தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.
நடிகர், இசையமைப்பாளர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பன்முகக் கலைஞராகத் திகழ்ந்தவர். 6 தேசிய விருது, பல மாநில அரசுகளின் விருதுகளைப் பெற்றவர்.
களங்கமில்லாத முகத்தையும், அதிர வைக்காத பேச்சையும் அடையாளமாக கொண்ட ‘பாடும் நிலா’ பாலு, கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார்.
அண்மையில் எஸ்பிபியின் நான்காம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காம்தார் நகர் பகுதியில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் வாழ்ந்து வந்தார்.
‘கடைசி மூச்சு வரை எஸ்பிபி வாழ்ந்த காம்தார் நகர் வீதிக்கு அவரின் பெயரைச் சூட்ட வேண்டும்’ என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலிடம் கோரிக்கை வைத்திருந்தார் எஸ்பிபியின் மகன் சரண்.
இதையடுத்து எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம், காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு ‘எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை’ எனப் பெயர் சூட்டி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தமிழக திரைத்துறையினர் பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
இசையமைப்பாளர் இளையராஜா, தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “என் நண்பன் பாலுவின் நினைவாக, அவன் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சாலைக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை என்று பெயரை மாற்றி வைத்ததற்காக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழக மக்களின் சார்பிலும், திரையுலகத்தின் சார்பிலும், நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என நெகிழ்ந்துள்ளார்.
‘உலக நாயகன்’ கமல்ஹாசனும், முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஒப்பற்ற இசைக் கலைஞரும் எனது மூத்த சகோதரருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயரை, சென்னையில் அவர் வாழ்ந்த தெருவிற்குச் சூட்டி அறிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்” என குறிப்பிட்டுள்ளார்.
“லட்சக்கணக்கான கலை ஆர்வலர்களின் மனதில் இன்றும் வாழும் ஒரு பெரும் கலைஞனுக்குச் செய்யப்பட்டு இருக்கும் மரியாதை இது – பாலு அண்ணாவின் ரசிகர் கூட்டத்தில் ஒருவனாக என் பாராட்டுகளும் நன்றியறிதல்களும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு உரித்தாகட்டும்” என கமல்ஹாசன் தனது பதிவில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
– பாப்பாங்குளம் பாரதி