சாந்தகுணமுள்ள, அப்பாவியான, எளிதில் ஏமாற்றப்படும் ஏமாளியாக, கூச்ச சுபாவமுள்ள உமாநாத் என்ற மனிதன், (சிவாஜி கணேசன்) தன் மனைவியின் அறிவுரையின்பேரில் மாறுகிறார் என்பதே ‘ஹிட்லர் உமாநாத்’ படத்தின் கதை.
கணவருக்கு தைரியமூட்டும் மனைவி லஷ்மி, “நீங்க ஆயிரம் ஆயிராமாய் சம்பாதிச்சு கொடுப்பதைவிட உங்களுக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் வருவது தான் எனக்கு சந்தோஷம்” என்கிறாள். இது உமாநாத் மனதில் மாற்றதை ஏற்படுத்துகிறது.
உமாநாத் மீசை அடோல்ஃப் ஹிட்லரின் மீசையைப் போலவே இருப்பதால் அந்த ஜெர்மன் அதிபரை பற்றியும் எடுத்துரைக்கிறாள் மனைவி லட்சுமி (கே.ஆர்.விஜயா).
ஹிட்லரின் ஒப்பீடுகளைப் பற்றி மனைவி சொன்ன பிறகு, ஹிட்லரின் தலைமை மற்றும் ஆதிக்க உணர்வால் ஈர்க்கப்பட்டு, ஹிட்லரின் அணுகுமுறையை தன் வாழ்க்கையில் கடைபிடிக்கிறார்.
வேலை பார்க்கும் அலுவலகத்தில் உதவி மேலாளராக உயர்வு பெற்று நிறுவனத்தின் தலைவராக உருவெடுக்கிறார்.
உமாநாத் தூக்கத்தை இழந்து தனது மனைவி மற்றும் மகளையும் மறந்து தொழிற்சாலையையும் வேலை செய்யும் உழைப்பாளர்கள் நலனுக்காகவும் நேரத்தை செலவு செய்கிறார். இதனால் அவர் குடும்பத்தில் குழப்பம் மேலிடுகிறது.
தன் தந்தை மீது வெறுப்பில் இருக்கும் மகள் (சாதனா) உமாநாத்தை தனது எதிரியாகக் கருதும் ஒரு இளைஞனை (சதீஷ்) திருமணம் செய்து கொள்கிறாள். ஒரு பெரிய நிறுவனத்தின் தலைவராக தன்னை பற்றி பெருமைப்படும் உமாநாத், இதனால் கலக்கமடைகிறார்.
இறுதியில் ஹிட்லர் செய்த உண்மையான கொடூரங்களைக் கண்டறிந்ததும், அவரைப் பின்பற்றியதற்காக மனம் வருந்துகிறார். ஆனாலும் கப்பலே கவிழ்ந்தாலும் நங்கூர உறுதியுடன் வலிமையாக இருக்கிறார்.
இறுதியில் தனது குடும்பத்தின் நலம் கருதி தனது ஹிட்லர் ஆளுமையைக் கைவிட்டுவிடுகிறார் உமாநாத்.
1982-ம் ஆண்டு வெளியான இப்படத்தை பி.மாதவன் இயக்கி, பி.வி.துளசிராம் தயாரிக்க, இப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, சுருளி ராஜன், சாதனா, சதீஷ், மேஜர் சுந்தர்ராஜன், சாமிக்கண்ணு ஆகியோர் நடித்தனர்.
இப்படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசைமயமைத்துள்ளார். அனைத்துப் பாடல் வரிகளையும் கண்ணதாசன் எழுதி இருக்கிறார்.
இந்த படத்தில் டப்பிங் வாய்ஸில் ஒரு முக்கிய வில்லன் வேடம் செய்து இருக்கிறார் நடிகர் சத்யராஜ்.
அதிமுக்கியமான தகவலாக இந்த படத்தின் கதை இயக்நனர் மகேந்திரன் எழுதியது. இது நாடகமாகவும் மேடை ஏற்றப்பட்டது.
– ஆறுமுகம்