Take a fresh look at your lifestyle.

டிடி நெக்ஸ்ட் – சராசரி ஹாரர் படம் கிடையாது!

இயக்குநர் பிரேம் ஆனந்த்

‘டி டி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் சந்தானம், கீதிகா திவாரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், மாறன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி , யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

தீபக் குமார் பதே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஃப்ரோ இசையமைத்திருக்கிறார்.

காமெடி ஹாரர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இப்படம் வரும் 16ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தற்போது  இந்தப் படத்தின்  பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ குறித்த தகவல்களை பகிரும் வகையில் கலகலப்பான முறையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் கதாநாயகன் சந்தானம், திரைப்படத்தை வெளியிடும் நடிகர் ஆர்யா, இயக்குநர் பிரேம் ஆனந்த் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பிரேம் ஆனந்த், “முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு என்ற திருக்குறளுக்கு உதாரணமாக திகழ்பவர்கள் சந்தானமும் ஆர்யாவும். அந்த நட்புதான் எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பைக் கொடுத்து இருக்கிறது.

இவ்வளவு பிரமாண்டமான இப்படத்தைத் தொடங்கும் போது நான் சந்தானத்திடம், “கண்டிப்பா பயங்கர ஹார்டு வொர்க் பண்ணி இந்தப் படத்தை வெற்றிப்படமாக்கி உங்களுக்கும் ஆரியாவும்  சிலை வைப்பேன்” என்று கூறினேன்.

போஸ்ட் ப்ரொடக்ஷன் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிந்து படம் முழுமையாக எப்போது தயாராகும் என்ற கேள்வி வந்தபோது சந்தானம் என்னை அழைத்து “நீ எங்களுக்கு சிலை வைக்கலன்னாலும் பரவாயில்லை,

எங்க பிரண்ட்ஷிப்புக்கு உலை வச்சிராத, சீக்கிரம் படத்தை முடித்து கொடுத்துவிடு” என்று சொன்னார்.

படத்தில் இரண்டு மூத்த இயக்குநர்களான கௌதம் வாசுதேவ் மேனனும் செல்வராகவனும்  சிறப்பாக நடித்து ஒத்துழைத்தார்கள்.

இது ஒரு சராசரி ஹாரர் படம் கிடையாது. இதற்குள் ஒரு பேண்டஸி உலகமே உள்ளது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிகவும் சவாலாக இருந்தன.

இப்படத்தை டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் என்று சொல்வதை வட சந்தானத்தின் நெக்ஸ்ட் லெவல் என்று சொல்லலாம்” என்றார்.

இந்தப் படத்தைப் பற்றிப் பேசிய சந்தானம், “இந்த படம் மிகவும் ஸ்பெஷலாக இருக்கும். ஆர்யாவும் நானும் எப்போதும் தொடர்பில் இருப்போம்.

அவ்வாறு ஒரு நாள் அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, “நீ காமெடியெனா இருக்கும்போது ஜாலியா இருப்ப, இப்பல்லாம் அந்த ஃபன் இல்லையே, ஏன்?” என்று கேட்டார்.

அதற்கு நான் நாயகனாக இருக்கும் சவால்கள் குறித்தும், இன்னும் சில சிக்கல்கள் பற்றியும் அவரிடம் சொன்னேன்.

அப்போது அவர் “டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் நீ முழுவதுமாக இறங்கி வேலை செய். உன் மொத்த கிரியேட்டிவிட்டியையும் காட்டு. உன் பிரச்சனை எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்” என்றார்.

அப்படித்தான் இந்த படத்தை ஆரம்பித்து முடித்துள்ளோம். ஒரு நல்ல கதை, திரைக்கதை, காமெடி, ஆக்டிங் என எல்லாமே இதில் நிச்சயமாக உங்களை திருப்திப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். மே 16 தியேட்டரில் குடும்பத்துடன் போய் பாருங்கள்.

இயக்குநர் பிரேம் ஆனந்தை தமிழ்த் திரை உலகின் கிறிஸ்டோபர் நோலன் என்று நான் சொல்லுவேன். ஏனென்றால் ஆனந்த் பண்ற கதை எல்லாம் ஒரு லைனில் இருக்கவே இருக்காது. பல லேயர்களை கொண்டிருக்கும்.

கஷ்டமான விஷயங்களை அவ்வளவு எளிதாக, சுவாரஸ்யமாக ஒன்றாக கோர்த்திருப்பார். அது எப்படி என்று நமக்கு புரியவே புரியாது. அதுதான் பிரேம் ஆனந்த்.

இந்த படத்தையும் அவர் அப்படித்தான் அற்புதமாக உருவாக்கியுள்ளார். அவுட்புட் ரொம்ப நன்றாக இருந்தது. அருமையான காமெடி ட்ரீட்டாக இப்படம் ரசிகர்களுக்கு அமையும்” என்றார்.