Take a fresh look at your lifestyle.

டி.எம்.எஸ் பாடிய முதல் பாடலிலேயே உருகிய சிவாஜி!

சிவாஜி நடித்த தூக்குத்தூக்கி (1954) படத்தில் எட்டு பாடல்கள். அப்போது முன்னணிப் பாடகராக இருந்த திருச்சி லோகநாதனைப் பாட வைக்க முடிவு செய்யப்பட்டது.

ஒரு பாடலுக்கு ஐந்நூறு ரூபாய், எட்டுப் பாடல்களுக்கு நான்காயிரம் ரூபாய் சம்பளம் கேட்டார் லோகநாதன்.

தயாரிப்பு நிறுவனமான அருணா பிலிம்ஸ் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. உடனே இதற்கு லோகநாதனே வழி சொன்னார்.

மதுரையிலிருந்து செளந்தரராஜன் என்றொரு புதுப் பாடகர் வந்துள்ளார். அவரிடம் வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள் என்று டி.எம்.எஸ்.ஸுக்கு அற்புதமான வழியை உருவாக்கித் தந்தார்.

கிருஷ்ண விஜயம் படத்தில் நான்கு பாடல்களையும் அருமையாகப் பாடியிருந்தார் என்று சான்றிதழ் வழங்கினார் இசையமைப்பாளர் ஜி. ராமநாதன்.

இதையடுத்து, தூக்குத்தூக்கியில் எட்டுப் பாடல்களையும் பாட டி.எம்.எஸ்.ஸுக்கு இரண்டாயிரம் சம்பளம் தரப்பட்டது.

பின்னணிப் பாடகராக மாறுவதற்கு முன்பு நிறைய சின்னச் சின்ன வேலைகளைச் செய்தவர் டி.எம்.எஸ்.

அதனால் இந்த வாய்ப்பை நன்குப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று எண்ணினார்.

ஆனால், படக் கதாநாயகன் சிவாஜி ஒரு தடை போட்டார். புதிய பாடகர் வேண்டாம். பராசக்தியில் பாடிய சி.எஸ்.ஜெயராமன் தான் பாடவேண்டும் என்று கூறிவிட்டார்.

பராசக்திக்குப் பிறகு மனோகரா, அந்த நாள் படங்களில் நடித்து தனக்கென ஓர் ஆளுமையை உருவாக்கியிருந்தார் சிவாஜி. நல்லவேளையாக, இசையமைப்பாளர் ராமநாதன், டி.எம்.எஸ். பக்கம் நின்றார்.

நம் படத்தில் உள்ள நாட்டுப்புறப் பாடல்களுக்கு இவருடைய குரல் பொருத்தமாக இருக்கும் என்றார். இந்தக் குழப்பத்துக்கு டி.எம்.எஸ்ஸே ஒரு வழி சொன்னார்.

நான் மூன்று பாடல்களைப் பாடுகிறேன். பிடிக்கவில்லையென்றால் விலகிக்கொள்கிறேன் என்றார். வைராக்கியம். சரி என்றார் சிவாஜி.

சிவாஜியின் சம்மதத்துக்காக முதலில் மூன்று பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டன.

மூன்றையும் கேட்ட சிவாஜி, டி.எம்.எஸ். இந்தளவுக்குப் பாடுவார் என எதிர்பார்க்கவில்லை. உடனே டிக் அடித்தார். அன்று ஆரம்பித்தது சிவாஜி – டி.எம்.எஸ். கூட்டணி.

  • நன்றி : முகநூல் பதிவு