உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல் ஆகியோரது படங்ளின் வெற்றிக்கு இளையராஜாவின் இசையும் ஒரு காரணமாக இருந்தது. 80-களில் கொடிகட்டிப் பறந்த மோகன், ராமராஜன் படங்களின் வெற்றியில் இசைஞானியின் பங்கு அளப்பரியது.
இந்த இரு நடிகர்களின் படங்களை ராஜாவே தூக்கி சுமந்தார் என்பதில் தவறில்லை. பயணங்கள் முடிவதில்லை, உதயகீதம், தென்றலே என்னைத் தொடு, இதயக்கோவில், இளமைக் காலங்கள் உள்ளிட்ட படங்கள் தான், இன்றைக்கு நாம் மோகனை நினைவில் வைத்திருப்பதற்கு பிரதான காரணம்.
அந்த காலத்தில் வில்லன் நடிகர்கள், சினிமாவில் ‘பைப்’ பிடிப்பது வழக்கம். மோகன், தனது பெரும்பாலான படங்களில் மைக் பிடித்து வருவார். இதனால் மைக் மோகன் என்றே செல்லமாக அழைக்கப்பட்டார்.
இளையராஜாவின் இசையால் தான் மைக் மோகன் திரைப்படங்கள் ஹிட்டாகின என்ற ஒரு கருத்து நிலவியது.
இது குறித்து நேர்காணல் ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, நடிகர் மைக் மோகன் மனம் திறந்து பதிலளித்துள்ளார்.
அதில், “ஒரு திரைப்படத்திற்கு பாடல்கள் மிக முக்கியமானவை. இதேபோல், சண்டைக் காட்சிகள் உள்ளிட்ட பல விஷயங்களும் திரைப்படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கின்றன.
எனினும், திரைப்படம் ஹிட்டான பின்புதான், அதில் இடம்பெற்ற பாடல்களுக்கு அதிக அங்கீகாரம் கிடைக்கும்” என மைக் மோகன் தெரிவித்துள்ளார்
– பாப்பாங்குளம் பாரதி.