Take a fresh look at your lifestyle.

புராண படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

இந்திப் பட இயக்குநர் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் விஷ்ணு மன்சு நடித்துள்ள புராணப் படம் ‘கண்ணப்பா’. இதில், சரத்குமார், பிரீத்தி முகுந்தன், மோகன் பாபு, மது, கருணாஸ், பிரம்மாஜி, பிரம்மானந்தம் உள்பட பலர் நடித்துள்ளனர்.
 
சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்ஷய்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். 
 
இதன் படப்பிடிப்பு நியூசிலாந்தில் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 120 நாட்கள்  நடந்தது. பான் இந்தியப் படமாக உருவாகியுள்ள ‘கண்ணப்பா’ நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.
 
இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள், அதிகமான வன்முறை காட்சிகளுக்கும் சில வசனங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
அதை மாற்றினால் மட்டுமே தணிக்கை சான்றிதழ் தர முடியும் என்றனர். இதையடுத்து மறு ஆய்வுக் குழுவுக்குப் படம் அனுப்பப்பட்டது. 
 
அவர்களும் அதிகமான ரத்தம், இறந்த உடல்கள், மனித உடலை அம்பு துளையிடும் காட்சிகள் உள்பட பல காட்சிகளை நீக்க அறிவுறுத்தியது. சில வசனங்களை நீக்கவும் சிலவற்றை மாற்றியமைக்கவும் உத்தரவிட்டது. 
 
அவர்கள் சொன்ன திருத்தங்களை இயக்குநர் ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. வழக்கமாகப் புராணப் படங்களுக்கு ‘யு’ சான்றிதழ் வழங்குவதுதான் நடைமுறை.
 
ஆனால், புராண படமான கண்ணப்பாவுக்கு யு | ஏ  சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பது சினிமா உலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மாற்றங்களுக்குப் பிறகு படம் 3 மணி நேரம் 2 நிமிடம் 51 விநாடிகள் ஓடுகிறது.
 
– பாப்பாங்குளம் பாரதி.