சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘குபேரா’. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ள இந்த படத்துக்கு தமிழில் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தப் படத்தின் வெற்றிவிழாக் கொண்டாட்டம் ஹைதராபாத்தில் நடைபெற்றது.
இதில் நடிகர் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
‘குபேரா’ நாயகன் தனுசும் விழாவில் கலந்து கொண்டார். அவரது பேச்சில் அதிகமாகவே அடக்கம் இருந்தது. அவர் பேசியதன் சுருக்கம்:
“இப்போதெல்லாம் திரைப்படங்கள் தியேட்டரில் ஓடுவதே கேள்விக் குறியாகி விட்டது.
ரத்தம், கத்தி, ஹெலிகாப்டர்கள் இடம்பெறும் ஆக்ஷன் படங்கள் மட்டுமே மக்களைத் தியேட்டர்களுக்கு அழைத்து வரும் என்ற மாயை நிலவுகிறது.
ஆனால், மனித உணர்வுகளும் மக்களைத் தியேட்டருக்கு அழைத்து வரும் என்ற நம்பிக்கையை ‘குபேரா’ விதைத்துள்ளது.
மனித உணர்வுகளைவிட பெரியது எதுவும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.
பெரிய பட்ஜெட், கிராபிக்ஸ், சூப்பர் ஹீரோ படங்கள்தான் இனி கைகொடுக்கும் என்ற எண்ணம் அடுத்த தலைமுறை இயக்குநர்களுக்கு வரக் கூடாது.

தமிழில் கூட இதேபோல ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற படம் நல்ல வரவேற்பை பெற்றது.
சாதாரண மனிதர்களைப் பற்றி பேசிய அந்தப் படமும் மக்களைத் திரையரங்குகளுக்கு இழுத்து வந்தது.
வெற்றி கிடைக்கும்போது குறைவாக பேசவேண்டும் என்று என் அம்மா அடிக்கடி கூறுவார். எனவே நான் இனி அதிகம் பேசப் போவதில்லை. குறைவாகத்தான் பேசப் போகிறேன்.
தயாரிப்பாளரின் முகத்தில் சிரிப்பைக் காண்பது மிக முக்கியம் என்று என் அப்பா சொல்வார்.
என் தயாரிப்பாளரின் முகத்தில் சிரிப்பை பார்ப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி” என்று தனுஷ் அந்த விழாவில் தெரிவித்தார்.
– பாப்பாங்குளம் பாரதி.