Take a fresh look at your lifestyle.

நா.முத்துக்குமார்-50: மகா கவிஞனை நினைவு கூர்வோம்!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பாடலாசிரியர்களில் ஒருவர் நா.முத்துக்குமார். 1500-க்கும் அதிகமான பாடல்கள், 2 தேசிய விருதுகள், பல மாநில விருதுகள் என்று புகழுடன் இருந்தவர், 2016-ம் ஆண்டு தனது 41 வயதில் திடீரென காலமானார்.

அவர் மறைந்தாலும் அவரது பாடல்கள் காலத்தால் அழியாமல் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாருக்கு ஜீவலட்சுமி என்ற மனைவியும் ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

அவர் மறைந்த காலகட்டத்திலேயே அவருக்கு நினைவேந்தல், பாராட்டு விழா என, அவர் சாதனைகளுக்கு கவுரவம் கிடைக்கப்பட வேண்டும் என்று இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தலைமையில் பல இயக்குநர்கள் நினைத்தனர். ஆனால், பல காரணங்களால் அது நடக்கவில்லை.

இந்நிலையில், ஜூலை 19-ம் தேதி, சென்னை நேரு ஸ்டேடியத்தில் நா.முத்துக்குமாருக்கு ‘ஆனந்த யாழை’ என்ற தலைப்பில் பெரிய இசை நிகழ்ச்சி, நினைவேந்தல் மற்றும் பாராட்டு விழா நடைபெற உள்ளது.

இதில் அவருடன் பணியாற்றிய பல இயக்குநர்கள், நடிகர்கள், இசையமைப்பாளர்கள், சினிமா நண்பர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ் குமார், ஹாரிஸ் ஜெயராஜ், எஸ்.தமன், சந்தோஷ் நாராயணன், விஜய் ஆண்டனி, கார்த்திக் ராஜா மற்றும் நிவாஸ் கே பிரசன்னா என, ஒருசேர ஒரு நிகழ்வில் இசைப் பந்தி வைப்பது இதுவே முதல் முறை.

குரல் வளம் மிக்க கலைஞர்களான சித்தார்த், ஆண்ட்ரியா, திப்பு, உத்தரா உன்னிகிருஷ்ணன், சைந்தவி, ஹரிணி ஆகியோர் தங்களது பங்களிப்பைத் தர இருக்கிறார்கள்.

சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு, ரவி மோகன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த விழா குறித்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் லிங்குசாமி, ரன் படத்தில், “தேரடி வீதியில் தேவதை வந்தால்” என்கிற பாடல் தான் நா.முத்துக்குமார் எனக்காக முதன் முதலில் எழுதிய பாடல்.

மதராசபட்டினம் படத்தில் “பறவை பறந்த பிறகும் கிளையின் நடனம் முடியவில்லை” என அவர் எழுதிய வரிகள் போலதான், அவர் மறைந்தும் இன்னும் அவர் நினைவுகள் மறையாமல் இருக்கின்றன.

ஒரு கட்டத்திற்கு மேல் எழுதுவதற்கு நேரம் இல்லாமல் சொல்லச் சொல்ல எழுதிக்கொள்ளும் அளவிற்கு பிஸியான பாடல் ஆசிரியராக மாறினார்.

எல்லா இசை அமைப்பாளர்களோடும் இணக்கமாக இருந்த ஒரு பாடல் ஆசிரியர். தொடர்ந்து வருடம் தோறும் அதிகப் பாடல்களை எழுதும் பாடல் ஆசிரியராகவும் முத்துக்குமார் இருந்தார்.

அவருக்கான விழாவை அவர் இறந்த அந்த காலகட்டத்திலேயே நடத்துவதற்கு சில முயற்சிகள் எடுத்தோம். ஆனால் இப்போதுதான் அதற்கான நேரம் வந்துள்ளது. அந்த பொறுப்பும் சரியாக இயக்குநர் ஏ.எல்.விஜய்யிடம் வந்திருக்கிறது. வீடு மாறிப்போன ஒரு விருந்தாளி போல தான் அவரது மறைவை நான் பார்க்கிறேன்” என்றார்.

‘கற்றது தமிழ்’ இயக்குநர் ராம் பேசுகையில், “நா.முத்துக்குமார் என் வாழ்க்கையில் மட்டுமல்ல, தமிழ்த் திரை உலகத்திற்கு மட்டுமல்ல.. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தமிழ்த் திரை இசைப் பாடல்களைக் கேட்கக்கூடிய எல்லோருடைய வீடுகளிலும் ஆனந்த யாழை மீட்டிக் கொண்டிருக்கிறார். மீட்டப் போகிறார்.

நா.முத்துக்குமார் யாருடைய சுதந்திரத்திலும் தலையிடவும் இல்லை. முத்துக்குமார் எப்போதும் இமயமலை என்றாலும் தன்னை பனித்துளி அளவே காட்டிக் கொள்வார்.

நான் முதல் படம் எடுக்கக் காரணமாக இருந்தவரே முத்துக்குமார் தான். திரையுலகில் உள்ள நண்பர்கள் யாரைப் பார்த்தாலும் முதலில் பேசுவது முத்துக்குமாரைப் பற்றித் தான் இருக்கும்.” என்றார்.

பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி பேசுகையில், “எனக்குள் சினிமாவுக்குச் செல்லும் ஆர்வத்தைத் தூண்டி வைத்து என்னை சென்னைக்கு அனுப்பி வைத்தது என்னுடைய அண்ணன் தான்.

நான் இயக்குநராக வளர்ந்து தயாரிப்பாளராக மாறிய பின்னர் ஒரு நாள் காஞ்சிபுரத்திலிருந்து நா.முத்துக்குமாரையும் என்னிடம் அழைத்து வந்து அறிமுகப்படுத்தினார்.

அப்போது ஒரு கவிதைப் புத்தகம் வெளியிடும் முயற்சியில் அவர் இருந்தார்.

நா.முத்துக்குமாரைப் பொருத்தவரை அவர் ஒரு ஞானக் கிறுக்கன்.

ஒரு கட்டத்தில் அவர் பேசுவதே பாடல் வரியாகவோ இலக்கியமாகவோ மாறியது.

அம்மாவின் பாசத்தைப் பற்றி பலர் பாடல் எழுதிய நிலையில், அவர் “தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பு முன்னால்” என்ற பாடல் எழுதிய பின்பு தான் அப்பாவின் பாசத்தை பலரும் கொண்டாட ஆரம்பித்தார்கள்.

முத்துக்குமாரைப் பொருத்தவரை தன்னை யாராவது புகழ்ந்தாலும் கூச்சப்படுவார். தனக்கு யாராவது சம்பளம் பாக்கி வைத்தால் அதைக் கேட்பதற்கும் கூச்சப்படுவார்.

இத்தனை ஆண்டுகள் கழித்தும் கூட அத்தனை இயக்குநர்களும் இந்த விழாவை நடத்துவதற்கு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம் என்று சொல்கிறார்களே அது தான் நா.முத்துக்குமாரின் வெற்றி’’ என்றார்.