சமந்தா, நாக சைதன்யா இருவரும் இணைந்து நடித்த முதல் தெலுங்கு திரைப்படம் ‘யே மாயா சேசாவே’. அதன்பின் ‘மனம்’ எனும் படத்தில் இணைந்து நடித்தனர்.
அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். ஆனால், நீண்ட நாட்கள் இந்த திருமண பந்தம் நீடிக்கவில்லை.
மனக்கசப்பு ஏற்பட்டு சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர். விவாகரத்துக்கு பின் நடிகை சோபிதாவை காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் நாக சைதன்யா. சமந்தா இயக்குநர் ராஜ் நிடியாவைக் காதலிப்பதாகக் கூறப்படுகிறது.
அதற்கேற்றார்போல், பல்வேறு இடங்களுக்கு இவர்கள் ஜோடியாக சுற்றி வருகின்றனர். அதோடு, இருவரும் நெருக்கமாக உள்ள புகைப்படங்களை சமந்தா அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சமந்தா – நாக சைதன்யா இருவரும் இணைந்து நடித்த முதல் படமான ‘யே மாயா சேசாவே’ 15 ஆண்டுகள் கழித்து ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது. அடுத்த மாதம் 18ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்தை விளம்பரப்படுத்த புரோமோஷன் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.

இந்த நிகழ்வுகளில் சமந்தாவும், நாக சைதன்யாவும் ஒன்றாகக் கலந்துகொள்ளப் போகிறார்கள் – மேடையைப் பகிர்ந்துகொள்ள உள்ளனர் என ஊடகங்களில் செய்திகள் பரவி வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமந்தா பதில் கொடுத்துள்ளார்.
“இல்லை, இல்லை.. நான் யாருடனும் ‘யே மாயா சேசாவே’ படத்தின் விளம்பரத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை. அந்தப் படத்தை விளம்பரப்படுத்தவும் எனக்கு விருப்பம் இல்லை.
இந்த பேச்சு எங்கிருந்து வருகிறது என தெரியவில்லை. தயவுசெய்து தேவையில்லாத வதந்திகளைப் பரப்பாதீங்க’’ என காட்டமாக பதிலளித்துள்ளார் சமந்தா.
– பாப்பாங்குளம் பாரதி