‘இப்போ நாம பார்த்துட்டு இருக்கறது..’ என்று தொடங்கி ஏதேனும் ஒரு இடத்தைப் பற்றி, விஷயத்தைப் பற்றி, நபர்களைப் பற்றிப் பேசிக்கொண்டே இருக்கும் ‘விளாக்கர்களை’ பார்க்கிறபோது, ‘அட’ என்று தோன்றும்.
ஆனால், தொடர்ச்சியாக அவர்களது வீடியோக்களைப் பார்த்தபிறகு ‘இவங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா’ என்று தோன்றிவிடும்.
மாறாக, ‘இதெல்லாம் ஒரு பொழப்பு’ என்று கிண்டலடித்தவாறே அதனைப் பார்க்கிற ஒரு கூட்டம் பிறகு அவர்களது ‘நிரந்தர சப்ஸ்கிரைபர்’களாக மாறிவிடுவார்கள்.
‘அடுத்த வீடியோ எப்போ அப்லோடு பண்ணுவீங்க’ என்று விடாமல் கேட்டு நச்சரிக்கும் அளவுக்கு விசிறிகள் ஆகிவிடுவார்கள்.
அப்படியொரு அந்தஸ்தைப் பெற்ற விளாக்கர்கள் கடந்த ஐந்தாண்டு காலத்தில் எக்கச்சக்கமாகப் பெருகிவிட்டனர்.
ஆனால், இந்த விளாக்கர்களின் உறவு மற்றும் நட்பு வட்டத்தில் இருக்கும் சிலருக்கு ‘எல்லாவற்றையும் இணைய வெளியில் பந்தி வைக்கிற குணம்’ அறவே பிடித்தம் இல்லாமல் இருக்கும். ஆனால், அதனை வெளிக்காட்டாமல் இருப்பார்கள்.
அப்படிப்பட்ட நபர்களைத் திரையில் காட்டினால் எப்படி இருக்கும் என்று யோசித்திருக்கிறது திரைக்கதையாசிரியர் ஷரியாஸ் முகம்மது – இயக்குநர் பிண்டோ ஸ்டீபன் கூட்டணி.
அதனைப் பிரதிபலிக்கும்விதமாக, திலீப் நடித்த 150-வது படமான ‘பிரின்ஸ் அண்ட் தி பேமிலி’யை தந்திருக்கிறது.
சரி, படம் தரும் திரையனுபவம் எத்தகையது?
பிரின்ஸ் குடும்பத்தார்..!
‘மாயாண்டி குடும்பத்தார்’ படத்தில் வருவது போன்று எதிரும்புதிருமான திசையில் நடை பயில்கிற சில மனிதர்களைக் கொண்டது பிரின்ஸின் (திலீப்) குடும்பம். திருமண வயதைக் கடந்தும், அது நிறைவேறாமல் இருப்பதுதான் அவரது ஒரே பிரச்சனை.
ஆனால், அதற்கு முக்கியத்துவம் தராமல் இருக்கின்றனர் அவரது பெற்றோரான பேபி – ஜான்சி தம்பதி (சித்திக், பிந்து பணிக்கர்).
கடைசி தம்பிக்குத் திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. இன்னொரு குழந்தையை வயிற்றில் சுமக்கிறார் அவரது மனைவி.
இன்னொரு தம்பிக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. திருமண ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், தனக்கு ஒரு பெண்ணைப் பார்த்து உடனடியாகத் திருமணம் செய்துவிடுகிற துடிப்போடு இருக்கிறார் பிரின்ஸ். அவர் விதிக்கிற நிபந்தனைகளுக்கு உட்பட்டு எந்தப் பெண்ணும் வருவதாக இல்லை.

இந்த நிலையிலேயே, மேட்ரிமோனி மூலமாக அறிமுகமான சிஞ்சு எல்சா ராணி (ரனியா ராணா) எனும் பெண்ணை நிபந்தனைகள் விதிக்காமல் திருமணம் செய்யத் தயராகிறார் பிரின்ஸ்.
ஆனால், நிச்சயதார்த்த நாளன்று தான், சிஞ்சு ஒரு விளாக் பிரபலம் என்பது பிரின்ஸுக்கு தெரிய வருகிறது.
இயல்பில் கூச்ச சுபாவம் அதிகமுள்ள அவரால் அதனை ஏற்க முடிந்ததா? அவரது குடும்பத்தினரோடு சிஞ்சுவுக்கு ஒத்துப் போனதா?
எப்போதும் எல்லாரும் தன்னை உற்றுநோக்க வேண்டும் என்ற மனப்பான்மையோடு திரிகிற ‘விளாக்கர்’ சிஞ்சுவால் அந்த குடும்பத்தோடு இணைந்து வாழ முடிந்ததா என்கிறது இப்படத்தின் மீதி.
முதல் பாதியின் இறுதியில்தான் நாயகியின் அறிமுகம் நிகழ்கிறது. அந்த வகையில், கதையின் முதல் முடிச்சுமாக அதுவே இருக்கிறது.
இரண்டாம் பாதியில்தான் கதையின் இரண்டாவது கட்ட திருப்பம், அதன் விளைவுகள், அதற்கான தீர்வுகள் என்று பல விஷயங்கள் காணக் கிடைக்கின்றன.
அதனால், வழக்கமான கமர்ஷியல் பட திரைக்கதை வடிவத்தோடு இப்படத்தைப் பொருத்திப் பார்க்கக் கூடாது.
அதேநேரத்தில், முன்பாதியில் இருக்கிற சில ‘அரதப்பழசான’ நகைச்சுவை காட்சிகளைக் கொஞ்சம் பொறுத்துக் கொள்ள வேண்டும். அவை ‘வழக்கமான’ திலீப் படமாக இதனை முன்னிறுத்தும்.
அந்த ‘அபாயகரமான’ தடைகளைத் தாண்டிவிட்டால், புதுவிதமான திரையனுபவத்திற்கு உத்தரவாதம் தரும் இந்தப் ‘பிரின்ஸ் அண்ட் தி பேமிலி’.
கலக்கல் ‘பின்பாதி’!
‘பிரின்ஸ் அண்ட் தி பேமிலி’யை பொறுத்தவரை முன்பாதி ரொம்பச் சுமார்; ஆனால், பின்பாதியோ ‘சூப்பர்’ ரகம். அதனால், படம் பார்த்து முடித்தபிறகு ‘அடிபொலி’ என்று சொல்ல வேண்டியிருக்கிறது.
திருமண ஏக்கத்தோடு வாழ்கிற ஒரு நடுத்தர வயது ‘பேச்சுலராக’ இதில் சிறப்பாக நடித்திருக்கிறார் திலீப். கொஞ்சம் பழைய வாசனை இருந்தாலும், அவரது நடிப்பு நம்மை எரிச்சலூட்டவில்லை.
சிஞ்சு எல்சா ராணியாக வரும் நாயகி ரனியா ராணா, ‘யார் இவர்’ என்று கேட்கிற அளவுக்கு அழகிலும் நடிப்பிலும் வசீகரிக்கிறார்.
அதிலும், ‘விளாக் பிரபலம்’ என்ற பெருமிதத்தை முகத்தில் ஏந்தி நிற்கிற காட்சிகளில் அவரது உடல்மொழி அபாரம். ஆதலால், இப்படத்தின் யுஎஸ்பி என்றும் இவரைக் குறிப்பிடலாம்.
இது போகப் பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் ஆங்காங்கே போர், சிக்சர், ஓரிரு ரன்கள் எடுத்து ‘கம்பெனி’ கொடுக்கிற பேட்ஸ்மேன்கள் போல சித்திக், தியான் சீனிவாசன், பிந்து பணிக்கர், ஜானி ஆண்டனி, அஸ்வின் ஜோஸ், ஜோஸ்குட்டி ஜேக்கப், மீனாட்சி மாதவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
மீனாட்சியின் தாயாக நடித்தவருக்கு அதிகக் காட்சிகள் இல்லை; ஆனால், அவரும் வசீகரிக்கிறார்.
போலவே மஞ்சு பிள்ளை மற்றும் அவரது கணவராக நடித்தவர் இருவரும் சட்டென்று நம்மைச் சிரிக்க வைத்து, சில காட்சிகளில் அழ வைக்கின்றனர்.
வினீத் தட்டில் டேவிட் இதிலும் ஒரு காட்சியில் ‘கண்டிப்பான போலீஸ்’ ஆக வந்து போகிறார். அமைச்சராகத் தலை காட்டியிருக்கிறார் நடிகை ஊர்வசி.
இப்படத்தின் எழுத்தாக்கத்தை ஷரியாஸ் முகம்மது கையாண்டிருக்கிறார். லாஜிக் மீறல்கள் பற்றி யோசிக்கச் செய்யாத அளவுக்கு அவர் உருவாக்கிய காட்சிகள் இருக்கின்றன.
ஆனால், அதனைத் திறம்படத் திரையில் சொல்கிற வகையில் ‘யதார்த்தமான’ திரைக்கதை ட்ரீட்மெண்டை இயக்குநர் பிண்டோ ஸ்டீபன் கையாளவில்லை. அதுவே இப்படத்திலுள்ள முக்கியமானதொரு குறை.
அதற்குப் பதிலாக, காமெடியும் செண்டிமெண்டும் கலந்த சத்யன் அந்திக்காடு தலைமுறை சினிமாவாக இதனை உணரச் செய்கிறார் இயக்குநர் பிண்டோ. அதனைத் தவிர்த்திருக்கலாம்.
ஒளிப்பதிவாளர் ரெனதிவே, படத்தொகுப்பாளர் சாகர் தாஸ், தயாரிப்பு வடிவமைப்பாளர் அகில் ராஜ் என்று பல தொழில்நுட்பக் கலைஞர்கள் இயக்குநர் காட்ட விரும்பிய உலகிற்கு உயிர் கொடுக்க முயன்றிருக்கின்றனர்.
பின்னணி இசை வழியே, அதனை ஒவ்வொரு காட்சியிலும் முயற்சித்துப் பார்த்திருக்கிறார் இசையமைப்பாளர் சனல் தேவ். ‘ஹார்ட் பீட்’, ‘லைஃப் ஆப் பிரின்ஸ்’ பாடல்கள் ஓகே ரகம்.
‘ராணி மேரி ராணி’ பாடலில் நெடுங்காலம் கழித்து உற்சாகம் ததும்ப ஒலிக்கிறது உதித் நாராயண் குரல்.
‘ஹார்ட் பீட்’ பாடலில் திலீப் டான்ஸ் ஆடியிருக்கிற விதமும், அதற்கான கொரியோகிராஃபியும் ‘எவர்க்ரீன்’ அனுபவம் தர முயற்சித்திருக்கின்றன.
லாஜிக் மீறல்கள் பக்கம் கவனம் திருப்பாவிட்டால், முதல் பாதியில் காமெடியாக நகர்கிற சில காட்சிக்கோர்வைகளைக் கடந்துவிட்டால், இப்படம் தரும் திரையனுபவம் நிச்சயம் சிறப்பானதே.
குறிப்பாக மொபைல் போன் உலகில் நிகழ்கிற அட்ராசிட்டிகளை கண்டு பொருமுபவர்களுக்கு இப்படம் உவப்பானதாக இருக்கும். அத்தகைய எண்ணம் இல்லாதவர்களையும் கூட ஈர்ப்பதாக இருக்கும்.
‘விளாக்’ நடத்துபவர்களின் தனிப்பட்ட அபிப்ராயங்கள், அவர்கள் ரசிகர்களின் மனங்களில் நிகழ்த்துகிற அத்துமீறல்கள், ரசனைச் சரிவுகள் குறித்து பெரியளவிலான ‘விளாசல்கள்’ இத்திரைக்கதையில் இல்லை. அதனைச் செய்திருந்தால், ‘விளாக்கர்களுக்கு வச்ச ஆப்பு’ ஆக இப்படைப்பு மாறியிருக்கும்.

ஆனால், அந்த விஷயத்தை வைத்துக்கொண்டு இன்னும் பல படங்கள் எடுக்க முடியும் என்ற நல்லெண்ணத்தில் அதனைக் கொஞ்சமாய் இயக்குநர் திரையில் காட்டியிருக்கிறாரா என்று தெரியவில்லை.
நாயகன் திலீப் மீதான பாலியல் குற்ற வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், ‘அதற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என்பதாக வெளிப்படுகிற சில வசனங்களை அவரது சமீபகாலப் படங்களில் காண முடிந்தது. இதிலும் அது தொடர்கிறது.
‘உங்களோட அபிப்ராயம் என்ன வேண்டுமானாலும் இருக்கலாம்; ஆனால், அது உங்களுடையதாக மட்டுமே இருக்க வேண்டும். உங்களுடையது மட்டுமாக..’
என்று இதில் திலீப் பேசுகிற வசனம் வருகிறது. இன்னொரு காட்சியில், ‘சில பேருக்கு நான் ஒரு காமெடி பீஸா தெரியறேன்; ஆனா எனக்கும் வலி இருக்கு சார்’ என்று அவர் சொல்வதாக ஒரு வசனம் உண்டு.
‘நம்ம ஊர் ரொம்பவே மாறிடுச்சு, உண்மை என்னன்னு தெரிஞ்சுக்க யாருக்கும் ஆர்வமில்ல’ என்று அவரிடத்தில் ஜானி ஆண்டனி பேசுகிற வசனமும் கூட அத்தகைய தொனியிலேயே ஒலிக்கிறது.
அது போன்ற விஷயங்கள் கதையோடு தொடர்புடையது என்று படக்குழு வாதிடலாம். ஆனால், நம் புத்திக்கு ‘அவை அப்படியல்ல’ என்றே படுகின்றன.
அந்தக் குறைகளைப் புறந்தள்ளிவிட்டால், இன்றைய ஏஐ யுகத்தில் நம் குடும்பங்களுக்குத் தேவையான ஒரு ‘மெசேஜை’ தருகிறது ‘பிரின்ஸ் அண்ட் தி பேமிலி’.
‘வர்ச்சுவல் வேர்ல்டு’ காட்டுகிற பிம்பங்களில் தங்கிவிட்டால் வாழ்க்கை என்ற ஒன்று அர்த்தமற்றதாகிவிடும் என்பதுவே அது..!
அது போதுமே என்பவர்கள் தாராளமாக ‘பிரின்ஸ் அண்ட் தி பேமிலி’யில் திலீப் & பிண்டோ ஸ்டீபன் டீம் கொட்டியிருக்கிற உழைப்பைக் கண்டு ரசிக்கலாம்!
– உதயசங்கரன் பாடகலிங்கம்