கார்த்தீஸ்வரன் நாயகனாக நடித்து எழுதி இயக்க, லிவிங்ஸ்டன், ஆதவன், அகல்யா வெங்கடேசன், ஸ்ரீநிதி, மிருதுளா சுரேஷ், தீக்ஷ்ன்யா, மஞ்சு நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’.
ஆர்.கே. புரொடக்ஷன்ஸ் சார்பில், ராதாகிருஷ்ணன், கே.எம்.பி புரடக்ஷன்ஸ் சார்பில் புவனேஸ்வரன், எஸ்.பி.எம் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஷாஜு மற்றும் ஜோதிலட்சுமி ஆகியோர் தயாரித்துள்ளனர்.
சபலப் பேர்வழி ஒருவன் (பிளாக் பாண்டி) முகநூலில் அறிமுகமாகும் பெண் ஐ.டி.யோடு நிர்வாண வீடியோ காலில் இணைய, அவளது நிர்வாண உருவத்தைப் பார்த்து, தானும் நிர்வாணமாக, அதை ரெக்கார்ட் செய்து,
“பணம் தராவிட்டால் உன் நிர்வாணத்தை உனது போனில் உள்ள எல்லா நம்பருக்கும் அனுப்புவேன்” என்று அந்தப் பக்கத்துக் குரல் மிரட்ட, ஐம்பதாயிரம் பணம் கொடுத்துத் தப்பிக்கிறான் அந்த நபர்.
அவனைப் போல பலபேரிடம் இருந்து பல லட்சங்கள்.
வயதுக்கு வந்த இரண்டு பெண்களின் அப்பா (லிவிங்ஸ்டன்) பணத்தை அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு புது நிதி நிறுவனம் ஒன்றில் போட, அவர்கள் ஏமாற்றி விட்டுப்போக, அதிர்ச்சியில் அவரும் அவரது மனைவியும் மரணம் அடைய, அவர்களது பெண் பிள்ளைகள் அனாதை ஆகிறார்கள்.
இப்படிப் பல பேரை ஏமாற்றி பல நூறு கோடிகள்.
இருபத்தைந்து ரூபாய்க்கு போன் தருவதாக விளம்பரம் கொடுக்க, அதை நம்பி பல கோடி மக்களும் ஆளுக்கு ஐந்து போனுக்கு பணம் அனுப்ப எல்லா பணத்தையும் அடித்துக் கொண்டு கிளம்பி, அதன் மூலம் பல ஆயிரம் கோடிகள்.
ஒரு பெண்ணை (மிருதுளா சுரேஷ்) காதல் என்ற பெயரில் நம்ப வைத்து ஏமாற்றி ஐநூறு கோடி.
இப்படி ஏமாற்றிக் கொள்ளை அடிக்கும் கூட்டத்தின் தலைவன் ஒருவன் (கீர்த்தீஸ்வரன்).
அவன் 7500 ரூபாய் சம்பளத்துக்கு வேலை செய்தபோது, மினிமம் பேலன்ஸ் தேவை இல்லாத தனது வாங்கி அக்கவுண்ட்டில் வைத்திருக்க, பேங்க் லோன் தவணைக்கான பணம் மட்டும் அக்கவுண்ட்டில் இருக்க,
வங்கி திருட்டுத்தனமாக இருபத்தைந்து ரூபாயை எடுத்து விட, லோன் கட்ட பணம் இல்லாமல் பெரும் இழப்பை சந்தித்தவன் அவன்.
பின்னர் ஹேக்கிங் கற்று, ஒவ்வொரு அக்கவுண்ட்டில் இருந்தும் இருபத்தைந்து ரூபாயை மட்டும் எடுத்தே பல லட்சம் சம்பாதிக்கிறான்.
அதன் பின் பெண் சபலம் உள்ளவர்கள், அதிக வட்டிக்கு பேராசைப்படும் நபர்கள், கொடுக்க முடியாத மலிவு விலையில் ஒரு பொருள் கிடைக்கும் என்று யாரவது சொன்னால் அதன் சாத்தியம் பற்றி யோசிக்காமல் கண் மூடித்தனமாக பணம் போடும் நபர்கள், இரிடியம், மண்ணுளிப் பாம்பு என்று அவர்களிடம் அவன் கொள்ளை அடிக்கிறான்.

அவர்கள் யாருமே நல்லவர்கள் இல்லை எனும்போது நான் செய்வதில் என்ன தப்பு? என்பது அவன் வாதம்.
இந்த நிலையில் பணம் இழந்த பெண்ணின் தோழி ஒரு பெண் போலீஸ் (ஸ்ரீநிதி).
காதல் என்ற பெயரில் ரூ. 500 கோடியை இழந்தவள், தனது தோழியான பெண் போலீஸ் அதிகாரி (ஸ்ரீநிதி) ஒருவரிடம் முறையிட, அவள் அவனைப் பிடிக்க வலை விரித்தால்,
”போலீஸ், வக்கீல்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஆள்வோர் எல்லோரும் என் பணத்துக்கு அடிமைகள், நீதிபதியை விலைக்கு வாங்குவேன். மீறி ஜெயிலுக்குப் போனாலும் ஷாப்பிங் போய் வருவேன்” என்கிறான் அவன்.
பெண் போலீசால் அவனை என்ன செய்ய முடிந்தது என்பதே படம்.
மக்களுக்கு விழிப்புணர்ச்சி தர வேண்டும் என்ற நிலையில் இது சொல்லப்பட வேண்டிய கதைதான். எத்தனை தடவை சொன்னாலும் தப்பில்லை.
நடித்து இயக்கி இருக்கும் கீர்த்தீஸ்வரன் பெரிதாக பாராட்டும்படி இல்லை என்றாலும் ஓகே.
அவ்வப்போது வசனம் சிறப்பாக இருக்கிறது. ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. ராஜேஷ்குமாரின் ஒளிப்பதிவும் சஜின் படத்தொகுப்பும் சராசரிக்கு மேல்தான்.
பணம் போன அதிர்ச்சியில் தந்தை, தாய் இறந்து போக, அந்தப் பெண் குழந்தைகள் கதறும் காட்சி அடிவயிற்றைக் கலக்குகிறது. டைரக்டர் அசத்தி இருக்கும் பகுதி அது.
இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக ஐம்பது கோடி ரூபாயை மூன்றடி நீள இரண்டடி அகல, இரண்டடி உயர பையில் வைத்துக் கொடுக்கிறார்கள்.
இரண்டாயிரம் ரூபாய் கட்டுகளில் ஐம்பது கோடி என்றால் 2500 கட்டுகள். அவற்றை எப்படிங்க மூன்றடி நீள இரண்டடி அகல, இரண்டடி உயர பையில் வைத்துக் கொடுக்க முடியும்?
இன்னொரு காட்சியில் அதே பையில் நானூறு கோடி ரூபாயை வேறு கொடுக்கிறார். அவ்வளவு ‘நேர்த்தியோ நேர்த்தி’!

என்னதான் டிரஸ்ட் என்றாலும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட டிரஸ்ட்டில் இப்படி ஆயிரம் கோடி, ரெண்டாயிரம் கோடி ரூபாயை எல்லாம் போட்டால் இன்கம்டாக்ஸ் டிபார்ட்மென்ட் கவனிக்காதா?
இப்படிப்பட்ட ஸ்கேம்கள் நடப்பது எல்லாம் உண்மைதான்.
ஆனால், அவை எப்படி நடக்கிறது என்று உண்மைக்கு நெருக்கமாக ஒழுங்காக ஸ்டடி செய்யாமல் காட்சிகளை அமைத்திருப்பது கொடுமை.
அதையெல்லாம் விட இந்தப் படத்தை முடித்து இருக்கும் விதம் ரொம்ப அநியாயம்.
இந்தப் படத்தைப் பார்க்கும் ஒருவன், ஏமாற்றி தப்பிப்பது இவ்வளவு ஈஸியா என்று எண்ணி, அரைகுறையாக ஏதாவது பண்ணி, லாக்கப்பில் லாடம் காட்டிக் கொண்டு கதறுவான்.
நிர்வாகம் பொறுப்பல்ல… படத்தின் தரத்துக்கு யாரும் பொறுப்பல்ல!
– சு. செந்தில் குமரன்