Take a fresh look at your lifestyle.

தமிழ்த் திரையின் தரத்தை உயர்த்திய பாடினி!

முனைவர் மு.இராமசுவாமி

மே1, 2025 இல், தொழிலாளர் தினத்தில் வெளிவந்த ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்பட வரிசையில், அதே மாதிரி, ஆங்கிலத் தலைப்பைச் சூட்டிவந்து, இங்குக் கெட்டிமேளம் கொட்டிக் கொண்டிருக்கிற இன்னொரு தரமான தமிழ்த் திரைப்படமாக, ஜூன் 5 இல் திரையிறங்கித் தன் சொந்தக் காலில் திமிர்ந்து நிற்கிறது ‘மெட்ராஸ் மேட்னி’!

‘பேமிலி’ அளவிற்கு ‘மேட்னி’க்கு ஊடக விளம்பர முன்னெடுப்புகள் அதிகம் இல்லை என்பதும், அதன் நெறியாளுநர் அபிஷன் ஜீவிந் மற்றும் அதில் நடித்தவர்கள் கொண்டாடப்படுகிற அளவிற்கு, ‘மெட்ராஸ் மேட்னி’யின் நெறியாளுநர் கார்த்திகேயன் மணி, அதில் நடித்தவர்கள் ஏன் கொண்டாடப்படவில்லை என்பதும் எனக்குத் தெரியவில்லை.

அபிஷன் ஜீவிந் / கார்த்திகேயன் மணி இருவருக்குமே இதுதான் முதல் படம். திரை ஜாம்பவான்கள் எவரிடமும் இவர்கள் உதவி நெறியாளர்களாகப் பணி புரிந்ததாகவும் தெரியவில்லை.

நல்ல திரைப்படங்களையே தங்களுக்கான ஜாம்பவான்களாக ஆக்கிக் கொண்டிருக்கின்றனர் என்பது, கதை சொல்லும் தெளிவில், இவர்களின் முதல் முயற்சிகளைப் பார்க்கையில் தெரிகிறது.

திரைத் தேடலுடனும், சமூகப் பொறுப்புடனும், அழகிய லாயும், திரைப் படைப்பினை அணுக முனையும் ஆற்றல் படைத்த, இம்மாதிரியான இளைஞர்கள், புதிய படைப்பாளர்கள் மீது, பெரும் நம்பிக்கை படர ஆரம்பித்திருக்கிறது!

எனவே, என்னை வசப்படுத்தி இருக்கிற, ‘மெட்ராஸ் மேட்னி’ குழுவையும், அதன் நெறியாளுநரையும், தயாரிப்பாளரையும் மனம் திறந்து கொண்டாடத் தோன்றுகிறது.

யாருடைய கைகாட்டுதலுமின்றி, இந்தப் படத்தைப் பார்க்க, எதேச்சையாக எனக்கு ஞானம் அமைந்துவந்ததென்பதேகூட, ஒரு கதைதான்!

எளிமையான படமான ‘டூரிஸ்ட் பேமிலி’, பலநூறு கோடிகளைக் கொட்டி, அதே நாளில் வெளியாகி, மக்களின் பெரும் கசையடிக்கு உள்ளான ‘ரெட்ரோ’ திரைப்படத்தைப் பேசாப் படமாய்ப் பின்னுக்குத் தள்ளி வைத்திருந்ததைப்போல்,

‘மெட்ராஸ் மேட்னி’யும்,  பலநூறு கோடியில் பிருமாண்ட ஊடக வெளிச்சத்தைத் திசையெங்கும் பரப்பி, ஜூன் 5- ல் வெளியான ‘தக் லைஃப்’ படத்தையும் பேச்சு மூச்சின்றி ஆக்கியிருந்தது.

பரபரப்பின்றி, விளம்பரப் பக்கபலம் எதுவுமின்றி, பேசப்பட வைக்கிற பிருமாண்டப் பின்புலங்கள் ஏதுவுமேயின்றி, கதை சொன்ன முறையில், ‘தக் லைஃப்’ படத்தை விமர்சகர்களின் தெருக்கோடியில் கொண்டுபோய் நிறுத்தி இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்தப் படங்களில் பொதிந்து கிடக்கிற உழைப்பை, மட்டம் தட்டுவது இங்கு என் வேலை இல்லை. உழைப்பு, ‘விழலுக்கு இறைத்த நீரா’ய் விரயமாகி இருக்கிறது, என்பதைச் சொல்லாமலும் இருக்க முடியவில்லை.

பட்டுப் பீதாம்பரங்களையே பிரபலங்கள் போர்த்தி நின்றாலும், திரைக்கதை, ஆரோக்கியமாக இல்லையென்றால், மக்களே அதை ‘அடிமாடா’க்கி விடுகின்றனர் என்பதைச் சொல்ல வேண்டும்.

‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படத்தின் விளம்பரச் சுவரொட்டிகள், பளபளப்புப் பூச்சின்றி, முகத்தோல் பொரிந்து, போஷாக்கற்று, பட்டினிக் கமறலுடன், அரதப் பழசாய், மெட்ரோ ரயிலின் அதிநவீனத்திற்குக் கொஞ்சமும் தொடர்பே இல்லாமல்,

அருகில் குடை சாய்ந்திருக்கிற ஒரு பழைய குப்பை வண்டியைப் போலவே, வடபழனி மெட்ரோ பாலத்தின் கட்டுமானத் தூண்கள் ஒவ்வொன்றிலும் ஒட்டப்பட்டு, போவோர் வருவோரைப் பாவமாய்ப் பார்த்துக்கொண்டு, விழிபிதுங்கி நின்றிருந்தன.

அவை, ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் இரண்டாம் வாரச் சுவரொட்டிகள்!

அதில், தெரிந்த முகங்களாய், காளி வெங்கட், சத்யராஜ் தவிர எவரும் எனக்குத் தெரியவில்லை. பிரம்மராயன் என்கிற பரமனின் நெறியாளுகையில் உருவாகி,

இன்னும் வசந்தத்தையே எட்டிப் பார்க்காத ‘பப்ளிக்’ திரைப்படத்தில், காளி வெங்கட்டுடன் சேர்ந்து நடித்த காலத்தை நினைத்தபடி, நல்ல படங்களைத் தேடிப் பண்ணுகிற காளி வெங்கட்டுக்காகப் பார்க்கலாம் எனத் தோன்றியது.

திரையரங்கிற்குள் நுழைந்தால், ‘புரட்சித் தமிழர்’ சத்யராஜ், நாற்காலியில் தனியாக அமர்ந்து என்னமோ பேசிக் கொண்டிருக்கிறார்.

அவர், ஆங்கில மோகம்கொண்ட, அறிவியல் புனைகதைகள் எழுதுகிற எழுத்தாளர் என்று புரிந்துகொள்கிறேன். அவரிடம் ஒரு பெண் பொதுவுடைமைத் தோழர், ‘மக்கள் பிரச்சினையைப் பேசுகிற ஒரு கதையை’ எழுதச் சொல்கிறார்.

அதற்காக, கதை தேடி அவர் பயணப்படுவதும், டாஸ்மாக்கில் சந்திக்கிற ஆட்டோ கண்ணனின் கதையாக அது விரிவதும் ரசிக்கும்படியாக இருக்கிறது.

அப்போதைக்கப்போது, கதாசிரியர் சத்யராஜின் குரல், கதையின் கண்ணிகளைக் கோர்க்க, அங்கங்கு, கட்டியக்காரனாகியும் இருக்கிறது.

அது, கதையைக் காதால் கேட்டும், கண்ணால் பார்த்துமே, நம்மைக் கவனிக்க வைக்கிறது. அதன்பின், திரைப்படமே கைபிடித்துக் கதைக்குள் கூட்டிச் சென்றது, வித்தியாச அனுபவமாயிருந்தது.

படத்தின் எழுத்தும், கதையை நகர்த்தக் கைகொடுத்த படத்தின் தொகுப்பும், காட்சிகளை வாழ்வின் கரைதலாய்க் கோர்த்த, மனசை நிறைத்த ஒளிப்பதிவும், மனசுக்குள் மத்தாப்புகளைக் கொளுத்திப் போட்ட, கதை மாந்தர்களின் மனத் தெறிப்புகளும்,

நெஞ்சத்தின் அதிர்வுகளை மெல்லமாய் வருடும் இசையும் – இசைக்கும் சிநேக வரிகளும் – இவற்றை, வாழ்வின் கோலமாக்கிய படத்தின் நெறியாளுநரின் கதை சொல்லும் முதிர்ச்சியும்,

அன்பை வெளிக்காட்டுதலில் அந்தமிலாக் குணமாறுபாடுகள் கொண்ட, எத்தனையெத்தனை நல்ல மனிதர்களைப் படத்தில் சந்தித்துப் பிரிகிறோம் என்கிற ஆச்சரிய மகிழ்ச்சியை எனக்குத் தந்தது.

எழுந்து நின்று கைதட்ட, மனசு, பத்தாயத்திற்குள்ளிருந்து மேலெழும்பி வந்திருந்தது. அந்த மனநிலையை, எந்த அறிமுகமுமற்ற ஒருவரின் படம் தருவதென்பதே சிறப்பு! அதுதான், கதை சொன்ன முறையின் சாகசம்!

எழுந்து நின்று, வெள்ளித்திரை வெள்ளையாகும் வரை, பலவித யோசனைகளுடன், பெயர்களுக்கு மரியாதை செலுத்தியபடி, கனவுப் பட்டறையில் செதுக்கப்பட்டிருந்த உண்மை மனிதர்களை அசைபோட்டபடியே, அரங்கைவிட்டு நடக்கத் தொடங்கினேன்.

தூறலில், ரோடும் ஈரமாகி இருந்தது, என் மனசைப் போலவே!

நீண்ட காலங்களுக்குப் பிறகு, இயல்பான மனிதர்களைப் பக்கத்திலிருந்து பார்த்த உணர்வைத் திரைப்படம் உள்ளேற்றித் தந்திருந்தது.

நடிகர்கள் நடித்து வெளிவந்திருந்த பல படங்களையும் பார்த்து வளர்ந்திருந்த எனக்கு, மனிதர்கள் நடித்து வெளிவந்த ஒரு படமாயிருந்தது இது!

பிரௌனி’ நாய் உட்பட, யாருமே நடித்ததாகத் தெரியவில்லை. அத்தனைப் பாந்தமாய் அனைவரும் பாத்திரத்திற்குப் பொருந்தி இருந்தனர்.

இயல்பாகவே நாம் ஒவ்வொருவரும் கடந்து வந்திருந்த, அனுபவித்திருந்த இன்னொரு உலகை, அவர்கள் நமக்குக் காட்டிச் சென்றனர்.

எல்லா வயது ஆண், பெண்களுக்கும், அவரவர்களின் ஒவ்வொரு பருவங்களையும், மகள், மகன், அம்மா, அப்பா, அந்தந்த வயது நண்பர்கள் என்கிற பாத்திர வார்ப்புகளையும்,

அவர்களின் அப்போதைய பிரச்சனைகள் என்று அவர்கள் கடந்து செல்கிற அவர்களின் ஒவ்வொரு காலத்தின் அனுபவங்களையும், இன்னொரு கதையாய், நம் உள்ளுக்குள் கிளறி விட்டுக் கொண்டே இருக்கின்றன.

ஆணோ, பெண்ணொ, எந்த வயதுக்காரரும், இந்தக் கதைக்குள், தங்களைப் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடிகிற ஒரு கதை!

சனாதனத்தால் உருவாக்கப்பட்டு, மனிதர்களை உள்ளிருந்தே அறுக்கும் சாதீயச் சாக்கடை நாற்றம், சுயமரியாதையை, சுயசிந்தனையை,

தன்னம்பிக்கையை உருவாக்கித்தரும் கல்வி அக்கறை, குடும்பச் சிலுவையைச் சுமக்க, உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் பொறுப்பும், கடமையும், விட்டுக் கொடுத்தலும், ஒரு மகன், தன் தந்தையை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டியதிருக்கிறது;

மகள், எப்படித் தன் பெற்றோர்க்குத் தன்னைப் புரியவைக்க வேண்டியதிருக்கிறது; பெற்றோர் எப்படித் தங் கள் குழந்தைகளுக்குத் தங்களைப் புரியவைக்க வேண்டியதிருக்கிறது;

தலைமுறைகளுக்கு இடையில் இருக்கும் இடைவெளி எப்படி இட்டு நிரப்பப்பட வேண்டியதிருக்கிறது – என்பதை இந்தப் படம் பேசுகிறது.

புரிதலுக்கான அடிப்படை, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிற அன்புதான் / அன்பு ஒன்றேதான்!

‘சுற்றம் பார்க்கின் குற்றம் இல்லை; குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’ – என்ன அருமையான முதுமொழி!

அன்புதான், தன் சுற்றமாய், எல்லா உயிரிங்களையும் பார்த்துக்கொள்ளத் தூண்டுகிறது.

அன்புதான், இத்தனையையும் இணைக்கும் பஞ்சுச் சங்கிலியாய் நெஞ்சங்களை இறுக்கிக் கட்டிப்போடும் என்பதை, அழுத்தமாகவும் நகைச்சுவையுடனும் சொல்லப் பார்த்து, அதில் வெற்றியும் பெற்றிருக்கிற ‘மெட்ராஸ் மேட்னி’!

பெற்ற குழந்தைகளின் எதிர் காலம் மட்டுமே தங்கள் எதிர்காலமாய், கல்வியே, ஒடுக்கப்பட்ட தங்கள் சமூகத்தின் எதிர்காலமாயும் கருதும் கீழ்த்தட்டு நடுத்தரக் குடும்பத்தின் ஒரு கதை இது!

‘சாதித் தடையில்லை’ என்றதால், திருமணம் பேச, மாப்பிள்ளைக் குடும்பத்தைத் தனியாகச் சந்திக்கிறாள், ஐ.டி.யில் பணிபுரிந்து அயற்பணியாக அமெரிக்கா செல்ல இருக்கிற மகள் தீபிகா, அவர்களால் தினமும் பளபளப்பை ஏற்றிக் கொண்டிருக்கிற தீபிகாவின் ‘டிங்கரிங்’ நிறத்தையும், அம்மா ‘கமல’த்தின் சாதியையும்கூட, பல்லைக் கடித்துக்கொண்டு ஏற்றுக்கொள்ள முடிகிறது.

ஆனால், ஆட்டோ ஓட்டுகிற அப்பா ‘கண்ண’னின் சாதிக்குத்தான், ‘அவர்க’ளின் மனக் கதவு திறப்பதற்கே சங்கடப்படுகிறது என்பதால், மாப்பிள்ளைக்குக் ‘கல்தா’ கொடுத்துவிட்டுத் திரும்புகிறாள் தீபிகா,

படிக்கப்போன சின்ன வயதிலிருந்து, ‘கருப்பி’ எனக் கேலி பேசப்பட்ட தீபிகா அன்றிலிருந்து, அமெரிக்கா புறப்பட்டுப் போகும் இன்றுவரையும், தன்னை ‘வெளுப்பி’யாக்க அத்தனைப் பிரயாசைப்படும் ஒரு பெண்,

அந்த ஆசைக்கு, ஆட்டோ தவணை கட்டத் தாமதமானாலும், அவள் கேட்டதையெல்லாம் வாங்கித் தரும் அவள் அப்பா, அப்பாவின்மேல் அலாதிப் பிரியம் அவளுக்கு, தானுண்டு, தன் ஆட்டோ உண்டு, தன் குடும்பம் உண்டு என்று வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பவர் தீபிகாவின் அப்பா கண்ணன்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், ‘அத்துமீறு; திருப்பி அடி’ என்கிற சூழலுக்குள் தள்ளப்பட்டிராமல், பயந்தவராயும் அப்பிராணியாகவுமே அடங்கி ஒடுங்கியே அவர் இருக்கிறார்.

அப்பாவின் சாதிக்கு ‘அவர்கள்’ முகம் நெளிய ஆரம்பித்ததால், கடைசி வரைக்கும் ‘அவர்க’ளுடன் குப்பை கொட்ட முடியாது என்று மாப்பிள்ளைக்குக் ‘கல்தா’ கொடுத்த விஷயத்தை, அப்பா, அம்மாவிடம் அப்படியே கொட்டிவிடச் சங்கடப்படும் அவள், அப்பாவிடம் அதை, சகஜமாகப் பகிர முடியாமல் போகிறது.

அதனால் சங்கடப்பட்டு, அப்பா, அம்மாவை நேரில் பார்த்து அவர் களை ஆசுவாசப்படுத்த, ஊருக்கு வருகிறார் தீபிகா – இது மகள் தீபிகாவின் கதை!

தீபிகாவின் தம்பி தினேஷ். கண்ணன் – கமலத்தின் மகன். சிறு வயதிலேயே, பொங்கலுக்குப் புதுச் சட்டை வாங்கித் தர முடியாத அப்பாவின் மீதான கோபத்தில், யாருக்கும் அடங்காத, தீபிகாவிற்கு மட்டும் மடங்குகிற, உறவுக்கார முரட்டுப் பையனுடன் சேர்ந்து மாஞ்சா தயாரிக்க, ‘நாய்ப் பீ’யைப் பொறுக்கிவந்து கொடுக்கிற அவன், வளர வளர, ‘அடங்க மறுத்து’ அப்பாவிடமிருந்து மன அளவில் அன்னியப்படுகிறான்.

எதையும் சுயமாக முடிவெடுக்காமல், எதுவொன்றுக்கும், பட்டையும் கொட்டையுமாய்த் திரியும் ‘ஊறுகாய்’ மாமாவிடம் யோசனை ஒவ்வொன்றுக்குமாய் அப்பிக் கிடக்கிற அப்பாவை அணுஅணுவாய் வெறுக்கிறான்.

தினேஷ் படுத்திருக்கிற கட்டிலின் அருகிருந்து, தோசை சாப்பிடுகிற அப்பாவின் மனசு, ஒவ்வொரு முறையும் மகனின்மேல் கவலைப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.

மகன் தினேஷ், அப்பாவை மதித்ததாகவே தெரியவில்லை. பிறப்பால் ஊரே அவமானமாய்ப் பார்க்கையில், பெற்ற பிள்ளைதானே என்று, தன் நிலையறிந்து பொறுத்துப் போகிறான், கண்ணன்!

கல்லூரிக்கு விண்ணப்பிக்கிற நிலையில், செல்பேசியும் கையுமாக, வீட்டுக் கட்டிலில் ஒருக்களித்துப் படுத்துக்கொண்டு, அவன் காதலிக்கு நூல்விட்டுக் கொண்டே கிடக்கிறான் தினேஷ்! படுக்காத நேரத்தில், வீட்டின் பக்கவாட்டில் ஒதுங்கிக் கிடக்கிற ஒரு ஸ்கூட்டரின் இருக்கையைத் திறந்தால், அது, தினேஷின் ‘பொருட்கள் வைப்பறை’!

அம்மா, அடுக்களை ஜன்னல் வழியாகத் தரும் காப்பி, நொறுவல்களை, ஒரு பழைய நாற்காலியில் அமர்ந்து, செல்பேசியை நோண்டிக்கொண்டே, அங்கிருந்துதான் ருசித்துக் கொண்டிருப்பான்.

‘ஒர்க் அட் ஹோ’மில் மூழ்கிக் கிடக்கிற ஒரு ஐ.டி. ஜோடியின், சீர்செய்ய நேரமே வாய்க்காத, பழுதாய்க் கிடக்கும் ஒரு ஸ்கூட்டர் அது! யாருமே தொடாமல், அழுக்கடைந்து இவன் வீட்டின் பக்கவாட்டில் அது நிறுத்தப்பட்டுக் கிடக்கிறது.

இவனின் தனிமையைப் போக்க, இவன் போடும் நொறுவலை மேய்ந்தபடி, ஸ்கூட்டர் பக்கத்திலேயே ஊர், உலகத்தை வேடிக்கை பார்த்தபடி, இவனுக்குக் காவலாகக் கம்பீரமாக அமர்ந்திருக்கும் இவனின் செல்ல வளர்ப்பு, ‘பிரௌனி’!

அம்மா, கமலத்திற்கு வீடுதான் உலகம்! பிள்ளைகளை வளர்ப்பது, குடும்பத்தைக் கவனித்துக் கொள்வது மட்டுமே, அவரின் ஒரே உத்தியோகம்! சாதி மறுப்புத் திருமணம் என்பதாலும், கணவன் கண்ணனின்மீது அத்தனைப் பிரியம்!

திருமணமான புதிதில், ஒருமுறை குடித்துவிட்டு வந்த கணவனிடம், இனி, குடிக்கவே கூடாது என்று சத்தியம் வாங்கியவள். இன்றுவரை கண்ணன் குடிக்கவே இல்லை என்பதை, பெருமிதத்துடன் உள்ளுக்குள் இரசித்துக் கொண்டே இருப்பவள்!

கமலம் காய்கறி வாங்க வெளியே வந்திருக்கையில், அவளுக்குப் பக்கத் துணையாக பிரௌனி வந்து நிற்க, பக்கத்துத் தெருவில், ‘அஜால்குஜால்’ மின்வாரிய அதிகாரி, ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ என்று ஷாம்பு நுரையில் குளித்துக் கொண்டிருக்க,

மின்சாரம் நின்று போக தண்ணீருக்காக, உதவியாள் மோட்டாரைப் போட, அந்தத் தெருவின் பழைய டிரான்ஸ்பார்மர் திடீரென்று வெடிக்க, ஒயர் அறுந்து பிரௌனிமீது விழ, பிரௌனி அந்த இடத்திலேயே பஸ்பமாக, தினேஷ், ஓடிவந்து அதைப் பார்த்துக் கதறித் துடிக்கிறான்.

பிரௌனிக்கு நீதி கேட்டு, மின்சார வாரிய அலுவலகத்திற்குச் செல்லுகிறான் தினேஷ்! அங்கு, அதிகார மிதப்பில் பேசிய அதிகாரியுடன் கைகலப்பாகிறது.

காவல்துறை வருகிறது. தினேஷை இழுத்துச் செல்லுகையில், மகனைத் தேடி, கமலம் அங்கு வந்து தடுக்கிறார்.

கணவன் கண்ணனுக்குத் தகவல் சொல்லுகிறார். கண்ணன் வந்து, அந்த அதிகாரியிடம் கெஞ்சுகிறார். தினேஷ் கேட்ட ஒரு கேள்வி, ‘ஒயர், பக்கத்லெ நின்ன எங்க அம்மா மேலெ விழுந்திருந்தா?’ என்பதற்கு அந்த அதிகாரி சொன்ன திமிர்ப் பதிலால் கொதிப்புற்ற கண்ணன், சுயமரியாதைத் தீப்பிடித்து, அந்த அதிகாரியைப் பந்தாடுகிறார்.

அரசியலின் அன்றலர்ந்த தாமரை, ‘பச்சோந்தி மேம்’ பிரேமா தலைமையில் பஞ்சாயத்து நடக்கிறது. பிரேமா அக்காவிற்காக ‘தீபிகாவிற்கு மட்டும் மடங்குகிற, உறவுக்கார முரட்டுப் பையன்’ இப்போது ஏரியா சண்டியராக வந்துநின்று, அதிகாரியை மிரட்டுகிறான்.

கணக்கில், விட்ட வார்த்தைக்கும் தொட்ட அடிக்கும் சரியாய்ப் போகிறது.

டிரான்ஸ்பார்மர் சரி செய்வதற்கு அதிகாரி ஒத்துக் கொள்கிறார்; தினேஷை சமாதானப்படுத்த, நாய் பிரௌனிக்குச் சிலை வைப்பதற்கு ஒத்துக் கொள்கிறார் பச்சோந்தி பிரேமா!

ஏரியா சண்டியர், தினேஷிடம் தீபிகாவின் நிலையைக் கேட்டு, தன் அப்பாவால் தன் வாழ்க்கை திசை மாறிப் போனதைப் பேசுகிறார். தினேஷ் கல்லூரிக்குப் போகப் போவதைச் சண்டியர் அண்ணனிடம் கூறுகிறான்.

சண்டியரின் அப்பாவுடன் சேர்ந்து, குப்பை பொறுக்கிக் கொண்டிருந்த கண்ணன், இன்று பொறுப்பான கல்வி அக்கறையால், தன் குடும்பத்தை உயர்த்தி இருப்பதைப் பெருமையுடன் பகிர்கிறான்.

‘குப்பை பொறுக்கியா’ தன் குடும்பத்தைத் தன் அப்பா கண்ணன் உயர்த்தி இருக்கிறார் என்பதறிந்து, குற்றவுணர்வில் தன் அப்பாவின்மேல் மரியாதை கொள்கிறான் தினேஷ்!

அதைத் தன் சகோதரி தீபிகாவிடம் பகிர்கிறான். அமெரிக்கா செல்ல இருக்கிற அவளுக்கும் அது அதிர்ச்சி!

‘சாதியிலும் கீழ் / தொழிலிலும் கீழ்’ என்றிருக்கும் கண்ணனின் மகள், தன் வைராக்கியத்தால், இடைநிலைச் சாதி மாப்பிள்ளையை உதறி எறிந்துவிட்டு, அமெரிக்கா புறப்படுகிறாள்.

அதற்குமுன், தன் குடும்பத்தின் ஆத்ம சங்கீர்த்தனத்தை, அணுஅணுவாய் உள்வாங்குகிறார்.

அம்மா கமலத்திடம், கல்யாணப் பேச்சை நிறுத்திய தன் சூழலைச் சொல்லி, அம்மாவின் அணைப்பில் இதம் காண்கிறாள் தீபிகா.

அப்பாவிடம் சொன்னாலும் அப்பாவும் கேட்டுக் கொள்வார். என்னிடம் சொன்ன ஒரு வார்த்தைக்காக, இன்றுவரையும் குடிக்காமல் இருப்பவர்’ என்று அம்மா கமலம் மகளிடம் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கையில், கண்ணன், நன்றாகக் குடித்துவிட்டு வீட்டிற்குள் நுழைகிறார்.

டாஸ்மாக்கில், குடித்துவிட்டு குமுறிக் கொண்டிருந்த கண்ணனைச் சந்தித்துத்தான், இந்த ‘மெட்ராஸ் மேட்னி’ கதையை விவரிக்கத் தொடங்குகிறார் சத்யராஜ்.

அங்கிருந்து வீட்டிற்கு வந்த கண்ணன், அம்மா, மகள், மகனைப் பார்த்து அதிர்ந்துபோய், வீட்டிற்குள் நுழையச் சங்கடப்பட்டு, வெளித் திண்ணையில் படுக்கத் திரும்புகிறார்.

பிரௌனி, பாட்டி தவிர்த்த குடும்பத்தின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டதாய், அமர்ந்து மனம்விட்டுச் சிரிக்கின்றனர்.

கல்வி, என்ன மாதிரியான மந்திரத்தைச் செய்கிறது என்பதை, அடக்கமாகச் சொல்லிச் செல்கிறது ‘மெட்ராஸ் மேட்னி’!

அதென்ன ‘மெட்ராஸ் மேட்னி’? ’மெட்ராஸ்’ என்பதும் இப்பொழுது புழக்கத்தில் இல்லை; ‘மேட்னி’ என்பதும்கூட, இப்பொழுது புழக்கத்திலிருந்து காணாமல் போயிருக்கிற ஒன்றுதான்!

அப்புறம் எதற்கு இந்தத் தலைப்பு? சனாதனம் உருவாக்கிய சாதித் தொழில் தகர்ந்துபோகக் காரணமாயமைந்தது, ஆங்கிலேயர் ஆட்சி என்பதை எவரும் மறுக்க இயலாது.

அதில், சனாதனத்தைத் தகர்த்தெடுத்த நடுத்தர வர்க்கம் ஒன்றைப் பகற்காட்சியாய் வெளிச்சமிட்டுக் காட்டுகிறதோ, ‘மெட்ராஸ் மேட்னி’ அல்லது, ஆங்கிலம், அறிவியல் மோகம் கொண்ட அந்தக் கட்டியக்காரக் கதாசிரியரின், மனதில் உதித்த ஒரு ‘நாவல்’ தலைப்பாய்க்கூட இது இருக்கலாம்.

கதைக்கு இப்படிக் கவர்சிகரமாகப் பெயர் வைப்பதொன்றும் புதிதில்லைதான்!

ஏனெனில், அந்த விடுதியில் தங்கியிருக்கிற, அவரெதிரில் அமர்ந்திருக்கிற வெளிநாட்டுக்காரருக்குப் புரிகிற பெயராய்க்கூட, அந்த ‘மெட்ராஸ் மேட்னி’ என்பது இருந்திருக்கலாம்.

இத்தனை அழகாக ஒரு கதையை வழங்கியிருக்கிற, எழுதி, நெறியாளுகை செய்திருக்கிற, கார்த்திகேயன் மணியின் புத்திசாலித்தனத்தின் பூடகமாகவும் இது இருக்கலாம்.

‘முகம் காட்டிய அத்தனைப் பேருமே, பின்னிருந்து சுகம் கூட்டியிருக்கிற அத்தனைப் பேருமே, படத்தை அழகுபடுத்தி இருக்கின்றனர் என்பது மிகவும் எளிய வார்த்தை!

பெயரில் என்ன இருக்கிறது? ‘ரோஜா’வைச் ‘சாணி’ என்றாலும், அது, ‘ரோஜா’வின் மணத்தையே வீசச் செய்யும்! 

‘அன்பு’ என்பதை, ‘நாய்’ என்றே சொன்னாலும், அது, மனசை இனிக்கத்தானே செய்யும்? மனசுக்குள் மத்தாப்பைக் கொளுத்தத்தானே செய்யும்?

இந்த ‘மெட்ராஸ் மேட்னி’, மத்தாப்புகளை மனசுக்குள் கொளுத்திப்போட்டு மகிழ்ச்சி தரத்தான் செய்கிறது.

படக் குழுவினருக்கு வாழ்த்துகள்!