2025-ம் ஆண்டில் அதிக வசூலைப் பெற்ற படமாக ‘சாவா’ திகழ்கிறது. அது சம்பாஜி மகராஜின் வாழ்வைச் சொல்கிற படமாக அமைந்து ரசிகர்களிடம் எழுச்சியூட்டியது.
மராத்தி மன்னரான சிவாஜிக்குப் பிறகு, முகலாய மன்னர் ஔரங்கசீப்பை முழுமூச்சுடன் எதிர்த்த அவரது மகனின் தீரத்தைச் சொல்வதாக அமைந்திருந்தது இப்படம். அதனால், அப்படம் பெற்ற வெற்றியில் பெரிய ஆச்சர்யமில்லை.
அதற்கடுத்த இடத்தைப் பிடித்திருக்கும் ‘சையாரா’ ஒரு காதல் திரைப்படம். அது மட்டுமல்லாமல், இதில் நடித்திருப்பவர்களில் பலர் புதுமுகங்கள்.
ஆனாலும் இப்படம் இரண்டு வாரங்களில் இந்தியாவில் மட்டும் 280 கோடி ரூபாயை அள்ளியிருக்கிறது. உலகம் முழுக்கச் சுமார் 425 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது.
அப்படியென்ன இருக்கிறது இந்தப் படத்தில்..?
‘சையாரா’ கதை!
வாணி பத்ரா (அனீத் பட்டா) என்றொரு பெண் தனது பெற்றோர், சகோதரர் மற்றும் உறவினர்களுடன் பதிவாளர் அலுவலகத்தில் காத்திருக்கிறார். காதலர் மகேஷ் உடன் அவருக்கு அன்று திருமணம் நடக்க இருக்கிறது. ஆனால், மகேஷ் அங்கு வரவில்லை. அவரது பெற்றோர் மட்டும் வருகின்றனர்.
அந்த நேரத்தில் வாணியின் மொபைலுக்கு ஒரு அழைப்பு வருகிறது. எதிர்முனையில் பேசும் மகேஷ், “நாம பிரிஞ்சுரலாம். நான் வேறொரு பெண்ணை கல்யாணம் பண்ணப் போறேன்” என்கிறார். தான் வேலை செய்கிற நிறுவனத்தின் உரிமையாளர் மகளை, அவரது சொத்துக்காகக் காதலன் திருமணம் செய்யப் போவதை அறிந்ததும் மனமுடைகிறார் வாணி. மயங்கிக் கீழே சரிகிறார்.
அந்த சோகத்தில் இருந்து அவர் மீளச் சில மாதங்கள் ஆகின்றன.
அதன்பிறகு, ஒரு இணைய செய்தி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறார் வாணி. அன்றைய தினமே சாலையில் தன்னைக் கடந்து செல்லும் ஒரு ‘அராத்து’ இளைஞனைப் பார்க்கிறார். அருவெருப்புடன் அவரை நோக்கினாலும், மெல்ல அது ஈர்ப்பாக மாறுகிறது.
அந்த இளைஞனின் பெயர் கிரிஷ் கபூர் (அஹான் பாண்டே). பாடகராக, இசையமைப்பாளராகத் துடிக்கிற அவருக்குத் தனது குழுவிலுள்ள சகாக்கள் ‘பிரலங்களின் வாரிசுகள்’ என்ற வகையில் ஊடகங்களில் முன்னிறுத்தப்படுவது ஆத்திரமூட்டுகிறது.
அதனைத் தொடர்ந்து, அத்தகவலை வெளியிட்ட செய்தியாளரைத் தாக்குகிறார் கிரிஷ். அப்போது, அவரை இரண்டாவது முறையாகப் பார்க்கிறார் வாணி.
தனக்கு நேர்ந்த பிரச்சனையால் சில காலம் முடங்கிக் கிடந்தவர் வாணி. ஆனால், கிரிஷோ அதற்கு நேரெதிராக இருக்கிறார். அவரது குடும்பப் பிரச்சனைகள் அவரை ‘அதீத உணர்ச்சியாளராக’ மாற்றியிருக்கிறது.
இவ்விரண்டு பேரும் ஒருநாள் ஒன்றாகச் சேர்ந்து பணியாற்ற நேரிடுகிறது.
வாணியின் கவிதை எழுதும் திறனை அறியும் கிரிஷ், தான் வெளியிட இருக்கிற புதிய பாடலை எழுத அவரை நாடுகிறார். குறிப்பிட்ட நிபந்தனையின் பேரில் அதனை ஏற்கிறார் வாணி.
அந்த பாடல் வேறொரு ராப் பாடகரின் பெயரில் வெளியாகிறது. அவர் புகழ் பெறுகிறார்.
ஆனால், அது வாணி – கிரிஷின் காதலுக்கான தொடக்கப் புள்ளியாகிறது.
இப்படியொரு கதையில் வாணியின் பெற்றோர் அல்லது வேறு சிலர் தானே அக்காதலுக்கு எதிர்ப்பாக மாற முடியும். அதற்குப் பதிலாக, ‘அல்சைமர்ஸ்’ நோய் அந்த இடத்தை நிரப்புகிறது.
வாணியை அந்த நோய் தாக்குகிறது. அதனால், மெல்ல நினைவுகளை இழந்துவருகிறார். அந்த விஷயத்தை மருத்துவர் சொன்னதும் அதிர்ச்சியடைகிறார். வாழ்நாள் முழுக்கத் தன்னை நேசிக்கிற மனிதர்கள் துணையோடு மட்டுமே வாழ முடியும் என்று உணர்கிறார்.
அந்த நோய் பாதிப்பால் கிரிஷ் உடனான காதலையும் மறக்க நேரிடும் என்று வாணிக்குத் தெரியும். போலவே, தன்னைக் கவனித்துக் கொள்வதில் கிரிஷ் ஆர்வம் காட்டினால் இசையுலகில் சாதிப்பதற்கான அவரது வாய்ப்புகள் பறிபோய்விடும் என்பதும் புரிகிறது.
அதில் இருந்து மீள வாணி என்ன செய்தார்? தனது காதலைக் காக்க கிரிஷ் என்ன செய்தார் என்று சொல்கிறது ‘சையாரா’.
வெகு நாட்களுக்குப் பிறகு, ‘ரொமான்ஸ்’ மழையில் நம்மை ஊற வைக்கிற ஒரு கதை. அதனை மிகச்சரியாகக் கடத்தியிருக்கிறது மோஹித் சூரியின் இயக்கம்.
காதல் மழை..!
‘அர்ஜுன் ரெட்டி’, ‘அனிமல்’ நாயகர்கள் போன்று இதில் வரும் கிரிஷ் கபூர் எனும் பாத்திரமும் அமைந்துவிடுமோ என்ற பயத்தை அறவே போக்கியிருக்கிறார் அஹான் பாண்டே. இவர் இந்தி நடிகர் சங்கி பாண்டேவின் இளைய சகோதரர் மகன்.
’பிரபலங்களின் வாரிசுகள்’ பற்றி கமெண்ட் அடிக்கிற காட்சியில் இவரது நடிப்பு ‘ஆஹா’ ரகம்.
நாயகி அனீத் பட்டா இதற்கு முன்னர் ஒரு இந்திப்படம் மற்றும் வெப்சீரிஸில் நடித்திருக்கிறார். ஆனால், அவற்றை மறக்கும்படியான வரவேற்பு இதில் அவருக்குக் கிடைத்திருக்கிறது. அதற்கேற்ப ‘நச்’சென்று இதில் அவர் நடித்திருக்கிறார்.
நாயகியின் முன்னாள் காதலனாக வரும் ஷான் குரோவர் மற்றும் நாயகனின் உயிர் நண்பனாக வருகிற ஆலம் கான் இருவருமே சட்டென்று கவனம் ஈர்க்கின்றனர்.

இது போக நாயகனின் தந்தை, நாயகியின் பெற்றோர், இசைத்துறை சார்ந்தவர்கள், மருத்துவர் என்று சிலர் தலைகாட்டியிருக்கின்றனர்.
பிரதான பாத்திரங்களில் நடித்தவர்கள் எண்ணிக்கை குறைவு என்றபோதும், பெரிய பட்ஜெட் படங்களில் பார்க்கிற பிரமாண்டம் இதில் காணக் கிடைக்கிறது. காரணம், இதன் இயக்குனர் மோஹித் சூரி.
விஹாஸ் சிவராமனின் ஒளிப்பதிவு, ரோகித் மக்வானா – தேவேந்திரா மூர்தேஷ்வரின் படத்தொகுப்பு, லக்ஷ்மி கெலுஸ்கர் – ரஜத் பொட்டாரின் தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் ஒலி வடிவமைப்பு, டான்ஸ் மற்றும் ஆக்ஷன் கொரியோகிராபி என்று பல தொழில்நுட்ப அம்சங்கள் இதில் மிகச்சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன.
மிதுன், சச்சத் – பரம்பரா, ரிஷப் கந்த், விஷால் மிஸ்ரா, தனிஷ்க் பக்சி, பஹிம் அப்துல்லா, அர்ஸ்லான் நிசாமி ஆகியோர் இதில் பாடல்களுக்கு இசையமைத்திருக்கின்றனர். அனைத்து பாடல்களுமே திரும்பத் திரும்பக் கேட்கும் ரகம்.
அவற்றை மீறிப் படத்துடன் நாம் ஒன்றக் காரணமாக இருக்கிறது ஜான் ஸ்டீவர்ட் எடூரியின் பின்னணி இசை.
இப்படத்தின் கதை திரைக்கதையை சங்கல்ப் சதானாவும் வசனங்களை ரோஹன் சங்கரும் அமைத்திருக்கின்றனர்.
தனது வாழ்வு சம்பந்தப்பட்ட அத்தனை நினைவுகளையும் நாயகி இழக்கிறார் என்பதுவே ‘சையாரா’வை ஒரு ‘ஸ்பெஷல்’ படமாக மாற்றியிருக்கிறது.
உண்மையைச் சொன்னால், இதே கதையமைப்புடன் ‘எ மொமண்ட் டூ ரிமெம்பர்’ (A Moment to Remember) எனும் கொரிய திரைப்படம் 2004-ல் வெளியானது.
தற்போது காதலிக்கிற நாயகனை மறந்துவிட்டு முன்னாள் காதலனைத் தேடிச் செல்வது, கிளைமேக்ஸில் நாயகனைப் பிரிவது உள்ளிட்ட பல விஷயங்கள் அந்த படத்தில் இருந்து அப்படியே எடுத்தாளப்பட்டிருக்கின்றன.

அந்த கொரியன் படத்தில் இருந்து சையாரா காப்பி அடிக்கப்பட்டிருக்கிறதா அல்லது இதற்காக முறையாக அனுமதி பெறப்பட்டிருக்கிறதா எனத் தெரியவில்லை.
மற்றபடி, நாயகன் நாயகியின் பின்னணி உள்ளிட்ட சில விஷயங்கள் புதிதாகத் தெரிகின்றன.
திரைக்கதை எத்தனை மெதுவாக நகர்ந்தாலும், இதுபோன்ற படங்களில் உணர்வெழுச்சியைத் தூண்டுகிற காட்சியாக்கமே பிரதானம். அதனை மிகச்சரியாகச் செய்து ‘ஏன் இந்த வசூல் வெற்றி’ என்ற கேள்விக்குப் பதிலளித்திருக்கிறது ‘சையாரா’.
இதனை ரசிப்பவர்கள் அப்படியே ‘எ மொமண்ட் டூ ரிமெம்பர்’ படத்தையும் ரசித்தால் ‘காதல் மழை’யில் முழுக்க ஊறிப் பழைய நினைவுகளில் மூழ்கலாம்..!
– உதயசங்கரன் பாடகலிங்கம்