வழக்கத்திற்கு மாறான ‘ஐடியா’வை கொண்டு உருவாக்கப்படுகிற திரைப்படங்கள் சட்டென்று ரசிகர்கள் கவனத்தைக் கவரும். அப்படியொரு படமாக வரவேற்பைப் பெற்றிருக்கிறது ‘ஹவுஸ்மேட்ஸ்’. இதனை ராஜவேல் இயக்கியிருக்கிறார்.
தர்ஷன், ஆர்ஷா சாந்தினி பைஜு, காளி வெங்கட், வினோதினி வைத்தியநாதன், தீனா, அப்துல் லீ, குழந்தை நட்சத்திரம் கென்ரிக் ஆஷ்லே உட்படச் சிலர் நடித்துள்ள இப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார்.
சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன்ஸ் இப்படத்தின் தயாரிப்பில் இணைந்தது, இதன் மீதான ரசிகர்களின் பார்வை அதிகரிக்க முக்கியக் காரணம்.
சரி, ‘ஹவுஸ்மேட்ஸ்’ தரும் திரையனுபவம் எப்படிப்பட்டது?
‘ஹவுஸ்மேட்ஸ்’ கதை!
சென்னையில் அனுவின் (அர்ஷா) வீட்டில் வாடகைக்குக் குடியிருப்பவர் கார்த்தி (தர்ஷன்). நாளடைவில் அவர்களிடையே காதல் மலர்கிறது.
அனுவின் தந்தையிடம் (கவிதா பாரதி) தங்களது காதலைக் கார்த்தி சொல்ல, ‘சொந்த வீடு இருந்தா பொண்ணு தர்றேன்’ என்கிறார். உடனே ஒரு தரகரைத் தேடிப் பிடித்து வேளச்சேரி பகுதியிலுள்ள பழைய அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டை வாங்குகிறார். அதனைத் தனது பெயரில் பதிவு செய்கிறார்.
அதன்பின்னர் அனுவின் தந்தையிடம் பெண் கேட்கிறார். அவரோ, ‘என் பெண்ணை மணம் செய்து வைக்க முடியாது’ என்று சொல்கிறார்.
அதற்கடுத்த நாள் கார்த்தியைத் தேடி வருகிறார் அனு. ‘நாம கல்யாணம் செய்துக்கலாம். எதுக்கு மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில சண்டை வரணும்னுதான் நேத்து அமைதியாக இருந்தேன்’ என்கிறார். பிறகு, இனிதே அவர்கள் திருமணம் நடைபெறுகிறது.
புதிதாக வாங்கிய வீட்டில் கார்த்தியும் அனுவும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். திடீரென்று ஒருநாள், அவர்கள் குடியிருக்கும் வீட்டின் மீது இடி மின்னல் தாக்குகிறது. அது சுவரில் விரிசலை ஏற்படுத்துகிறது.

அதன்பிறகு, தாங்கள் வசிக்கும் வீட்டில் வேறு சிலர் இருப்பதாக உணர்கிறார் அனு. அதனைக் கார்த்தியிடம் சொல்கிறார். அவரோ, ‘பேய் பூதம்னு சொல்லி புதுசா வாங்கின வீட்டை பத்தி பீதி கிளப்பாத’ என்கிறார்.
ஆனாலும், அனுவால் தன் மனதில் எழும் சந்தேகத்தையும் பயத்தையும் மறைக்க முடிவதில்லை. அந்தளவுக்கு அவ்வீட்டில் வினோதமாகப் பல விஷயங்கள் நிகழ்கின்றன.
ஒருகட்டத்தில் கார்த்தியும் அதனை உணர்கிறார்.
தங்களது பீதிக்குக் காரணம் பேயா, பூதமா என்று அவர்கள் சிந்தித்துக் கொண்டிருக்க, வினோதமான உண்மையொன்று தெரிய வருகிறது. அவர்களை வாட்டுவது மனிதர்கள் தான் என்று தெரிய வந்ததும், ‘இது எப்படிச் சாத்தியம்’ என்று கார்த்தியும் அனுவும் யோசிக்கின்றனர்.
போலவே, எதிர்தரப்பும் யோசிக்கிறது.
அந்த முனையில் ரமேஷும் (காளி வெங்கட்) விஜியும் (வினோதினி) தங்களது ஒரே மகனோடு (கென்ரிக்) வசிக்கின்றனர். அவர்களும் இதே போன்ற வினோத நிகழ்வுகளால் பீதியில் இருக்கின்றனர்.
இரு தரப்பும் ஏன் ஒரே மாதிரியான பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கிறது? அவர்களுக்கு இடையேயான ஒற்றுமை என்ன என்று சொல்கிறது இடைவேளைப் பகுதி.
அதனைத் தொடர்ந்து, அவர்களது பிரச்சனை தீர்ந்ததா அல்லது இன்னும் அதிகமானதா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
உற்சாகம் எங்கே?
ஒவ்வொரு திரைப்படமும் நம் மனதில் ஒரு வரைகோட்டை உண்டுபண்ணுவதாக வைத்துக்கொண்டால், அது சீர்மையானதாக இருக்க வேண்டும். எங்கிருந்து தொடங்கினாலும் அந்தச் சீர்மை சட்டென்று ஏதோ ஒரு இடத்தில் கெடக் கூடாது.
அந்த விஷயத்தில் ஏமாற்றம் தருகிறது ‘ஹவுஸ்மேட்ஸ்’.
படம் தொடங்கி முதல் பாதி வரை ‘ஹாரர்’ படமாகப் பயணிக்கிற திரைக்கதை, பிறகு ‘சயின்ஸ்பிக்ஷன்’ மற்றும் ‘பேண்டஸி’ பாதையில் செல்கிறது.
‘காலப் பயணம்’ போன்றதொரு விஷயத்தை சில ‘தியரி’கள் வழியாகச் சொன்னாலும், லாஜிக் சார்ந்து சில கேள்விகள் நம் மனதில் எழுகின்றன.

அவற்றுக்கு ‘ஹவுஸ்மேட்ஸ்’ திரைக்கதையில் பதில்கள் இல்லை. படைப்பு சுதந்திரம் என்ற பெயரில் சிலவற்றை ஏற்கலாம். ஆனாலும், இந்தக் கதையில் இருக்கிற குழப்பம் முழுக்கத் தீர்ந்தபாடில்லை.
முக்கியமாக, இப்படத்தின் முடிவு சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்களின் பிரச்சனைக்கான தீர்வா என்பதிலும் குழப்பம் உண்டு. அதுவே இப்படத்தின் பலவீனம்.
மற்றபடி, திரைக்கதையின் நடுவிலுள்ள சுமார் 60 சதவீதப் பகுதிக் காட்சிகளில் தியேட்டரே விழுந்து விழுந்து சிரிக்கிறது. அதற்குக் காரணம், இக்கதையிலுள்ள அந்த ‘வித்தியாசமான ஐடியா’தான்.
அந்த வகையில் ஈர்க்கிறார் இப்படத்தை எழுத்தாக்கம் செய்து இயக்கியிருக்கும் ராஜவேல்.
ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.சதீஷ், படத்தொகுப்பாளர் ஏ. நிஷார் ஷரீஃப், கலை இயக்குனர் என்.கே.ராகுல், ஸ்டண்ட் இயக்குனர் தினேஷ் காசி, ஆடை வடிவமைப்பாளர் நந்தினி நெடுமாறன் எனப் பல தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு இயக்குனரின் காட்சியாக்கத்திற்கு உதவியிருக்கிறது.
இப்படத்தில் நடித்த தர்ஷன் – ஆர்ஷா ஜோடி அழகாகத் தோற்றமளிக்கிறது என்றால், நடிப்பால் நம்மை ஈர்க்கிறது காளி வெங்கட் – வினோதினி ஜோடி. அவர்களது மகனாக நடித்த கென்ரிக்கும் மனதைக் கொள்ளை கொள்கிறார்.
இதில் கவிதா பாரதி, தீனா, ஜீவா ரவி உட்படச் சிலர் தலைகாட்டியிருக்கின்றனர். ஆனால், அவர்களுக்குப் பெரிதாக ‘ஸ்கோப்’ இல்லை.

அப்துல் லீ சொல்கிற ‘டெசராக்ட் தியரி’ (tesseract theory) இயற்பியலில் ஆர்வமுள்ளவர்களுக்கே புரியுமா எனத் தெரியவில்லை. அவர் அந்த வசனங்களை எளிதாகப் பேசியிருந்தாலும், நமக்குப் புரிய மாட்டேன் என்கிறது.
அந்த இடங்களைச் சரிப்படுத்தியிருந்தால், படத்தின் கிளைமேக்ஸை இன்னும் எளிமையாக வடிவமைத்திருந்தால், ‘ஹவுஸ்மேட்ஸ்’ வேறொரு உயரம் தொட்டிருக்கும்.
முக்கியமாக, அவ்வளவு நேரம் சிரித்து ரசித்துப் படம் பார்த்தபோது நம்மைத் தொற்றிய உற்சாகத்துடன் வெளியே வந்திருப்போம். அது நிகழாததால், ‘அந்த உற்சாகம் எங்கே’ எனத் தேடியவாறே தியேட்டரை விட்டு வெளியே வர வேண்டியிருக்கிறது..!
- உதயசங்கரன் பாடகலிங்கம்
#ஹவுஸ்மேட்ஸ் #Housemates #HousematesReview #ஹவுஸ்மேட்ஸ்விமர்சனம்
#Dharsan #Aarsha #KaliVenkat #Vinothini #KavithaBharathi
#JeevaRavi #Dheena #Rajavel #Kollywood2025
#TamilWebSeries #TamilCinema #KollywoodCast
#NewTamilRelease #HousematesTamil #TamilSeriesReview
#KollywoodTrending #TamilEntertainment