Take a fresh look at your lifestyle.

திரையில் பராக்கிரமம் காட்டுகிறாரா விஜயகாந்த் மகன்?

சகாப்தம், மதுர வீரன் படங்களில் நாயகனாக நடித்தவர் சண்முக பாண்டியன். மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன். ‘விஜயகாந்த் வாரிசு’ என்ற அடையாளமே திரையுலகிலும் ரசிகர் வட்டாரத்திலும் இவரது இருப்பு கவனிப்பைப் பெறக் காரணமாக உள்ளது. அதற்கேற்றவாறு, அவரது ஹீரோயிசத்தை காட்டும் வகையில் ‘படைத் தலைவன்’ அமையும் என்று சொல்லி வந்தது அப்படக்குழு.

கடந்த மாதமே வெளியாகியிருக்க வேண்டிய ‘படைத் தலைவன்’ தற்போது தியேட்டர்களுக்கு வந்திருக்கிறது. இளையராஜா இசையமைப்பில், அன்பு இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, முனீஸ்காந்த், கேஜிஎஃப் ராமச்சந்திர ராஜு , யாமினி சந்தர், ரிஷி ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் தரும் திரையனுபவம் எத்தகையது?

‘ப.த.’ கதை என்ன?

சேத்துமடை பகுதியில் வாழ்ந்து வருகிறது வேலுவின் (சண்முக பாண்டியன்) குடும்பம். தாயை இழந்த அந்த இளைஞர் தனது தந்தை (கஸ்தூரி ராஜா) மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். அவர்கள் வீட்டில் ‘மணியன்’ என்றொரு யானை வளர்கிறது. வேலுவின் தாய், தந்தை இருவருமே அதையும் தங்களது குழந்தைகளில் ஒன்றாகக் கருதியவர்கள். அந்த யானை வளர்ந்தபிறகும் அதில் எந்த மாற்றமும் இல்லை.

இந்த நிலையில், வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாத காரணத்தால் வேலுவின் தந்தையை அவமானப்படுத்துகிறார் உறவினர் ஒருவர். அந்த அவமானத்தைக் காணச் சகிக்காமல் பலரிடம் கடன் கேட்டுச் செல்கிறார்.

அதனைக் காணும் வேலுவின் நண்பர், ’பேசாம நம்ம மணியனை சினிமா ஷூட்டிங் அனுப்புனா என்ன’ என்று கேட்கிறார். படப்பிடிப்புக்குச் செல்லும் யானைக்கு நல்ல வருமானம் கிடைக்கும் என்பதை வேலு பெரிதாகக் கருதாவிட்டாலும், இப்போதைய சூழலுக்கான தீர்வாக அது மட்டுமே இருக்கும் என்பதால் ஒப்புக்கொள்கிறார்.

சினிமா படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் நபர் ஒருவரைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறார் வேலுவின் நண்பர். அவரிடம் விஷயம் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், அந்த நபரோ வேறொரு கணக்கு போடுகிறார்.

’அந்த யானையை மொத்தமாக விலைக்கு வாங்கிவிட்டால் நல்ல வருமானம்’ என்று ஐடியா செய்கிறார். அதனை வேலுவின் தந்தைக்குக் கடன் கொடுத்த நபரிடம் சொல்கிறார். உடனே, வேலுவையும் அவரது தந்தையையும் ஏமாற்ற அவர் முயற்சிக்கிறார். அது எடுபடாமல் போகிறது.

கோபப்படும் அந்த நபர் குயுக்தியாகச் சில விஷயங்களைச் செய்கிறார். அதனால், மணியனை வேலுவின் குடும்பம் பிரிய நேரிடுகிறது. வனத்துறை, காவல் துறை அதிகாரிகளும் அதற்குத் துணை போகின்றனர்.

அதன்பிறகு வேலுவால் மணியனைக் காண முடிந்ததா, அதனை வீட்டுக்கு அழைத்து வர முடிந்ததா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

அசத்தும் ‘ஆக்‌ஷன்’ காட்சிகள்!

படம் முழுக்க ‘சீரியசான’ முகபாவனைகளோடு வந்து போயிருக்கிறார் சண்முக பாண்டியன். உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தால் இப்படிப்பட்ட பாத்திரங்களில்தான் நடிக்க முடியும் என்று யாரோ அவருக்குத் தவறாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார் போல. அதனைத் தவிர்க்க, அவர் தனது தந்தையின் ஆரம்பகாலப் படங்களைப் பார்ப்பது நல்லது.

இதில் நாயகி என்று எவருமில்லை. கொஞ்சம் கவர்ச்சியாக உடை அணிந்த காரணத்தால், பின்பாதியில் வரும் யாமினி அந்த இடத்தை நிரப்புகிறார். ஆனாலும், அந்த முயற்சிக்கு உரிய பலன் இல்லை. ஏனென்றால் அந்த பாத்திரம் சரிவர வடிவமைக்கப்படவில்லை.

அது மட்டுமல்லாமல், படத்தில் பல பாத்திரங்கள் அப்படித்தான் இருக்கின்றன. முனீஸ்காந்த், அருள்தாஸ், ரிஷி ரித்விக், வில்லனாக வரும் ராமச்சந்திர ராஜு உட்படப் பலரது இருப்பு பின்பாதியில் சரிவரத் திரையில் வெளிப்படாமல் போக அதுவே காரணமாக உள்ளது.

கஸ்தூரி ராஜாவின் நடிப்பு நம்மைக் கவரும் வகையில் இருக்கிறது. ஆனாலும், அவர் கொட்டியிருக்கும் உழைப்பு மோசமான திரைக்கதையால் விழலுக்கு இறைத்த நீராகியிருக்கிறது.

இது போக லோகு என்பிகேஎஸ், ஸ்ரீஜித் ரவி, ஏ.வெங்கடேஷ் மற்றும் சண்முக பாண்டியனின் நண்பர்களாக வருபவர்கள், இன்ஸ்பெக்டர் ஆக நடித்தவர் என்று சிலர் திரையில் வந்து போயிருக்கின்றனர்.

மறைந்த விஜயகாந்தைத் திரையில் காட்டும் நோக்கோடு ’ரமணா’ பாத்திரம் படத்தில் இடம்பெற்றிருக்கிறது. முருகதாஸின் ‘ரமணா’வில் நடித்த யூகிசேதுவும் இதில் இருக்கிறார். அந்த காட்சிகள் இந்த படத்தைக் கிண்டலடிக்கவே அதிகம் உதவியிருக்கின்றன.

விஜயகாந்த் ‘ரெஃபரன்ஸ்’ஸை படத்தில் கொணர இதுவா வழி?

ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.சதீஷ்குமார், படத்தொகுப்பாளர் எஸ்.பி.அகமது, கலை இயக்குனர் ராஜு மற்றும் சண்முகம் என்று பலரது உழைப்பு இப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது.

இளையராஜா இதற்கு இசையமைத்திருக்கிறார். பாடல்களும் பின்னணி இசையும் சில இடங்களில் அதனை நமக்கு நினைவூட்டுகின்றன. அவ்வளவுதான்.

இயக்குனர் அன்பு அமைத்த கதைக்குத் திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார் பார்த்திபன் தேசிங்கு. அவரது எழுத்தில் இடம்பெற்ற காட்சிகளில் எத்தனை சதவிகிதம் படமாக்கப்பட்டது என்று தெரியவில்லை. திரையில் தென்படும் சில பாத்திரங்களின் திடீர் மனமாற்றம், ‘சீரியல்களே பரவாயில்ல’ என்று எண்ணச் செய்கிறது. நூலறுந்த பட்டம் போல, கதை அங்குமிங்கும் தாவுவது ஒருகட்டத்தில் அயர்ச்சியை ஏற்படுத்துகிறது.

தவறு எந்த இடத்தில் நிகழ்ந்திருந்தாலும், அதற்கான காரணகர்த்தாக்களாக இவர்கள் இருவருமே நம் முன்னே தெரிகின்றனர்.

இடைவேளைக்கு முன்னதாக வரும் சண்டைக்காட்சி இப்படத்தில் இருக்கும் சில ப்ளஸ்களில் ஒன்றாக உள்ளது. மகேஷ் மேத்யூ அதனை வடிவமைத்திருக்கும் விதம் அருமை. ஆனால், அக்காட்சி தொகுக்கப்பட்ட விதம் திருப்தி தரவில்லை.

உண்மையைச் சொன்னால், அந்த சண்டைக்காட்சியானது சண்முக பாண்டியனைத் திரையில் எப்படிக் காட்டினால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தை விஸ்வரூபமெடுக்கச் செய்கிறது. கூடவே, அவர் ஏற்கிற பாத்திரங்களின் சாராம்சம் எப்படி இருக்க வேண்டும் என்றும் உணர்த்துகிறது.

‘தனது புஜபல பராக்கிரமத்தை வெளிப்படுத்துகிற பாத்திரங்களை சண்முகபாண்டியன் எப்போது திரையில் பிரதிபலிப்பார்’ என்ற கேள்வியை எழுப்புகிறது.

கிராமம், நகரம் சார்ந்த கதைகள் என்ற வேறுபாடில்லாமல் எல்லாவிதமான படைப்புகளுக்கும் பொருந்துகிற உடல்வாகு, தோற்றத்தைக் கொண்டிருக்கிறார் சண்முக பாண்டியன். ஓரளவுக்கு நடிக்கவும் முயற்சிக்கிறார். நல்ல இயக்குனர்களோடு கை கோர்க்கிற பட்சத்தில், பொருத்தமான கதைகளைத் தேர்ந்தெடுக்கிற பட்சத்தில், தனது திரை அடையாளத்தை ’தனித்துவமானதாக’ அவர் உருவாக்கக் கூடும். அதற்கான சாத்தியங்கள் அனேகம் என்று தெரிய வைத்த வகையில் மட்டுமே கவனம் ஈர்க்கிறது ‘படைத் தலைவன்’..

– உதயசங்கரன் பாடகலிங்கம்