தமிழ்த் திரையுலகில் எப்போதாவது சில மாயங்கள் நிகழும். அப்படி 2008ல் வெளியான ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படம் கோலிவுட் மட்டுமின்றி மற்ற மொழி திரையுலகிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஜெய், சமுத்திரகனி, கஞ்சா கருப்பு ஆகியோருடன் தானும் நடித்து ‘சுப்ரமணியபுரம்’ படத்தை இயக்கியிருப்பார் சசிகுமார்.
தூங்கா நகரம் மதுரையின் பின்னணியோடு டைட்டில் முடிந்ததும், முதல் காட்சியில் சிறைச்சாலையில் இருந்து கேமரா வெளியே வரும்.
அப்படியே ‘சுப்ரமணியபுரம்’ என படத்தின் தலைப்பும் திரையில் ஒளிர, அங்கிருந்து கஞ்சா கருப்பும் நடந்து செல்ல, கேமரா அவரின் முன்னும் பின்னும் வலதும் இடதுமாக ஒரே ஷாட்டில் நீளமான காட்சியாக மிரள வைக்கும்.
மேக்கிங்கில் மிரட்டிய சசிகுமார்
அடுத்ததாக போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்ததும் சமுத்திரகனி ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்ய கிக்கரை அழுத்துவார். அந்த சீன் அங்கே கட்டாகி ஜெய்யின் அம்மா அடி பைப்பின் கைப்பிடியை அழுத்துவதாக அடுத்த சீன் ஆரம்பிக்கும்.
இந்த சீன் ஜெய் பாத்ரூம் உள்ளே போனதும் கதவை அடைப்பதாக முடியும். இதன் தொடர்ச்சி பாத்ரூம் கதவை திறந்து சசிகுமார் வெளியே வருவதாக இருக்கும்.
இங்கே சசிகுமாரின் அண்ணி குடத்தில் இருக்கும் தண்ணியை அண்டாவில் ஊற்றுவதாக முடியும்.
அடுத்தக் காட்சி தொட்டியில் இருக்கும் தண்ணீரை மொண்டு கஞ்சா கருப்பும், அவரது நண்பர்களும் குளிப்பதாகத் தொடங்கும்.
வெவ்வேறு இடங்களில் நடக்கும் இந்தக் காட்சிகளை இப்படி அருமையாக கோர்த்திருப்பார்கள் இயக்குநர் சசிகுமாரும் அவரது குழுவினரும்.
தொடக்கத்திலேயே தாறுமாறான மேக்கிங்கில் மிரட்டியிருப்பார் சசிகுமார்.
80களை கண்முன் நிறுத்திய சுப்ரமணியபுரம்
படம் தொடங்கி முதல் ஐந்து நிமிடங்கள், ஆறு காட்சிகள், அவ்வளவு தான் ரசிகர்களை கதையின் உள்ளே இழுத்துப் போட்டு வேடிக்கை காட்டுவார் இயக்குநர் சசிகுமார்.
எண்பதுகளின் காலக்கட்டத்தை அனைத்து விதத்திலும் அப்படியே கண்முன் நிறுத்தியதிலும் ஆரம்பம் முதல் முடிவு வரை எள்ளளவும் சிறு பிசிறு கூட தட்டாது.
வாழ்வியலை பின்னணியாகக் கொண்டு உருவாகும் படைப்பு எந்தளவுக்கு நேர்த்தியாக இருக்க வேண்டும் என்பதற்கு இப்படத்தை உதாரணமாகக் கூறலாம்.
இப்படத்தின் கதையும் அது பேசிய மனித உளவியல், அரசியல், வன்மம், வெறுப்பு, காதல், நட்பு, நம்பிக்கைத் துரோகம் ஆகியவை சமச்சீராக இருக்கும்.
காலத்துக்கும் பேச வேண்டிய கலைப்படைப்பு
தமிழ் சினிமாவில் மிக அரிதான படங்களில் காலத்துக்கும் பேசப்பட வேண்டிய கலைப் படைப்பாக ‘சுப்ரமணியபுரம்’ படத்தைக் கூறலாம்.
ஒரு கதைக்களத்தை படைப்பிலக்கியத் தன்மையோடு திரையில் உயிர்ப்பெறச் செய்வது ஒற்றைக் கால் தவம் போன்றது. அது இப்படத்தின் மூலம் சசிகுமாருக்கு சாத்தியமானது.
‘முரட்டுக்காளை’ தியேட்டர் சீன், அங்கு நடக்கும் சண்டைக் காட்சி, சமுத்திரகனியின் அண்ணன் மாவட்டத் தலைவருக்கு வாழ்த்துச் சொல்லப் போகும் காட்சிகள் பிரமாதமாக வந்திருக்கும்.
ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்
படத்தின் பல காட்சிகள் ஒரே ஷாட்டில் நீளமாக எடுக்கப்பட்டிருக்கும். இறுதியில் சசிகுமார் கொலை செய்யப்படும்போது கஞ்சா கருப்பு நடந்து செல்வார்.
படம் தொடங்கும் போது எப்படி ஒரே ஷாட் இருந்ததோ, அதைவிடவும் இந்த சீன் இன்னும் நீளமாக ஒரே ஷாட்டில் மூன்று நிமிடங்கள் வரை செல்லும்.
கஞ்சா கருப்பு நடக்கும் இந்த சீன் பின்னணியில் சசிகுமார் கொல்லப்படும் காட்சியும் வந்து போகும்.
அப்போது கஞ்சா கருப்பு வெளிப்படுத்தும் உணர்ச்சியும், இறுதியாக பீடி பற்ற வைத்துவிட்டு மூச்சை இழுத்து விடுவதும் தான் இப்படத்தின் ஆன்மா.
மீண்டும் இயக்குநராக வேண்டும்
‘சுப்ரமணியபுரம்’ படத்துக்குப் பின்னர் ‘ஈசன்’ திரைப்படத்தை இயக்கிய சசிகுமார், அதன்பிறகு நடிப்பில் கவனம் செலுத்திவருகிறார்.
நாடோடிகள், சுந்தரபாண்டியன், பேட்ட, அண்மையில் வந்த நந்தன், டூரிஸ்ட் ஃபேமிலி வரை என பல படங்களில் நடித்துள்ள சசிகுமார், தன்னை மிகச்சிறந்த நடிகராகவும் நிரூபித்துள்ளார்.
சுப்ரமணியபுரம் போன்ற உலகத் தரத்திலான படத்தை இயக்கிய சசிகுமார் மீண்டும் வரவேண்டும் என திரையுலகினரும் எதிர்பார்த்துள்ளனர்.
இடைப்பட்ட காலங்களில் படங்கள் தயாரித்து அவர் சந்தித்த பிரச்சினைகளும் இழப்புகளும் ஏராளம். அவைகளிலிருந்து புதிய நம்பிக்கையுடன் அவர் மீண்டு வருவதை விரைவில் பார்க்கலாம்.
இனிவரும் காலங்கள் அவருக்கு நிறைவானதாக அமைய இந்த பிறந்தநாளில் வாழ்த்துக் கூறுவோம்.
– Abdul Rahman Peer Mohamed
நன்றி: filmbeat