Take a fresh look at your lifestyle.

நாயகன்: தமிழ் சினிமாவின் ‘நாயகர்’களில் ஒருவன்!

108

கமல்ஹாசன், சரண்யா, ஜனகராஜ், நாசர் நடிப்பில் பாலகுமாரன் வசனத்தில், மணிரத்னத்தின் எழுத்து இயக்கத்தில் 1987 அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாகி சரித்திரம் படைத்த ‘நாயகன்’ இப்போது சில தொழில்நுட்ப மாற்றங்களுடன் ரிலீஸ் ஆகி இருக்கிறது.

எப்படி இருக்கிறது நாயகன் 2025?

நாயகன் படத்தின் கதை சொல்ல வேண்டுமா என்ன? யாருக்குத்தான் தெரியாது?

எனவே கதைக்குப் பதில் நாயகன் உருவாக்கத்தில் நடந்த சில சுவையான சம்பவங்களைப் பார்ப்போம்.

1972 வெளிவந்த The Godfather என்ற அமெரிக்க கேங்ஸ்டர் படத்தின் கதையை சிவாஜியை வைத்து எடுக்க விரும்பிய முக்தா சீனிவாசன், சிவாஜியிடம் சொல்ல சிவாஜியும் ஓகே சொன்னார்.

அந்தப் படத்தில் கமல்ஹாசனும் அமலாவும் நடிப்பதாகவும் இருந்தது. ஆனால், கமலின் வெல்விஷர் அனந்து, அதில் சிவாஜிக்குதான் முக்கியத்துவம் இருக்கும் என்று சொல்லி கமல்ஹாசனை நடிக்க வேண்டாம் என்று கூறி விட்டார்.

முக்தா சீனிவாசனிடம் கமல் மணிரத்னம் பற்றிச் சொல்ல, மும்பையைக் கட்டி ஆண்ட வரதராஜ முதலியார் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து மணிரத்னம் சொன்ன கதை முக்தாவுக்குப் பிடிக்க, நாயகன் கருவானது.

மணிரத்னமும் பி.சி.ஸ்ரீராமும் சென்னையின் சாலைகளில் சைக்கிள் ரிக்ஷாவில் பயணித்துக் கொண்டே இந்தப் படத்தின் காட்சிகளைப் பேசி இருக்கிறார்கள்.

வேலு நாயக்கர் மகளாக நடிக்க முதலில் பேசப்பட்டது கமலின் அண்ணன் சாருஹாசனின் மகளான சுஹாசினியே. ஆனால் மணிரத்னம் அதை விரும்பவில்லை. எனவே கார்த்திகா வந்தார்.

அப்போது மணிரத்னத்துக்கும் சுஹாசினிக்கும் கல்யாணம் ஆகவில்லை.

ஆகி இருந்தால் கார்த்திகா நடித்திருக்க முடியாது.

ஒரு காட்சியில் கமல் ஒரு முகபாவனையைக் கொடுக்க, உடனே மணிரத்னம்,

“நீங்க கொடுத்தது வெஸ்டர்ன் சினிமா முகபாவனை. எனக்கு அது வேண்டாம். நம்மூர் மனிதர்களின் முகபாவனை வேண்டும்” என்று கூற,

அந்த ஒரு வாசகம் பின்னர் கமல்ஹாசன் கூடவே வந்தது.

அறுபது நாட்கள்… எழுபது பிலிம் ரோல்கள்… அறுபது லட்ச ரூபாய்க்கு படத்தை முடிப்பதுதான் பிளான். ஆனால் ஒரு கோடி வரை போனது.

முதல் பத்து நாட்கள் எடுக்கப்பட்ட காட்சிகள் கமலுக்கு பிடிக்காமல் போனதால், மீண்டும் காட்சிகள் மாற்றப்பட்டது.

படத்தின் சில காட்சிகளில் கமலின் சொந்தத் துப்பாக்கி நடித்திருக்கிறது. விபச்சார விடுதியில் படிக்க ஆசைபடுவதாக சொல்லும் ஹீரோயின் காட்சி முக்தா சீனிவாசன் சொன்னது.

கமல்ஹாசனும் மணிரத்னமும் வரதராஜ முதலியாரைச் சந்தித்து, “நீங்கள் மரணம் அடைந்தால் என்ன நடக்கும்?” என்று கேட்டபோது, அவர் “பீதி, பதற்றத்துக்கு மத்தியில் மக்கள் கலவரம் செய்வார்கள்” என்றார். அதை வைத்து கிளைமாக்ஸ் காட்சிகள் எழுதப்பட்டன.

வேலு நாயக்கர் ரெட்டி சகோதரர்களைக் கொல்வது, மகனின் மரணம், அவன் உடல் பார்த்து நாயக்கர் கதறுவது, போலீஸ் எஸ்.பி வந்து தன் மகளைக் கற்பழித்த அமைச்சர் மகனைக் கொள்ளச் சொல்வது எல்லாம் The Godfather படத்தில் இருந்து எடுக்கப்பட்டவையே.

கடலுக்குள் போதைப் பொருளை உப்பு மூட்டையில் கட்டி தண்ணீரில் போட்டுப் பிறகு உப்பு கரைந்து மேலே வரும் உத்தி Once Upon a Time in America என்ற படத்தினுடையது.

இளையராஜாவின் நானூறாவது படம் நாயகன். “நிலா அது வானத்து மேலே” பாடல் இளையராஜா எழுதியது.

காவியமான ”தென் பாண்டிச் சீமையிலே…” பாடல் முதல் கொண்டு மற்ற அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் புலவர் புலமைப்பித்தன்.

சென்சாரில் பிரச்னை!

வாழும் மனிதரைப் பற்றிய படம் என்பதால் திரையிடக் கூடாது என்கிறது தணிக்கைத் துறை. மும்பை ரிவைசிங் கமிட்டிக்கு முக்தா சீனிவாசன் போக, அவர்கள் வரதராஜ முதலியாரிடம் இருந்து சம்மதக் கடிதம் வாங்கி வரச் சொன்னார்கள்.

உடனே கொடுத்தார் வரதராஜ முதலியார்.

தமிழகத்தில் இருநூறு நாட்கள் ஓடிய நாயகன், தமிழிலேயே ஆந்திரா, கர்நாடகாவில் நூறு நாள் ஓடியது.

பின்னர் நாயகுடு என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்யப்பட அதுவும் நூறு நாள்.

படத்தைப் பார்த்த வரதராஜ முதலியார், “நான் எதிர்பார்த்தது எல்லாம் படத்தில் வரவில்லை.

ஆனால், படத்தைப் பார்க்கும்போது, நான் இன்னும் சிறப்பான வாழக்கை வாழ்ந்திருக்க முடியும் என்ற உணர்வைப் படம் தருகிறது” என்றார்.

டைம்ஸ் அமெரிக்க இதழின் ‘எக்காலத்திலும் சிறந்த நூறு படங்கள்’ பட்டியலில் The Godfather படமும் இருக்கிறது. நாயகன் படமும் இருக்கிறது.

“The Godfather பாணியில் ஓர் அற்புதமான கேங்க்ஸ்டர் காவியம் நாயகன்” என்று பாராட்டியது டைம்ஸ் இதழ்.

இங்கிலாந்து பத்திரிகையாளர் Phil Hardy தனது பிரிட்டிஷ் ஃபிலிம் கம்பானியன் என்ற நூலில், “The Godfather படத்தை அடுத்து வந்த படங்களில் நாயகன்தான் சுவாரஸ்யமானது” என்கிறார்

சரி, இப்போது வந்திக்கும் நாயகன் எப்படி இருக்கிறது?

‘நாயகன்’ படத்தின் மாபெரும் அழகுகளில் ஒன்று அந்தப் படத்தின் ஃபிரேம்கள். படம் வந்தபோது இருந்த அதே 35 MM படமாகவே பொலிவு கூட்டி வெளியிட்டிருந்தால்தான் அதை உணர முடியும்.

சினிமாஸ்கோப்பாக ஆக்குகிறோம் என்று பண்ணி, பல காட்சிகளில் தலை கட் ஆகிறது. படத்தின் அற்புதமான காட்சித் தோற்றங்களில் தலையோ, காலோ வெட்டப்பட்டது போல இருப்பது கொடுமை.

முக்கியமாக மகன் மரணத்தில் நாயக்கர் அழும் காட்சி, மகளோடு வீட்டில் சண்டை போடும் காட்சி ஆகியவை அந்தப் பின்புலத்தின் வலுவை இழந்து நிற்கிறது.

பாடகர்கள் வரிசையில் கமல்ஹாசன் பெயரைக் கமலகாசன் என்று போட்டு இருக்கிறார்கள்.

“தென்பாண்டிச் சீமையிலே” பாட்டுக்கான ஆலாபனையை இளையராஜாவின் காந்தக் குரல் துவங்கும்போது உடம்பு சிலிர்க்கிறது.

இந்தப் படத்தின் பின்னணி இசை இன்றும் நாளையும் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, இசையமைப்பாளர்களுக்கும் ஒரு மாஸ்டர் கிளாஸ்.

தான் ஒரு மேஸ்ட்ரோ என்று ராஜா அப்போதே நிரூபித்திருக்கிறார். புரிந்துகொள்ள நமக்குத்தான் பல வருடங்கள் ஆனது.

“நாங்கள்தான் திரைப்பட விமர்சனத்தின் மாஸ்டர்” என்று கூறிக் கொண்டிருந்த ஒரு பிரபல வார இதழ், தனது விமர்சனத்தில் கமல், மணிரத்தனம் ஸ்ரீராமை மட்டும் பாராட்டிவிட்டு, ‘இளையராஜாவின் நானூறாவது படமாம்.

டைட்டிலில் மட்டும்தான் தெரிகிறது’ என்று அபத்தமாக வன்மமாக விமர்சனம் எழுதியதை நினைத்து இப்போதும் கோபம் வருகிறது.

கமல்ஹாசனின் நடிப்பை இன்னும் வியந்து பார்க்க முடிகிறது. சிறுசிறு முகபாவனைகள் கூட இப்போதும் பிரம்மிக்க வைக்கிறது.

பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு இன்னும் படித்து முடிக்கப்படாத கவிதை போலவே இருக்கிறது.

ஃபிலிமில் எடுக்கப்பட்ட படம் என்பதால் ஆழமான பின்புல வித்தியாசத்தில் தெளிவாக எடுக்கப்பட்ட காட்சிகள் பிரம்மிக்க வைக்கின்றன.

ஃபிலிம் போய் டிஜிட்டல் வந்த பிறகு காட்சியின் அழகியல் எப்படி நாசமாகப் போயிருக்கிறது என்று தெரிகிறது.

மணிரத்னம் மேக்கிங் வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்கிறது.

பாலகுமாரனின் வசனங்கள் ஒரு சில காட்சிகள் தவிர (பச்சைப் புள்ளையை அடிக்கிறாங்களாம் அடிக்கிறாங்க… இப்படி ஒரு சில காட்சிகள் தவிர) படத்துக்கு புது பரிமாணம் தருகின்றன.

இந்த மணிரத்னமும் இதே கமல்ஹாசனும் சேர்ந்துதான் ‘தக் லைஃப்’ படத்தை எடுத்தார்களா என்று சந்தேகம் வருகிறது.

நாயகனை இப்போது பெரிய திரையில் பார்ப்பது மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவம்.

பலமுறை பார்த்த படம். எனினும் இப்போது பார்க்கும்போதும் ‘இப்பதான் படம் ஆரம்பிச்சது; அதற்குள் இன்டர்வல் வந்திருச்சே’ என்று தோன்றுகிறது.

படம் முடியும்போது இன்னும் கொஞ்ச நேரம் படம் ஓடக் கூடாதா என்று ஏக்கம் வருகிறது.

நாயகன்… தமிழ் சினிமாவின் நாயகர்களில் ஒருவன்.

– சு.செந்தில் குமரன்