Take a fresh look at your lifestyle.

பார்த்த ஞாபகம் இல்லையோ…!

232
திரைத் தெறிப்புகள் – 47:

தமிழ்த் திரைப்படங்களின் எத்தனையோ ‘கிளப் டான்ஸ்’ பாடல்கள் வெளிவந்திருக்கின்றன. ஹோட்டல்களில் ‘மைக்’ குடன் பாடும் பல பாடல்களும் வந்திருக்கின்றன.

இத்தகைய பாடல்களில் வித்தியாசமான மென்மையுடன், முதன்மையான இடத்தில் இருப்பது, ‘புதிய பறவை’ படத்தில் இடம்பெற்ற, மெல்லிசைத் திலகமான பி. சுசீலாவின் குரலில் வெளிவந்த இந்தப் பாடல் தான்.

“பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ.
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ.
மறந்ததே இந்த நெஞ்சமோ…”

என்கின்ற இந்தப் பாடலை திரைப்படத்தில் பாடுகிற மாதிரி நடித்திருப்பார் சௌகார் ஜானகி. எடுப்பான நிறத்தில் சேலை அணிந்தப்படி கனமான மேக்கப்புடன், மெல்லிய நடன அசைவுகளுடன், சௌகார் தனி அழகுடன் தோன்றிருப்பார்.

“அந்த நீல நதிக் கரை ஓரம்
நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்.
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்.
நாம் பழகி வந்தோம்
சில காலம்…”

– என்கின்ற பாடலை பி. சுசீலாவின் மிக இனிமையான குரலை ரசிப்பதைப் போல அரங்கில் மேஜையில், கையில் சிகரெட்டைப் புகைத்தபடியே, ரசனையோடு நடித்திருப்பார் நடிகர் திலகம்.

1964-ம் ஆண்டில் சிவாஜியின் தயாரிப்பில் வெளிவந்த இந்தப் படத்திற்கு அருமையான வரிகளைத் தந்திருப்பார் கண்ணதாசன். அற்புதமாக இசையமைத்திருப்பார் எம்.எஸ். விஸ்வநாதன்.

“இந்த இரவைக் கேள் அது சொல்லும்
அந்த நிலவைக் கேள் அது சொல்லும்.
உந்தன் மனதைக் கேள் அது சொல்லும்.
நாம் மறுபடி பிறந்ததை சொல்லும்…”

இந்தப் பாடலின்போது கோட் அணிந்தப்படி இருக்கும் சிவாஜியின் முகம் மட்டுமே வெளிப்படுத்தும் முக பாவங்கள் அவ்வளவு தூரம் ரசிக்கிறபடி அமைந்திருக்கும்.

“அன்று சென்றதும் மறந்தாய் உறவை 
இன்று வந்ததே புதிய பறவை
எந்த ஜென்மத்திலும் ஒரு தடவை
நாம் சந்திப்போம் இந்த நிலவை…”.

– என்று மிக இனிமையான படி இந்தப் பாடல் நிறைவு பெறும்.

வண்ணமயமான இந்தப் பாடல் காட்சியில் சிவாஜி, சௌகார் ஜானகியின் நடிப்பு மொழியையும், எம்.எஸ்ஸின் நளிமான இசையையும், கண்ணதாசனின் மறக்க முடியாத வரிகளையும் இதைத் திரையில் ரசித்தபோது, மனதில் நிறைந்த அற்புத உணர்வையும் ஞாபகம் உள்ளவர்கள் லேசில் மறக்க முடியுமா?

*

– யூகி