இப்போதெல்லாம் உச்ச நட்சத்திரங்கள் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிப்பதை வாடிக்கையாகி விட்டார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லால் சலாம், வேட்டையன் ஆகிய இரு படங்களில் நடித்தார். இரண்டுமே தோல்வி.
அவரது அடிச்சுவட்டைப் பின்பற்றி அல்டிமேட் ஸ்டார் அஜித், விடாமுயற்சி, குட்பேட் அக்லி ஆகிய இரு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து கொடுத்து விட்டு, ரேஸில் பங்கேற்க வெளிநாடுகளுக்குப் பறந்தார்.
விடாமுயற்சிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. குட் பேட் அக்லி கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும் வசூலைக் குவித்தது.
அஜித் கேமரா முன் நின்று கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது. அவரது புதிய படம் இந்த ஆண்டின் கடைசியில் தொடங்க உள்ளது.
இதனிடையே, ரஜினி காந்த், மீண்டும் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தின் ஷுட்டிங் முடியும் முன்பாகவே ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிக்கத் தொடங்கினார்.
நெல்சன் இயக்கி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதற்குப் பிறகு யாருடைய இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
அண்மையில் ரஜினியும் இயக்குநர் ஹெச்.வினோத்தும் இரண்டு முறை சந்தித்துப் பேசியுள்ளனர். ரஜினியிடம் வினோத் ஒரு கதை சொல்லி உள்ளார். ரஜினிக்குக் கதை பிடித்துப்போனது. இருவரும் முதன் முறையாக கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாக கோடம்பாக்கத்தில் இருந்து நம்பகமான தகவல்.
வினோத், இளைய தளபதி விஜய் நடித்து வரும் ‘ஜனநாயகன்’ படத்தை இயக்கி வருகிறார். இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 8-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் படத்தை ஹெச்.வினோத் இயக்குவார் எனத் தெரிகிறது.
– பாப்பாங்குளம் பாரதி.