Take a fresh look at your lifestyle.

“அழகான ராட்சசியே” – குழைவும் குழந்தைத் தன்மையும் கொண்ட பாடல்!

“அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே” பாடலில், பாட்டின் பல்லவி இசைக்கருவிகளுக்கு உற்சாகம் தந்ததா! அல்லது இசைக்கருவிகள் கவிஞருக்கு பல்லவி எடுத்துத் தந்தா! என்று தெரியாதபடி ஒரு பாட்டு.

இங்கே அடிநெஞ்சில் குதிப்பது யார்? இசையமைப்பாளருக்கும் கவிஞருக்கு இடையிலான காதல். இதில் தமிழ் வென்றதா? இசை வென்றதா என்று சொல்லவேமுடியாது.

இந்தப் பாட்டின் வரிகளை எடுத்துப் பேசவேண்டும் என்றால் எல்லா வரிகளையும் தான் எழுதவேண்டும். இந்தப் பாட்டில் என்ன இல்லை.

முதலில், குழந்தைத் தனம் உண்டு. பழிபோடுவதும் பாசாங்கும் உண்டு.

அடிமனசை அருவாமனையில் அறுக்கிறியே!

இப்பெல்லாம் எழுதினார்கள் என்றால் அடுத்த வரிக்கும் இதற்கும் சம்பந்தம் இருக்காது. ஆனால் வைரமுத்து அப்படியில்லை. கோர்வையாக வரும்.

நான் ஒரு அப்பாவி. எனக்கு ஒன்னும் தெரியாதுப்பா என்பது அவள் பாசாங்கு. அதை கவிதையாகச் செய்யும் போது அது வேறொரு அழகான உணர்வு. வேறொரு டோனில் பதில் வருகிறது.

அறுகம்புல்லுக்கு அறுக்கத் தெரியுமா?
குழந்தைக் குமரிதான் ஆமா.
அயிரை மீனுதான் கொக்கை முழுங்குமா? அடுக்குமா? 

நீதான் வெளிய பூத்து உள்ள காய்க்கிற கடலைக்காடு.
உயிரை உரிச்சு கயிறு திரிக்கிற. சுகம் சுகமா.

நீதான் கொடுமை செய்யுற. ஆனா என்னைக் குத்தம் சொல்ற. உள்ள எவ்வளவு ஆசை உனக்கு. பார்வையிலேயே தெரியுது.. உயிரைப் பறிச்சு கொல்லாம, மெதுவா சுகம் தர்ற மாதிரி அழகா திரிக்கிற… என் அழகு உன்னைக் கொல்லுதுங்குற, ஆனா நீ இரசிக்கிறது, கவிஞன் மாதிரி கூர்மையாகப் பார்க்கிறதுதான் என்னைக் கொல்லுது.

அடுத்தது முழுக்க முழுக்க அழகுப் பாராட்டு. மெய்யைப் பாராட்டுதல். இப்போது அந்தக் குழந்தைத்தனம் இல்லை. பாசாங்கு இல்லை. அவளைத் தமிழில் குளிப்பாட்ட வேண்டும்.. அவ்வளவுதான்.

சூரியனை ரெண்டு துண்டு செஞ்சு கண்ணில் கொண்டவளோ!
சந்திரனை கள்ளுக்குள்ள ஊறவைச்ச பெண் இவளோ!
ராத்திரியை தட்டி தட்டி கெட்டி செஞ்சு மையிடவோ
மின்மினியை கன்னத்துல ஒட்டவைச்சு கைதட்டவோ!

பதிலுக்கு அங்கருந்து intensity. வர்ணிப்பது போதும். எனக்கு அதீத உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்று அவள்.

துருவி என்ன துளைச்சுப்புட்ட.
தூக்கம் இப்போ தூரமய்யா.
தலைக்கு வைச்சு நான் படுக்க
அழுக்கு வேட்டி தாருமய்யா!

முழுக்க முழுக்க கிராமியச் சூழலில் இடம்பெறும் பாட்டு. அந்தச் சூழ்நிலைக்கு ஏற்றபடி, கிராமியக் சூழலில் இருப்பவள் எப்படிச் சிந்திப்பாளோ அதற்கேற்ற வரிகள். அழுக்கு வேட்டி யார் உடுத்தியது? அவன் உடுத்தியதுதான். அவ்வளவு intense. ஆண்டாள்மாதிரி.

“நான் நடக்கும் நிழலுக்குள் நீ வசிக்க சம்மதமா?” என்று அவள் காதலோடு கேட்க, கொஞ்சம் காமத்தோடு, அழகைத் தொழுகிற உணர்வோடு, “நீராக நான் இருந்தா ஒன் நெத்தியிலே நான் இறங்கி கூரான உன் நெஞ்சில் குதிச்சு அங்கு குடியிருப்பேன். ஆணா வீணா போனேன்.” என்று சொல்கிற அழகு.

காதலர்களுக்கிடையே நிலவும் அத்தனை இரசனைகளும் பாட்டில் உண்டு. தமிழ் உண்டு. கிராமிய மணம் உண்டு. காதல் உண்டு. காமம் உண்டு. தொழுதல் உண்டு. பொருள் புதைந்த காதல் நம்மை எங்கோ அழைக்கிறது.

வரிகள் : வைரமுத்து
இசை : ரஹ்மான்

  • நன்றி: முகநூல் பதிவு