுற வரையறுக்கப்படவில்லை.

கதாபாத்திர வடிவமைப்பு இல்லாதபோது, எங்கிருந்து காட்சியமைப்பிலும் ஆக்கத்திலும் வித்தியாசத்தைக் காட்ட முடியும்?

விக்ரம் நடிப்பில் ஓரளவுக்கு கவனிப்பைப் பெற்ற ‘வீர தீர சூரன்’ படத்திலும் கூட இந்தக் குறை இருந்தது. அத்திரைக்கதையின் முன்பகுதி, இறுதிப்பகுதி இருந்த அளவுக்கு நடுப்பகுதி செறிவானதாக வார்க்கப்படவில்லை.

‘ரசிகர்களாகப் புரிந்து கொள்ளட்டும்’ என்று கதாபாத்திரங்களின் சிறப்பம்சங்களைப் பூடகமாகச் சொல்கிறபோது காட்சிகள் ‘நறுக்கென்று’ இருந்தாக வேண்டியது கட்டாயம்.

அஜித்தின் ‘விடாமுயற்சி’யில் அஜித், த்ரிஷா சம்பந்தப்பட்ட பிளாஷ்பேக்குக்கு தந்த முக்கியத்துவத்தைத் தூக்கிக் கடாசிவிட்டு, இதர பாத்திரங்களின் விவரிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இறங்கி அடித்திருக்கலாம்.

திரைக்கதையின் முக்கியமான இடங்களில் அவர் கோட்டை விட்டது மொத்தப் படத்தையும் காலி செய்தது.

‘குட் பேட் அக்லி’யோ ஒரு பெரிய சைஸ் ‘ரீல்ஸ்’ போலவே கருதப்படுகிறது. அது சில ரசிகர்களுக்குப் பிடித்தது என்பது தனிக்கதை.

ஆனால், இன்னும் சில மாதங்கள், ஆண்டுகள் கழித்து ரசிக்கிற வகையில் அது இருக்கிறதா என்பதுவே கேள்வி. அதற்கேற்றாற் போல இருக்கிற ‘கிளாசிக்’ அந்தஸ்து கொண்ட திரைக்கதைகளையே ‘உண்மையான’ ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அஜித் நடித்த ‘வாலி’, ‘முகவரி’, ‘மங்காத்தா’ போன்றவை அத்தகைய குணங்களைக் கொண்டவை. விக்ரமின் ‘தூள்’, ‘சாமி’, ‘தில்’, ‘காதல் சடுகுடு’ போன்றவை அப்படிப்பட்ட படங்கள் தான்.

சூர்யாவின் ‘காக்க காக்க’, ‘கஜினி’, ‘வேல்’, ‘வாரணம் ஆயிரம்’, ‘சில்லுன்னு ஒரு காதல்’ போன்றவற்றை அந்த வரிசையில் சேர்க்கலாம்.

மேற்சொன்ன வரிசையை எடுத்துக்கொண்டால், அப்படங்களில் நாயகர்கள் ஏற்ற பாத்திரங்கள் மட்டுமே நம் கண்களுக்குத் தட்டுப்படும். தனிப்பட்ட அவர்களது பிம்பம் தெரியாது.

மிகச்சாதாரண மனிதர்களாகத் திரையில் தெரிய, இன்றைக்கு எந்த நாயகனும் தயாராக இல்லை. அதற்காக, முழுக்க யதார்த்தமான கதைகளில் அவர்கள் நடிக்க வேண்டும் என்றில்லை.

சமூகத்தில் ஒரு புள்ளியாக இருக்கிற ஒரு மனிதன் தன் குடும்பத்தோடு சாதாரண வாழ்க்கை வாழ்வதாகக் காட்டி, ஏதோ ஒரு புள்ளியில் அவன் ‘ஆக்‌ஷன்’ அவதாரம் எடுப்பதாகச் சொன்னால் ரசிகர்கள் ஏற்க மாட்டார்களா?

உண்மையைச் சொன்னால், அப்படி ஆக்கப்படுகிற படங்கள் தான் ‘ரியல் கமர்ஷியல் எண்டர்டெயின்மெண்ட்’டை தருவதாக இருக்கும்.

அதை விடுத்து, படம் தொடங்கியதில் இருந்து கிளைமேக்ஸ் வரை லொட்லொட்டென்று எதிரே வருபவர்களை நாயகன் அடித்துக்கொண்டே இருந்தால், ரசிகர்கள் தியேட்டர் இருக்கையிலேயே மூர்ச்சையாகத்தான் செய்வார்கள்.

அதனை விடுத்து ரசிகர்களைத் திருப்திப்படுத்துகிற கதைகளைத் தரத் தொடங்கிவிட்டால், அவை அப்படங்களின் வெற்றியைத் தீர்மானிக்கிற காரணிகளாக மாறிவிடும். ஆனால், அப்படியொரு நிலை வாய்க்குமா என்றளவிலேயே இருக்கிறது கடந்த காலம்.

‘தொடரும்’ ஒரு உதாரணம்!

தமிழ்த் திரையுலகில்தான் இந்த நிலைமை என்றில்லை. இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று எங்கும் இதே நிலைமைதான்.

இந்தியைப் பொறுத்தவரை ‘சாவா’ மட்டுமே சுமார் 750 கோடி ரூபாய் வரை வசூலித்திருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பைத் தந்த சல்மான்கானின் ‘சிக்கந்தர்’, ‘அக்‌ஷய்குமாரின் ‘ஸ்கை போர்ஸ்’ போன்றவை பெரிய வெற்றியைப் பெறவில்லை.

அதேநேரத்தில் கேசரி சேஃப்டர் 2, தி டிப்ளமேட் ஆகியன கவனிப்பைப் பெற்றிருக்கின்றன.

தெலுங்கிலும் வெங்கடேஷ், ஐஸ்வர்யா, மீனாட்சி நடித்த ‘சங்கராந்திக்கு வஸ்துனாம்’ மட்டுமே ‘ப்ளாக்பஸ்டர்’ திரைப்படம்.

நானியின் ‘ஹிட் தி தேர்டு கேஸ்’ வெற்றிப்படம் என்ற நிலை நோக்கி நகர்ந்து வருகிறது. மற்றபடி கேம் சேஞ்சர், டாக்கு மஹாராஜ், தண்டல், அர்ஜுன் சன் ஆஃப் வைஜெயந்தி போன்றவை சரிவைச் சந்தித்திருக்கின்றன.

மாறாக, குறைந்த பட்ஜெட்டில் சுவாரஸ்யமான கதை சொல்லலைக் கொண்ட கோர்ட், மேட் ஸ்கொயர் ஆகியன முதலீட்டை விட நான்கைந்து மடங்கு வெற்றியைப் பெற்றிருக்கின்றன.

மலையாளத்தில் எடுத்துக்கொண்டால் ரேகாசித்ரம், ஆபிசர் ஆன் டியூட்டி, மரணமாஸ், பொன்மன் மற்றும் ஆலப்புழா ஜிம்கானா ஆகியன வியக்கத்தக்க திரையனுபவத்தையும் வசூலையும் தந்தன.

மோகன்லாலில் எல்2: எம்புரான் எந்தளவுக்குப் பெரும்பொருட்செலவில் தயாராகி வெற்றி பெற்றதாகச் சொல்லப்பட்டதோ, அதனை மிகச்சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ‘துடரும்’ திரைப்படம் ‘அசால்டாக’ முறியடித்து வருகிறது.

மலையாளத்தோடு தெலுங்கிலும் வெளியான இப்படம், இரண்டு வாரங்கள் கழித்து ‘தொடரும்’ என்ற பெயரில் தமிழ்நாட்டிலும் வெளியாகி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறது.

இந்தப் படத்தில் பதின்ம வயதுடைய இரண்டு குழந்தைகளின் தந்தையாக வருகிறார் மோகன்லால். நாயக அறிமுகம் தொடங்கி முக்கால்வாசி படம் வரை, அவருக்கான பில்டப் ஷாட்கள் எதுவும் இல்லை.

ஆனால் அந்தப் படத்திலும் அவர் முஷ்டியை முறுக்குகிற சண்டைக்காட்சி ஒன்று இருக்கிறது. அது படத்தின் இறுதிக்கட்டத்தில் வருகிறது.

அதிலொரு இடத்தில், உடைந்த ஜன்னல் வழியே ஒரு கையை ஊன்றி மோகன்லால் எகிறிக் குதித்து வருவதாக ஒரு ‘ஷாட்’ உண்டு. அது செமத்தியாக ‘ஹீரோயிசம்’ காட்டுகிற இடம்.

அந்த ஷாட்டுக்கு தியேட்டரே கைத்தட்டல்களால் நிறைகிறது. மோகன்லால் நடித்த குறிப்பிட்ட சில படங்களில் வருகிற ஷாட் தான் இதிலும் பிரதியெடுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், கதையின் ஒரு பகுதியாக வருவதால் அந்த ‘ரெஃபரன்ஸ்’ பாராட்டைப் பெற்றிருக்கிறது.

அதற்காக, அது போன்ற ஷாட்களை படம் முழுக்க அதன் இயக்குநர் தருண்மூர்த்தி நிறைக்கவில்லை. தமிழ்ப் பட இயக்குநர்கள் இதனை ஒரு உதாரணமாகக் கொள்ள வேண்டும்.

‘தியேட்டர் மொமண்ட்’ என்று சொல்லப்படுகிற அந்த இடத்தில் ரசிகனை உணர்ச்சிவசப்பட வைக்க, முன்பாதி முழுக்க நாயகனை மிகச்சாதாரணமானவனாகத் திரையில் காட்டியிருக்கிறார் தருண்மூர்த்தி.

படத்தில் ஒரு காட்சி, ஷாட் கூட கதைக்குத் தேவையில்லாதது என்று சொல்லும்படியாகக் காட்சியமைப்பைச் செதுக்கியிருக்கிறார். படத்தில் வரும் சிறு பாத்திரம் கூட நம் மனதில் பதியும்படி ‘டீட்டெய்லிங்’ செய்திருக்கிறார்.

‘இதுதான் அடுத்து நிகழும்’ என்று கணிக்கிற காட்சிகளிலும் கூட, சுவாரஸ்யமூட்டுகிற சில விஷயங்களைச் சேர்த்திருக்கிறார்.

மிக முக்கியமாக, வில்லனாக வந்த பிரகாஷ் வர்மா மற்றும் பினு பாப்புவுக்கு மோகன்லால், ஷோபனாவை விடவும் திரையில் ஒருபடி அதிக முக்கியத்துவம் தந்திருக்கிறார்.

அது போன்ற பல காரணங்கள் அதன் வெற்றியில் அடங்கியிருக்கின்றன. நிச்சயமாக, அதிலும் குறைகள் இருக்கும். அவற்றின் சதவிகிதம் மிகக்குறைவாக இருக்கும்.

தமிழில் தயாராகிற பெரிய பட்ஜெட் படங்களில் குறைகளின் சதவிகிதம் அதிகமாக இருக்கின்றன; அதையும் மீறி அப்படங்களுக்கு ரசிகர்கள் கூட்டமாகச் செல்வது ஏன்?

‘இந்த முறையாவது நமது நட்சத்திரம் திருப்தி தருகிற திரையனுபவத்தைத் தந்துவிட மாட்டாரா’ என்கிற நப்பாசைதான்.

ஆனால், ’ரசிகர்கள் இதைத்தான் எதிர்பார்க்கின்றனர்’ என்கிற வார்த்தைகளோடு ‘ஈயம் பித்தளைக்கு பேரீச்சம்பழம்’ எனும் வகையறா கதைகள், காட்சிகளோடு உருவாகிற அப்படங்களைப் பார்க்கிறபோது, அந்த நட்சத்திரங்களின் ‘உண்மையான’ ரசிகர்கள் அடைகிற மன வேதனையை அளவிட முடியாது.

நட்சத்திர நடிகர்கள், இயக்குநர்கள் தங்களது ரசிகர்களுக்கு ஏமாற்றம் தந்த படங்களில், தங்களுக்குப் பிடித்தமான திரைக்கலைஞர்களின் பங்களிப்பு இருந்திருந்தால் தாங்கள் தியேட்டரில் பெறுகிற அனுபவம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று ஒரு நொடி மனக்கண்ணில் யோசித்துப் பார்த்தால் போதும்.

‘கனமான’ கதையம்சத்தைக் கொண்ட படங்களில் பங்கேற்கிற கலைஞர்களில் தாமும் ஒருவராக இருப்பது என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள். அப்படி யோசிக்க அவர்கள் தயாரா?

-உதயசங்கரன் பாடகலிங்கம்