உச்ச நடிகர்கள் படம் தோல்வி அடையும்போது, அவர்களை தன் தோளில் சுமந்து, இன்னொரு உயரத்துக்குக் கொண்டு செல்லும் இயக்குநராகப் பார்க்கப்படுகிறார், லோகேஷ் கனகராஜ்.
கமல்ஹாசன் சினிமாக்கள் தொடர்ச்சியாக அடி வாங்கிய நிலையில் அவரை வைத்து ‘விக்ரம் -2 ‘படம் டைரக்டு செய்தார், லோகேஷ். படம் பெரிய ஹிட்.
‘லால் சலாம்’ ‘வேட்டையன்’ என ரஜினிகாந்தின் படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்தன. இதனை ரஜினி எதிர்பார்க்கவில்லை. உடனடியாக ஒரு வெற்றியைக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது, அவருக்கு.
லோகேஷ் கனகராஜுடன் கைக் குலுக்கினார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவானது ‘கூலி’. ரஜினிகாந்த் தவிர, சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.
பாலிவுட் நடிகர் அமீர்கான் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
பல ஆண்டுகளாக ரஜினி படத்துக்கு இசை அமைத்து வரும் அனிருத், இந்தப் படத்துக்கும் இசையமைத்துள்ளார். கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி திரைக்கு வருகிறது.
இந்தியாவில் மட்டுமில்லாது, உலகம் முழுவதும் கூலி படத்துக்குப்
பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. காரணம் ரஜினி –அல்ல. லோகேஷ். அவர் இயக்கிய கைதி, விக்ரம் -2, மாஸ்டர், லியோ ஆகிய படங்கள் வரிசையாக வெளிவந்து, வசூல் குவித்தன.
ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் கூலி படத்தின் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. தெலுங்கில் இந்தப் படம் ரூ.53 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது.
பிரபல தெலுங்கு தயாரிப்பாளர்கள், சுரேஷ்பாபு, தில்ராஜு ஆகியோர் படத்தை வாங்கி உள்ளனர்.
படத்தின் பெயர்தான் ‘கூலி’. நிஜத்தில் ‘மில்லினியர்’.
– பாப்பாங்குளம் பாரதி.