ஜனவரி தொடங்கி கடந்த 6 மாதங்களில் தமிழில் 122 படங்கள் ரிலீஸ் ஆனது. இதில் 8 சினிமாக்கள் மட்டுமே ஓடின. எஞ்சிய 144 படங்கள் சுருண்டு போயின.
இதனால் கோடம்பாக்கம், கவலை அடைந்துள்ளது. வெற்றி–தோல்விகளை விவரமாக பார்க்கலாம்:
ஜனவரியில் வெளியான படங்களில் மத கஜ ராஜாவும் குடும்பஸ்தனும் மட்டுமே வெற்றிக் கோட்டை தொட்டன
பிப்ரவரி, கோடம்பாக்கத்துக்குக் கிடைத்த முதல் பெரிய அடி மற்றும் இடி. இந்த மாதம் அஜித்தின் ‘விடாமுயற்சி’ ரிலீஸ் ஆனது. ரூ.250 கோடிக்கு மேல் பட்ஜெட். அஜித் ஊதியம் மட்டும் ரூ.100 கோடிக்கும் அதிகம். ஆனால் பட்ஜெட்டில் பாதி கூட வசூல் ஆகவில்லை.
காதலர் தினத்தன்று 9 படங்கள் ரிலீஸ் ஆகின. அனைத்துமே ‘வாஷ் அவுட்’ அந்த 9 படங்களும் தோல்வியைச் சந்தித்தன. எனினும் சில நாட்கள் கழித்து வெளியான பிரதீப் ரங்கநாதனின் ‘டிராகன்’ படம் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்தது.
ஆனால் சோகம் தொடர்ந்தது. டிராகனுக்கு போட்டியாக தனுஷ், தான் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை ரிலீஸ் செய்தார். வந்த சுவடும் தெரியவில்லை. போன சுவடும் தெரியவில்லை. ஆம் – படம் படுதோல்வியைச் சந்தித்தது.
மார்ச் மாதத்தில் கோலிவுட்டுக்கு ஒரு வெற்றி கூடக் கிட்டவில்லை. ஏப்ரல் மாதம் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ரிலீஸ் ஆனது. ரூ.240 கோடி வசூலித்தது. படத்தின் பட்ஜெட் ரூ.290 கோடி என்றாலும், சேட்டிலைட் வருமானம் உள்ளிட்ட ரூபங்களில் கிடைத்த பணத்தால் தயாரிப்பாளர் நஷ்டம் அடையவில்லை.
கோடை விடுமுறை மாதமான மே மாதத்தில் 26 படங்கள் ரிலீஸ். இதில் சசிகுமாரின் ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி. உலகம் முழுவதும் ரூ.88 கோடி வசூலித்தது.
இதே மாதம் வெளியான சூர்யாவின் ‘ரெட்ரோ’ படம் சுருண்டது. சூரியின் ‘மாமன்’ திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் ‘ஹிட்’.
ஜூன் மாதம் கோடம்பாக்கத்துக்குப் பெரும் சோகமாக அமைந்தது. கமல்–மணிரத்னம் கூட்டணியின் ‘தக் லைஃப்’ படுதோல்வி. தனுஷின் ‘குபேரா’ படம் தெலுங்கில் ஹிட் ஆனாலும் தமிழில் படுதோல்வியையே சந்தித்தது.
கடந்த 6 மாதத்தில் கோடம்பாக்கத்தில் தயாரிப்பாளர்கள் போட்ட முதலீடு ரூ.1826 கோடி. வருமானம் ரூ.1614 கோடி
அடுத்த ஆறு மாதம் எப்படி இருக்கும்? காத்திருப்போம்.
– பாப்பாங்குளம் பாரதி.