Take a fresh look at your lifestyle.

மக்கள் திலகமும், மருதகாசியும்…!

“எம்.ஜி.ஆர். நடித்த ‘நல்லவன் வாழ்வான்’ என்ற படத்தில் வாலியின் பாடல் இடம் பெறக் காரணமே கவிஞர் மருதகாசி தான்.

எம்.ஜி.ஆர். படங்களில் வாலிக்கு அதுதான் முதல் படம். சில நண்பர்களுடன் சேர்ந்து ‘அல்லி பெற்ற பிள்ளை’ என்ற படத்தை மருதகாசி தயாரித்தார்.

அதற்காக சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்த தன் வீட்டை அடமானமாக வைத்தார். படம் தோல்வி.

அதனால் அந்த வீடு ஏலத்திற்கு வந்தது. போனால் போகட்டும் என்று கவலைப்படாமல் ஊருக்குப் போய்விட்டார்.

விபரம் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர். அந்த வீடு ஏலத்திற்குப் போகாமல் இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்து வீட்டை மீட்டுப் பத்திரத்தை வாங்கி வைத்துக் கொண்டார்.

மருதகாசி மீண்டும் சென்னைக்கு வந்ததும் அவரை அழைத்து, “படம் எடுக்கிற வேலை உங்களுக்கு ஏன்?” என்று சொல்லிவிட்டு, பத்திரத்தை மருதகாசியிடம் கொடுத்து, “இதற்காக நீங்கள் எனக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.

பாடல் எழுதுவதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்” என்று சொல்லியிருக்கிறார்.

அதற்கு மருதகாசி “அண்ணே, இந்தப் படத்தின் மூலம் பல பாடங்களைக் கற்றுக் கொண்டேன். நம்பியவர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள்.

அதனால் வீடு போனால் போகட்டும் என்று தான் ஊருக்குச் சென்றுவிட்டேன். நீங்களும் மக்களுக்குப் பாடல் மூலம் படிப்பினை சொல்வீர்கள்.

இந்தப் படத்தில் நான் பெற்ற படிப்பினைக்காக இந்த வீடு தங்களிடமே தங்களுடையதாக இருக்கட்டும்” என்று கொடுத்த பத்திரத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டார்.

எம்.ஜி.ஆரைப் போன்றவர்களையும், மருதகாசி போன்ற பெருந்தன்மையுள்ள கவிஞர்களையும் இன்று பார்க்க முடியுமா?”

“எம்.ஜி.ஆரைக் கவர்ந்த மருதகாசி” என்ற தலைப்பில் கவிஞர் முத்துலிங்கம் எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.

நன்றி : தினத்தந்தி நாளிதழ்