Take a fresh look at your lifestyle.

கார்த்திக் – ரேவதிக்கு மைல்கல்லாக அமைந்த ‘கிழக்கு வாசல்’!

நடிகர் கார்த்திக் சினிமா பயணத்தில் ‘கிழக்கு வாசல்’ திரைப்படம் மிக முக்கிய பங்கை வகித்து வருகிறது.
 
இளையராஜா இசை கொடிகட்டிக் பறந்த காலம் அது. குறிப்பாக இயக்குநர் ஆர்.வி.உதயக்குமாருக்கென்றால் சொல்லவே தேவை இல்லை. இன்றுவரை யாருமே அசைக்க முடியாத பாடல்கள் இதில் அமைந்துள்ளது.
 
ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் உருவான ‘கிழக்கு வாசல்’ திரைப்படம், 1990-ல் வெளியானது. இதில் கார்த்திக், ரேவதி, குஷ்பு, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
 
மனோரமா, ஜனகராஜ், சின்னி ஜெயந்த், விஜயகுமார், சண்முக சுந்தரம், தியாகு, சுலக்சனா, எஸ்.என் பார்வதி, கல்லாப்பெட்டி சிங்காரம் என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
 
தாலாட்டிய எஸ்.பி.பி.
 
இளையராஜா இசையில் படத்தின் பெரும்பாலான பாடல்களைத் தயாரிப்பாளரும் இயக்குநருமான ஆர்.வி. உதயகுமாரே எழுதி இருந்தார்.
 
இந்தப் படத்தில் இடம்பெற்ற “அட வீட்டுக்கு வீட்டுக்கு”, “பச்சமலை பூவு”, “தலுக்கி தலுக்கி”, “பாடிப்பறந்த கிளி”, “வந்ததே குங்குமம்” என 5 பாடல்களுமே பயங்கர ஹிட்.
 
இதில் “பச்சமலை பூவு” பாடல் சிறந்த தாலாட்டு பாடலாக உருவாக்கப்பட்டிருந்தது. அதிலும் எஸ்.பி.பியின் குரலில் இன்றும் மனதை மயக்கும் பாடல்தான் அது.
 
கதை
 
படத்தில், கார்த்திக் பொன்னுரங்கம் என்ற பெயரில் மினி ட்ரூப் வைத்து சிறிய கலை நிகழ்ச்சிகைளை நடத்தி வருகிறார். இவர் விஜயகுமாரிடம் கூலி வேலை செய்து வந்தார்.
 
இந்நிலையில் அதன் பக்கத்து கிராமத்தில் வசிக்கும் செல்வந்தரான வள்ளியூரான் விஜயகுமாரின் மைத்துனராக இருப்பார்.
 
இதற்கிடையில் விஜயகுமார் ஏற்கனவே தாயம்மாளின் வளர்ப்பு தாயுடன் உறவில் இருந்திருப்பார். இதைத் தொடர்ந்து அவர் இறந்த பிறகு விஜயகுமார் தாயம்மாளான ரேவதியை அடைய விரும்புவார்.
 
இந்நிலையில் வள்ளியூரானின் மகள் செல்வி பொன்னுரங்கத்தை விரும்ப ஆரம்பித்து காதலைச் சொல்கிறாள்.
 
செல்வியை பெண் கேட்டு தனது தாயை அனுப்புகிறார் பொன்னுரங்கம். அங்கு அவர் அவமானபடுத்தப்பட்ட நிலையில் அந்த வருத்தத்தில் உயிரிழக்கிறார்.
 
இந்த நிலையில் செல்வியை விஜயகுமார் மகன் தியாகுவிற்கு திருமணம் நடக்க ஏற்பாடு செய்யும் வள்ளியூரான், பின்னர் மாப்பிள்ளை தியாகுவின் நடத்தை குறித்து அறிந்து திருமணத்தை நிறுத்துகிறார்.
 
இதையடுத்து நடக்கும் பிரச்சனைகளைத் தாண்டி படத்தின் முடிவு என்ன என்பதே கதை.
 
ஆதிக்க சாதியினரின் பெண்கள் மீதான சுரண்டல், ஆண்களின் குரூர எண்ணங்களையும் நிறைவேறாத காதலின் ஏக்கம், தன் சுயமரியாதையையும் கற்பையும் பாதுகாத்துக் கொள்ள ரேவதி நடத்தும் அமைதியான போராட்டம் என படம் முழுவதும் ரசிகர்களின் வெகுவான வரவேற்பைப் பெற்றது.
 
இந்தப் பாடம் சென்னையில் மட்டும் 150 நாட்களுக்கும் மேலாக ஓடியது. மேலும் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது.
 
பாடல்கள் எல்லாமே ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் எஸ்.பி.பியின் குரல் படத்தின் வெற்றிக்குப் பெரும் தூணாக இருந்தது என்பதில் சந்தேகமே இல்லை.
 
நன்றி – இந்துஸ்தான் டைம்ஸ் இதழ்