பா. ரஞ்சித்தின் சினிமாக்களைப் பற்றி பேசும்போது அந்த சினிமாக்களின் அரசியலை மட்டுமே பெரும்பாலும் கவனத்தில் கொள்கிறார்கள். அதைப்பற்றியே விவாதிக்கிறார்கள்.
ஒரு ஓவியக்கலைஞனாக, காட்சி அழகியலின் மீது ஆர்வம் கொண்டவனாக, ரஞ்சித் திரைப்படங்களின் காட்சி அழகியலின் தனித்துவம் மீது எப்போதும் எனக்கு ஆர்வம் உண்டு.
நான் ஓவியக் கல்லூரி கடைசி வருடம் படித்துக்கொண்டிருந்தபோது ரஞ்சித் முதலாமாண்டு மாணவர்.
சென்னை ஓவியக் கல்லூரியின் வண்ணச் சாரல் விழாவில் நாங்கள் ஒரு நவீன நாடக விழாவை ஒருங்கிணைத்திருந்தோம்.
கூத்துப் பட்டறை முதல் முருகபூபதியின் மணல்மகுடி வரை பல்வேறு குழுவினரின் நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன.
மாணவர்களின் பங்குங்கு நாங்கள் ஒரு நாடகத்தை நடத்தினோம். நான் அந்நாடகத்தை எழுதி இயக்கினேன். அதில் நடிப்பதற்கு ஆர்வமுள்ள மாணவர்களை தேடியபோது நாடக ஆர்வம் கொண்ட இளையோனாக ரஞ்சித் வந்தார்.
அடுத்த ஆண்டு வண்ணச்சாரல் நிகழ்வில் ரஞ்சித்தே நாடகங்களை எழுதி இயக்க ஆரம்பித்ததை பார்த்தேன்.
அப்போதே தீவிரமான இலக்கிய – அரசியல் வாசிப்பும் தேடுதலும் கொண்ட ஒரு இளைஞனாக தெரிந்தார்.
தலித் அரசியல் பற்றிய வாசிப்பும் உரையாடலும் மாணவராக இருக்கும்போதே ரஞ்சித்திடம் ஆரம்பித்தது ஞாபகம் இருக்கிறது.
ரஞ்சித் அடிப்படையில் ஓவியர் என்பதால் அந்த ரசனை ரஞ்சித்தின் சினிமாக்களின் போஸ்டர் டிசைன்களிலிருந்தே ஆரம்பித்து விடும்.
அவரது முதல் படமான அட்டகத்தியின் போஸ்டர் டிசைகளில் ஒன்று ஓவியர் க்ளிம்ப்டின் ஓவியப் பாணியில் உருவாக்கப்பட்டிருக்கும்.
மெட்ராஸ் படத்தில் முதல் பார்வை போஸ்டர் ஒரு விதத்தில் சுவரோவியக் கலைஞன் பேங்க்ஸியின் ஓவியங்களை ஞாபகப்படுத்தும்.
கபாலி, காலாவின் போஸ்டர்களும் தனித்துவத்துடன் இருக்கும். சார்பட்டா பரம்பரை போஸ்டர்கள் அந்த கால விண்டேஜ் போஸ்டர்களை மறு உருவாக்கம் செய்தது போல இருக்கும்.
நட்சத்திரம் நகர்கிறது படத்தின் முதல் போஸ்டர் நீர்வண்ண ஓவியம் போலவே உருவாக்கப்பட்டிருக்கும்.
அட்டகத்தி திரைப்படம் சென்னை என்கிற பெருநகருக்கும் அதன் அருகாமையிலிருக்கும் கிராமங்களுக்கும் இடையிலான மனிதர்களின், குறிப்பாக இளைஞர்களின் ஊடாட்டத்தை சொல்லும் சினிமா.
ஆகவே பஸ் அந்த திரைப்படத்தில் ஒரு பிரதான ’விஷுவல் ஐடெண்டி’யாக பயன்படுத்தப்பட்டிருக்கும்.
பேருந்துக்காக காத்திருக்கும் மனிதர்களின் கால்களின் காட்சி துண்டு ஒன்று படத்தின் ஓரிடத்தில் வரும். அது போன்ற காட்சி நறுக்குகள் எந்த திணித்தலும் இல்லாமல் ரஞ்சித் படங்களில் வருவதை பார்க்கலாம்.
மெட்ராஸ் படத்தில் காலை விடிவது ஒரு கோழியின் கண்களினூடாக தெரியும். மெட்ராஸ் படத்தில் சுவர் ஓவியம். அதுவே அந்த படத்தின் மய்யக் கதாபாத்திரம். முன்பெல்லாம் சென்னை ஓவியக்கல்லூரியில் படிக்கும் சில மாணவர்கள் செலவுக்கு பணம் தேவைப்படும்போது அரசியல் சுவர் விளம்பரங்கள் வரைய செல்வது வழக்கம்.
ரஞ்சித்கூட அப்படி அரசியல் சுவர் விளம்பரங்கள் வரையச் செல்லும்போதுதான் மெட்ராஸ் படத்தின் இந்த ஐடியா ஒரு விதையாக தனக்குள் விழுந்ததாக சொல்லியிருந்தார்.
மெட்ராஸ் படத்தின் காட்சி அழகியல் அதன் துவக்கப் பாடலான ‘எங்க ஊரு மெட்ராஸு’ பாடலிலிருந்தே ஆரம்பித்து விடுகிறது.
மக்கள், அவர்களின் வாழ்வியல், கட்டிடங்கள் குறிப்பாக அவர்கள் வாழும் நிலப்பரப்பு சார்ந்த காட்சி மற்றும் அதன் வண்ணக் கலைவைகள் என்று ஒரு வகையான ‘ஹைப்பர் ரியலிச பாணி ஓவியங்கள் போல டீடெயிலான காட்சி அமைப்புகள்.
இடைவேளையின் போது அந்த சுவர் மீது விழும் கதைநாயகனின் நிழல் முதல் கடைசி காட்சியில் சுவரில் வந்து விழுந்து சிதறும் ‘நீல வண்ணம்’ வரை ஒரு ஓவியனுக்கே உரிய விஷுவலைஷேன்கள் அவை.
காலாவில் ஒரு வகையில் இயற்கையின் அடிப்படை மூலக்கூறுகளான நிலம் நீர் நெருப்பு காற்று வானம் போன்றவை காட்சி அழகியலுடன் படம் முழுக்க கையாளப்பட்டிருக்கும்.
நிலம் தான் படத்தின் பிரதான பிரச்சினை. நீர் என்பதை வில்லனான ஹரிதாதா அணுகும் விதமும் காலா அணுகும் விதமும் வெவ்வேறு வகையில் காட்சிகளாக வரும்.
நெருப்பு எப்படி ஹரிதாதா போன்ற ஆதிக்க சக்திகளின் ஆயுதமாக இருக்கிறது என்றும் காட்சிப் படுத்தப்பட்டிருக்கும்.
காற்றில் எழும் கறுப்பு சிகப்பு நீலம் வண்ண சிதறல்கள் வானத்தை நிறைப்பதுடன் ‘கற்றவை பற்றவை’ என்று முடியும் கிளைமாக்ஸ் காட்சி அமைப்பு தமிழ் சினிமாக்களில் வந்த சிறந்த விஷுவலைஷேசன்களில் ஒன்று என்று சொல்வேன்.
சார்பட்டா பரம்பரையில் வண்ணங்கள், காலகட்டத்தின் மறு உருவாக்கம், உடைகள் என்று விண்டேஜ் தன்மை கொண்ட காட்சி அழகியல் அட்டகாசமாக கொண்டு வரப்பட்டிருக்கும்.
பாக்ஸிங் சீக்குவன்ஸ்களின் பல்வேறு கதாபாத்திரங்களின் வெவ்வேறு எக்பிரஷன்கள் முதல் கொண்டு சண்டை காட்சிகள் வரை அனைத்தையும் எடிட்டிங்கில் இணைத்து ஒரு முழுமையை கொண்டு வந்திருப்பது என்று உலக திரைப்படங்களின் வரிசைகளில் தயக்கமின்றி சார்பட்டா பரம்பரையை வைக்க முடியும்.
நட்சத்திரம் நகர்கிறது படம் நாடக உலகம் என்கிற விஷுவல் ஆர்ட் சார்ந்த பின்னணி என்பதால் அதில் காட்சி அழகியலின் அதிகபட்ச சாத்தியங்களை முயன்றிருப்பார் ரஞ்சித்.
என்னளவில் அந்த படம் கிட்டத்தட்ட ஒரு நவீன ஓவியத்திற்கு நிகரான காட்சி அடுக்குகளால் ஆனது. ஒரு கனவு போல விரியும் அதன் பல்வேறு காட்சிகள் ரெனே என்கிற கதைநாயகியின் மன ஓட்டங்களை ஒரு ஓவியனுக்கு உரிய வகையில் காட்சி படுத்தப்பட்டிருக்கும்.
தங்கலான் ஒரு மேஜிகல் ரியலிச ஓவியத்தொகுப்பு போல உருவாக்கப்பட்ட படம் என்றே தோன்றும்.
அதன் நிலப்பரப்பு, கதைமாந்தர்களின் வடிவமைப்பு, தங்கம் என்னும் தனிமத்தை பல்வேறு வடிவங்களில் காட்சி படுத்தியிருந்த விதம் அதன் உச்சகாட்சியில் இரவு பகல்களை கலந்து காட்சிப்படுத்தி இருந்த சட்டகங்கள் என அப்படம் முழுக்க முழுக்க ஒரு நவீன ஓவியனின் மனவெளியிலிருந்து உருவான சினிமாவாகவே இருந்தது.
ரஞ்சித்தின் சினிமாக்களில் குறியீடுகளோ உருவகங்களோ “இதோ ஒரு குறியீடு வைத்திருக்கிறேன் பார்” என்பது போல தனியாக உருவாக்கப்பட்டிருக்காது. காட்சியின் போக்கில் அவை இயல்பாக கலந்திருக்கும்.
இவை மட்டும் இல்லாமல் ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பில் வெளிவந்த படங்களான மாரிசெல்வராஜின் ‘பரியேறும் பெருமாள்’ அதியன் ஆதிரையின் இரண்டாம் ‘உலகப்போரின் கடைசி குண்டு’, ஃப்ராங்கிளின் ஜேக்கப்பின் ‘ரைட்டர்’,
தமிழ் இயக்கத்தில் வந்த ‘சேத்துமான்’ மற்றும் சோதனை முயற்சியாக வெளிவந்த ‘குதிரைவால்’ போன்ற எல்லா படங்களும் அதன் காட்சி அழகியல் மற்றும் காட்சி குறியீட்டு தன்மைகள் என்று ஒரு ‘விஷுவல் லேண்ட்ஸ்கேப்’பை தமிழ் சினிமாக்களில் உருவாக்கும் வகையில் அமைந்தவை என்று சொல்வேன்.
வர்ண அமைப்பை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கு வெளியே சாதியற்றவர்களாக வரலாற்றில் இருந்து வரும் தலித்துகள் அமெரிக்க கறுப்பினத்தவர் போன்று தங்களுக்கென்று தனித்த அழகியல் உணர்வுகளை கொண்டிருக்கிறார்கள்.
அது ஒரு வகையில் விமர்சனமும் எதிர்ப்பும் கொண்ட கலை வடிவமாக இருக்கிறது. கறுப்பினத்தவரின் ஓவிய, இசை, சினிமா காட்சி படுத்தல்களில் அவ்வகையான அழகியல் வெளிப்படுவதை பார்க்கிறோம்.
ஒரு வகையான ‘கவுண்டர் கல்ச்சர்’ அது. அதற்கு இணையானது இங்கே தலித் கலை அழகியல். அது ஒரு வகைமையாக கலைக்குள் இயங்கும்.
தமிழ் சினிமாவில் அது ரஞ்சித்தில் துவங்கி பல கலைஞர்கள் வழியாக பயணிக்கும் ஒன்றாக இருக்கிறது.
நான் இங்கே ஒரு ஓவியனாகக் காட்சி அழகியலை மட்டுமே சுட்டிப் பேசுகிறேன். ஆனால் காட்சி அழகியல் என்று மட்டும் இல்லாமல் மேலே சொன்ன ரஞ்சித்தின் திரைப்படங்கள் வெகுஜன சினிமாக்களின் நிர்பந்தங்களை தாண்டி,
திரைக்கதை உருவாக்கத்திலும், படத்தொகுப்பு, இசையை, ஒலிகளை பயன்படுத்திய விதம், என்று சினிமா அழகியலின் எல்லா வடிவத்திலும் முழுமையை நோக்கி நகரும் / நகர முயலும் சினிமாக்களாகவே இருக்கின்றன.
அவற்றின் உள்ளடக்கங்களும், கதாபாத்திர சித்தரிப்புகளும் மிகச்சரியான அரசியல் சரித்தன்மைகளுடன் கையாளப்பட்டிருக்கும்.
சினிமா என்பது நொடிக்கு 24 சட்டகங்களைக் கொண்டு அசையும் ஓவியம் என்பாரகள்.
அவ்வகையில் ரஞ்சித் என்னும் ஓவியக் கலைஞனின் திரைப்படங்கள் தலித் உள்ளடக்கம் சார்ந்த அதன் அரசியலுக்காக மட்டுமின்றி அதன் கலை நுட்பங்களுக்காகவும்,
தமிழ் சினிமா காட்சி அழகியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தக்கூடியதாகவும் அமைந்து கொண்டாடப்பட வேண்டிய திரைப்படங்களாகவும் இருக்கின்றன என நினைக்கிறேன்.
நன்றி: பேஸ்புக் பதிவு