தென்னிந்திய சினிமாவில் இசைப் பேரரசியான பின்னணிப் பாடகி திருமதி. பி. சுசீலா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் நாற்பதாண்டுகளில் சுமார் 25 ஆயிரத்திற்கு மேல் பாடல்களைப் பாடியுள்ளார்.
ஆந்திர பிரதேசத்தில் உள்ள விஜயநகரத்தில் பிறந்த சுசீலா, 1950-ல் சென்னை வானொலியில் பாப்பா மலர் நிகழ்ச்சியில் முதன்முதலாகப் பாடியுள்ளார்.
தமிழ் சினிமாவின் இசைக் கலைஞர்களின் இசையமைப்பில் அதிகப்படியான பாடல்களை பாடியவர் சுசீலா.
இவருக்கு தற்போது, முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையார்களைப் போற்றிப் பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் 2023-ம் ஆண்டிற்கான ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்’ விருதினை வழங்கி சிறப்பித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், மற்றும் பி.சுசீலாவின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
இதேபோல், கருணாநிதி நூற்றாண்டு நினைவாக கவிஞர் மு. மேத்தாவுக்கும் ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்’ விருதை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார்.