Take a fresh look at your lifestyle.

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் – காமெடி எங்க?!

ஒரு திரைப்படம் சிறப்பானதா, இல்லையா என்பதை ஓரிரு காட்சிகளில் நிச்சயம் அறிய முடியாது. அதேநேரத்தில், அதனை அறிகிற நமது முயற்சி சரியானதுதானா என்பதை உணரச் சில காட்சிகளை ‘சாம்பிள்’களாக கொள்வதில் தவறில்லை.

அப்படி முழுதாகச் சில காட்சிகளைப் பார்த்தபிறகு, ‘இந்த படத்தைத் தொடர்ந்து பார்ப்பதா வேண்டாமா’ என்று கூட முடிவு செய்ய முடியும்.

அப்படியொரு முடிவுக்கு நம்மை வரவழைத்திருக்கிறது ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’.

வைபவ், அதுல்யா ரவி, மணிகண்டன் ராஜேஷ், ஆனந்தராஜ், லிவிங்ஸ்டன் உட்படப் பலர் நடித்திருக்கிற இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார்.

விக்ரம் ராஜேஷ்வர் இதன் கதையை எழுத, அவருடன் இணைந்து அருண் கேசவ் இதனை இயக்கியிருக்கிறார்.

அப்படி என்ன அனுபவத்தை தருகிறது ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’?

‘செ.சி.கே.’ கதை!

பசுபதி (லிவிங்ஸ்டன்) குற்றப் பின்னணி உள்ளவர். சில ஆண்டுகளுக்கு முன்னர் கஞ்சா விற்பனை செய்ததாக போலீசிடம் பிடிபட இருந்த அவரை இரண்டு சிறுவர்கள் காப்பாற்றுகின்றனர். அன்று முதல் அச்சிறுவர்களுக்கு ஒரு துன்பம் என்றால் ஆபத்பாந்தவனாக அவரே வந்து நிற்கிறார்.

அந்த சிறுவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகின்றனர். அவர்களது பெயர்கள் பாண்டி (வைபவ்), பூச்சி (மணிகண்டன் ராஜேஷ்).

பசுபதிக்கு ஒரு மகள். அவரது பெயர் ஜெனி (அதுல்யா). வெளிநாட்டில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வரும் ஜெனியைக் கண்டதும் காதல் கொள்கிறார் பாண்டி. அதனை ஜெனியும் உணர்கிறார்.

அதேநேரத்தில், தனது மகனை ஜெனிக்கு மணம் முடிக்க விரும்புகிறார் சலீம் (ஷிஹான் ஹுசைனி). இவர் பசுபதிக்குத் தொழில் முறை குரு.

மகன் திருமணத்திற்கு முன்னதாக, தனது வீட்டில் இருக்கும் உடைமைகள் கொள்ளை போய்விட்டதாக நாடகமாடி ‘இன்சூரன்ஸ் பணத்தை’ லவட்டத் திட்டமிடுகிறார் சலீம்.

அதற்காக, தனது வீட்டுக்குச் சில பேரைத் திருடர்களாக அனுப்புமாறு பசுபதியிடம் கேட்கிறார்.

கைவசமிருக்கும் பாண்டி, பூச்சி இருவரையும் சலீம் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார் பசுபதி. சொன்னபடியே அங்கிருந்து ஒரு பையில் நகை, பணத்தை கொடுத்தனுப்புகிறார் சலீம்.

வரும் வழியில் அந்த பை திருடு போகிறது. அதற்கு ஈடான பணத்தைச் சலீமிடம் கொடுப்பதற்காக, ஏதேனும் ஒரு கொள்ளையில் இறங்குவது என்று பாண்டியும் பூச்சியும் முடிவு செய்கின்றனர்.

அவர்களுக்கு ஒரு திருட்டு கும்பல் உதவுகிறது. அவர்கள் மொத்தம் நான்கு பேர்.

ஒருவருக்கு மறதி, இன்னொருவருக்கு ‘ஸ்பிளிட் பர்சனாலிட்டி டிசார்டர்’ என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான குறைபாடுகள் உடையவர்கள். அந்த நால்வருடன் சேர்ந்து இவர்கள் இருவரும் ஒரு வங்கியிலுள்ள லாக்கரை கொள்ளையடிக்க முடிவு செய்கின்றனர்.

அது நடந்ததா? இடைப்பட்ட காலத்தில் பை திருடு போன விஷயம் பசுபதி, சலீமுக்கு தெரிந்ததா? ஜெனி மீதான பாண்டியின் காதல் என்னவானது என்பது உட்படப் பல கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது இப்படத்தின் மீதி.

உண்மையைச் சொன்னால், ஒரு நகைச்சுவை படத்திற்கான கதை இதில் இருக்கிறது. என்ன, ‘லாஜிக் பார்க்காம மேஜிக்கை அனுபவியுங்க’ என்று சொல்கிற வகையில் திரைக்கதையை இறுகக் கட்டமைத்திருக்க வேண்டும். அது இப்படத்தில் நிகழவில்லை.

வழக்கமாக, இது போன்ற படங்களில் காட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசைக்குப் பயணித்து படம் பார்க்கிற நம்மை ‘அம்போ’வென்று நிற்க வைக்கும். ஆனால், இந்தப் படமோ ஒவ்வொரு காட்சியும் பல திசைகளில் பயணிப்பதாக அமைந்திருப்பது கொடுமையின் உச்சம் என்று சொல்ல வைக்கிறது.

காமெடி.. காமெடி..!

டிஜோ டோமியின் ஒளிப்பதிவு, சுரேஷ் பிரசாத்தின் படத்தொகுப்பு, அருண் சங்கர் துரையின் கலை வடிவமைப்பு, இமானின் இசை உட்படப் பல தொழில்நுட்ப அம்சங்கள் இதில் நிறைந்திருக்கின்றன.

டிஐ, ஆடை வடிவமைப்பு என்று பல அம்சங்கள் சிரத்தையைக் கொட்டியிருக்கின்றன.

வைபவ், அதுல்யா, மணிகண்டன் ராஜேஷ், ஆனந்தராஜ், லிவிங்ஸ்டன், ஜான் விஜய், ராஜேந்திரன், சுனில் ரெட்டி, ரெடின் கிங்ஸ்லி, இளவரசு, மறைந்த ஷிஹான் ஹுசைனி என்று பலர் இதில் இருக்கின்றனர்.

ஆனால், படத்தில் நடித்துள்ள அனைவரும் ‘ஏனோதானோ’ என்று வந்து போயிருக்கின்றனர்.

அவர்களையும் தனித்துக் குற்றம் சொல்ல முடியாது. படத்தில் காட்சிகள் எழுதப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட விதம் அதற்கேற்ற வகையிலேயே உள்ளது.

முந்தைய நாள் இரவு நன்றாக அடிபட்டு நெற்றியில் பிளாஸ்திரி, கையில் கட்டு சகிதம் நிற்கிற ஒரு பாத்திரம், இடைவேளைக்குப் பிறகு அடுத்த நாள் காலையில் நிகழ்வதாக வரும் காட்சியில் எந்த காயங்களும் இல்லாமல் ‘ப்ரெஷ்’ஷாக வந்து நிற்கிறது.

இது ‘கண்டினியூடி’ பிரச்சனை இல்லை. அதையும் தாண்டி மிகப்பெரியது.

ஒரு திரைக்கதையின் தொடக்கமும் முடிவும் இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற இலக்கணங்கள் மாறக்கூடும். காட்சி உருவாக்கத்திற்கும் அது பொருந்தும்.

அந்த கட்டமைப்பை மீறி, அந்தக் காட்சி ஏதேனும் ஒரு விஷயத்தை நமக்கு உணர்த்த வேண்டும். கதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

அதனை முற்றிலுமாக மறக்கடிக்கிற வகையில் இருக்கிறது ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’.

இப்படித்தான் மொத்த படமும் எடுக்கப்பட்டதா அல்லது தேறாத ஷாட்களை கோர்த்து இது ஆக்கப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை.

இப்படியொரு திரையனுபவத்தையும் மீறி, ஆங்காங்கே ஆனந்தராஜ், ஜான் விஜய் உட்படச் சிலர் சிரிப்பை வரவழைக்கின்றனர். அவர்களது அனுபவங்களையும் மீறி, ஒரு காட்சியின் வடிவமைப்பு சிதைந்து போகிறதென்றால் அது நிச்சயம் ‘மெடிகல் மிராக்கிள்’ தான்.

‘காக்கிசட்டை’ படத்தில் நாயகன் கமலை பார்த்து வில்லன் சத்யராஜ் ‘தகடு எங்கப்பா’ என்பார். கமல் ’தெரியாது’ என்று சொல்ல, ‘தகடு.. தகடு..’ என்பார் சத்யராஜ்.

அதே போல, ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ பார்த்துவிட்டு, நாமும் ‘காமெடி எங்க’ என்று கேட்க வேண்டியிருக்கிறது.

என்னது புரியலையா? காமெடி.. காமெடி..!

– உதயசங்கரன் பாடகலிங்கம்