Take a fresh look at your lifestyle.

மலையாள சினிமாவில் அடுத்த தலைமுறை ‘நாயகர்கள்’!

திரையுலகைப் பொறுத்தவரை நாயகர்கள், நாயகிகளின் அறிமுகம் அவ்வப்போது நிகழ்ந்தவாறு இருக்கும். சிலரது அறிமுகங்கள் கவனிக்கப்படும்; வரவேற்பு கிடைக்கும். சிலரது அறிமுகமே அமர்க்களமாக, கொண்டாட்டத்திற்கு உரியதாக அமையும். மிகச்சிலர் சாதாரணமாகத் தலைகாட்டி, மெல்ல நிமிர்ந்து, தங்களுக்கான இடத்தை நோக்கி நகர்வார்கள். மேற்சொன்னவற்றில் எந்த வகையில் அறிமுகமானாலும், ஐந்தாறு ஆண்டுகள் கழித்து அவர்களது இருப்பு வேறு மாதிரியாக இருந்துவிட்டால் அதைவிடச் சிறப்பு வேறொன்றுமில்லை.

அவ்வாறு நோக்கினால், மலையாளத் திரையுலகில் நம்பிக்கையளிக்கும் விதமாக இளம் நாயகர்கள் படையே தற்போது திரண்டு நிற்கிறது.

இளந்தாரி பாத்திரங்கள்!

மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி, ஜெயராம் தலைமுறை தொண்ணூறுகளில் கோலோச்சியது என்றால், 2000-க்கு பிறகு திலீப், குஞ்சாக்கோ போபன், ஜெயசூர்யாவின் வளர்ச்சி இருந்தது. பிறகு பிருத்விராஜ், ஆசிஃப் அலி போன்றோரின் வருகை அமைந்தது.

அதனைத் தொடர்ந்தாற்போல பகத் பாசில், நிவின் பாலி, துல்கர் சல்மான், டொவினோ தாமஸ், சன்னி வெய்ன், காளிதாஸ் ஜெயராம், ஆண்டனி வர்கீஸ் பெப், உன்னி முகுந்தன், ஷேன் நிகம், பிரனவ் மோகன்லால், கோகுல் சுரேஷ், ரோஷன் மேத்யூ என்று தொடர்ந்து பலரது அறிமுகங்கள் நிகழ்ந்தன.

இவர்கள் அனைவருமே ஓரிரு ஆண்டுகள் முன்பின்னாகத் திரையில் தலைகாட்டியவர்கள்.

இது போக பசில் ஜோசப், சௌபின் ஷாஹிர், அர்ஜுன் அசோகன், திலேஷ் போத்தன், செம்பன் வினோத் ஜோஸ், பாலு வர்கீஸ், தியான் சீனிவாசன், வினீத் சீனிவாசன், சஜின் கோபு, ஜோஜு ஜார்ஜ், சூரஜ் வெஞ்சாரமூடு, ஷரப் யூ தீன் என்று குணசித்திர பாத்திரங்களில் தோன்றி நாயக அந்தஸ்தை பெற்றவர்களும் தனிப்பட்டியலை உருவாக்கியிருக்கின்றனர்.

இந்த பெருங்கூட்டத்திற்கு நடுவே, ‘நாங்கள்லாம் இளந்தாரிப் பசங்க’ என்பதாகச் சிலர் திரையில் முகம் காட்டி வருகின்றனர்.

’ஸ்ட்ரெயிட்டா ஹீரோதான்’ என்றில்லாமல், தங்களது பாத்திரத்தின் இயல்பையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்து திரையில் தோன்றத் தயாராக இருப்பது இவர்களது பலம்.

இமேஜ் குறித்த பயம் ஏதுமின்றி, திரையில் தங்களுக்குக் கிடைக்கிற வரவேற்பை முன்னுணர்ந்து செயலாற்றுகிற இந்த குணம் வருங்காலத்திலும் தொடர வேண்டும் என்று சொல்கிற அளவுக்கு இவர்களில் சிலரது படத்தேர்வுகள் அமைந்துள்ளன.

மேத்யூ தாமஸ்

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் பவிஷ் உடன் இன்னொரு நாயகனாக நடித்தவர். அதற்கு முன்னரே ‘லியோ’வில் விஜய்யின் மகனாக நடித்திருக்கிறார். வயது 22 தான் ஆகிறது. ஆனால், அதற்குள் இரண்டு டஜன் படங்கள் நடித்துவிட்டார்.

‘கும்பளாங்கி நைட்ஸ்’ இவரது அறிமுகம். அதன்பிறகு ‘தண்ணீர் மாதன் தினங்கள்’, ’ஜோ அண்ட் ஜோ’, ‘கிறீஸ்டி’, ‘நெய்மார்’, ’ஜர்னி ஆஃப் லவ் 18+’, ‘ப்ரோமான்ஸ்’, ’லவ்லி’ என்று ‘சோலோ’ ஹீரோவாக பெயர் சொல்லும் படங்களில் நடித்திருக்கிறார்.

‘இன்னும் ஐந்தாண்டுகள் கழித்து ஹீரோவாக வெரைட்டியான படங்கள் தருவாரா’ என்று சந்தேகம் எழுப்பும் அளவுக்கு முகவெட்டு, தோற்றம் இருந்தாலும், தனது வலுவான நடிப்புத் திறமையால் அதற்குத் தக்க பதிலைத் தருவார் என்ற நம்பிக்கையையும் உருவாக்கி வைத்திருப்பது இவரது சிறப்பு.

நஸ்லன் கபூர்

‘தண்ணீர் மாதன் தினங்கள்’ படத்தில் அறிமுகமான இவர் தொடர்ந்து சிறு பாத்திரங்களில் நிறைய படங்களில் தோன்றினார். ’நெய்மர்’. ‘ஜார்னி ஆஃப் லவ் 18+’ ஆகியன இவரது இருப்பை அடிக்கோடிட்டுக் காட்ட, ‘பிரேமலு’ திரைப்படம் இவர் ஒரு ‘கமர்ஷியல் ஹீரோ’ என்ற அந்தஸ்தை கொடுத்தது. அதற்கடுத்து வந்த ‘ஐ யாம் காதலன்’ அதனை உறுதிப்படுத்தியது.

‘ஆலப்புழா ஜிம்கானா’வில் இளைய தலைமுறையினரின் எண்ணிக்கை அதிகம். என்றபோதும், அதில் தனித்து தெரிந்ததே நஸ்லனின் சிறப்பு.

சங்கீத் பிரதாப்

அடிப்படையில் இவர் ஒரு படத்தொகுப்பாளர்.

உதவி படத்தொகுப்பாளராக இருந்தபோதே ‘ஹெலன்’ படத்தில் தலைகாட்டியிருக்கிறார். பிறகு ‘ஹ்ருதயம்’, பத்ரோஸிண்டே படப்புகள்’ படங்களில் நடித்திருக்கிறார்.

இவரை மிகப்பெரிய அளவில் கவனிக்க வைத்த படம் ‘பிரேமலு’. அதில் ஹீரோ நஸ்லெனுக்கு இணையாக இவரது பாத்திர வார்ப்பு இருந்தது. இப்போது மோகன்லாலுடன் ‘ஹ்ருதயபூர்வம்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

தொடர்ந்து படத்தொகுப்பாளராகவும் குணசித்திர நடிகராகவும் பங்களிப்பைத் தொடர்ந்து வருகிறார்.

லுக்மான் அவரன்

சின்னச் சின்ன பாத்திரங்களில் தலைகாட்டி, மெல்ல வளர்ந்து, குறிப்பிட்ட படங்களில் தனது முத்திரையைப் பதித்து, நாயக அந்தஸ்து நோக்கி நகர்கிற ரகத்தில் இடம்பெறுபவர் லுக்மென் ஆவரன்.

2013இல் திரைப்படங்களில் தலைகாட்டத் தொடங்கியபோதும் ’கோதா’, ‘சூடானி ஃப்ரம் நைஜீரியா’, ‘உண்டா’, ’ஃபாரன்ஸிக்’ ஆகியவற்றில் இவரது நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது. பிறகு ‘ஆபரேஷன் ஜாவா’வில் நாயகர்களில் ஒருவராகத் தோன்றினார்.

பிறகு ‘சவுதி வெள்ளக்கா’, ‘தள்ளுமாலா’, ‘ஜாக்சன் பஜார் யூத்’ போன்ற படங்களில் தன்னிருப்பை நிரூபித்தவர் இவர். இப்போது ‘ஆலப்புழா ஜிம்கானா’வில் பயிற்சியாளர் பாத்திரத்தில் தனது நடிப்புத் திறனை வெளிக்காட்டியிருக்கிறார்.

கணபதி

2007-ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக மலையாளத் திரையுலகில் அறிமுகம் ஆனவர். அப்போது தொடங்கி இப்போது வரை தொடர்ந்து சிற்சில பாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

’ஜான் இ மேன்’, ‘கேஷு இ வீடிண்ட நாதன்’, ‘கோல்டு’, ’மஞ்ஞும்மள் பாய்ஸ்’, ‘மந்தாகினி’ போன்ற படங்களில் தனது இமேஜ் குறித்த பயம் இன்றி விதவிதமான பாத்திரங்களில் தோன்றியவர். ‘ஆலப்புழா ஜிம்ஹானா’வில் அமைதியாக ‘ஹீரோயிசத்தை’ வெளிப்படுத்துகிற வகையில் நடித்திருந்தார்.

சந்தீப் பிரதீப்

நெடுநெடு உயரம், சுருள் முடி, சிவப்பு நிறம் என்று மலையாளத் திரையுலகில் இதுவரை கோலோச்சிய ஆக்‌ஷன் ஹீரோக்களை பிரதியெடுத்தாற் போல இருப்பவர் சந்தீப் பிரதீப்.

’பதினெட்டாம் படி’யில் அறிமுகமாகி ‘அந்தாக்‌ஷரி’, ‘பேலிமி’, ‘ஆலப்புழா ஜிம்கானா’, ‘படக்கலம்’ என்று சில படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். ஆனால், அதற்குள் இவருக்கு பெரும் ரசிகர் கூட்டம் உருவாகியிருக்கிறது.

சரியான படங்கள் அமைந்தால், மலையாளத் திரையுலகின் முன்னணி நாயகர்களில் ஒருவராக வாய்ப்புகள் அனேகம். அதற்கேற்ற உடல்மொழி இவரது திரையிருப்பில் தெரிகிறது.

தாமஸ் மேத்யூ

’துடரும்’ படத்தில் மோகன்லாலின் மகனாக வருபவர். அதைவிட, ‘நாராயணீண்ட மூணாம் மக்கள்’ படத்தில் இவரது நடிப்பு அபாரமாக வெளிப்பட்டிருக்கும். வெவ்வேறுவிதமான பாத்திரங்களில் இவரை இடம்பெற வைக்க முடியும் என்ற நம்பிக்கையைத் தருவதாக அந்த நடிப்பு இருக்கும்.

மிதுன் ஜெய்சங்கர்

‘ஆவேஷம்’ படத்தில் ஹிப்ஸ்டர், ரோஷன் ஷாநவாஸ், மிதுன் ஜெய்சங்கர் ஆகிய மூவரும் தலைகாட்டியிருந்தனர். இதில் மிதுன் மட்டும் தமிழில் ‘டூரிஸ்ட் பேமிலி’யில் நடித்தார். நல்ல பெயரை அள்ளினார். தொடர்ந்து மலையாளத்திலும் தமிழிலும் இவர் நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பார் என்று நம்பலாம்.

இந்த வரிசையைத் தாண்டி இன்னும் சிலர் வேறு படங்களில் அறிமுகம் ஆகியிருக்கலாம். வருங்காலத்தில் வெளியாகும் படங்களில் அவர்கள் ’அமர்க்களம்’ செய்யலாம். இவர்கள் அனைவருமே கடந்த ஐந்தாண்டுகளில் நடிக்க வந்தவர்கள்.

இப்படித் தொடர்ந்தாற்போல இப்படியொரு பட்டியல் தயாராகிக்கொண்டே இருப்பதால் தான், மலையாளத் திரையுலகில் ஒரு படத்தில் நாயகராக வருபவர் இன்னொரு படத்தில் சிறு பாத்திரத்தில் தோன்றி மறைகிறார். அது போன்றதொரு பட்டியல் தமிழ் திரையுலகிலும் தயாரானால், நாமும் ‘இமேஜ் வளையத்திற்குள்’ சிக்காத கதைகளைத் திரையில் காணலாம்..!

மாபா