‘இந்த டீசர் என்ன இப்படி இருக்கு’, ‘இதைப் பார்க்குற சின்ன பசங்க கெட்டுப்போக மாட்டாங்களா’, ‘ஸ்கூல் டேஸ்ல எல்லை மீறுகிற மாதிரி கதைகள் எல்லாம் ஏன் சினிமாவுல காட்டுறாங்க’, இப்படிப் பலவிதமான விமர்சனங்களைச் சுமந்து நின்றது ‘பேட் கேர்ள்’ பட டீசர்.
அந்த கருத்துகளே இப்படம் தியேட்டர்களில் வெளியாகுமா என்ற பெருங்கேள்வியில் போய் முட்டி நின்றது.
ஒருவழியாகத் தணிக்கை செயல்முறைகள் நிறைவடைந்து தற்போது தியேட்டர்களை எட்டியிருக்கிறது ‘பேட் கேர்ள்’. இதனை வர்ஷா பரத் இயக்கியுள்ளார்.
இப்படத்தை இயக்குநர்கள் வெற்றி மாறன், அனுராக் காஷ்யப் இருவரும் இணைந்து வழங்கியிருக்கின்றனர்.
இந்தியில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் அமித் திரிவேதி இதற்கு இசையமைத்திருக்கிறார்.
சில இந்திப் படங்கள், வெப்சீரிஸ்களில் நடித்திருக்கும் அஞ்சலி சிவராமன் இதில் நாயகி.
ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருக்கிற இந்த ‘காம்பினேஷன்’ தான் பேட் கேர்ள் படத்தை ரசிகர்கள் உற்றுநோக்கக் காரணமானது.
படம் எப்படி இருக்கிறது?
‘பே.கே.’ கதை!
பதினைந்து முதல் முப்பது வயது வரையிலான வாழ்க்கையில், ரம்யா என்ற பெண் நளன், அர்ஜுன், இர்பான் என மூன்று ஆண்களைச் சந்திக்கிறார். மனதளவில் மட்டுமல்லாமல் உடலளவிலும் அவர்களோடு நெருக்கமாகிறார்.

அதிகக் கட்டுப்பாடுகளைக் கொண்ட குடும்பச் சூழலில் பிறந்து வளர்ந்த ரம்யா (அஞ்சலி சிவராமன்), எதனால் இந்த ஆண்களோடு நெருங்கிப் பழகுகிறார்? ஏன் அவர்களை விட்டுப் பிரிகிறார்? அந்த உறவுகளில் இருந்து அவர் கற்றுக்கொண்ட பாடம் என்ன?
இந்த விஷயங்கள் தெரிந்தபிறகும், ரம்யாவின் குடும்பத்தினர் அவரோடு உறவு பேணுகிறார்களா என்று சொல்கிறது ‘பேட் கேர்ள்’ படத்தின் மீதி.
இதில் நளனாக ஹ்ருது ஹாருண், அர்ஜுனாக சஷாங்க் பொம்மிரெட்டிப்பல்லி, இர்பான் ஆக டீஜே அருணாச்சலம் ஆகியோர் நடித்துள்ளனர்.
இவர்களோடு நாயகி நெருக்கமாக இருப்பது போன்று வடிவமைக்கப்பட்ட காட்சிகளை நேர்த்தியாகப் படம்பிடிப்பதற்காகவே ‘இண்டிமசி கோஆர்டினேட்டர்’ ஆக ஜெயலட்சுமி சுந்தரேசன் என்பவர் பணியாற்றியிருக்கிறார்.
அந்த ஒரு விஷயமே, ‘பேட் கேர்ள்’ படமானது எவ்வளவு ‘புரபொஷனல்’ ஆகத் தயாராகியுள்ளது என்பது தெரியவரும்.
வயது வந்தோருக்கானது..!
பொதுவாக ‘வயது வந்தோருக்கான படம்’ என்று ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டாலே, அதில் நிர்வாணம் சார்ந்த காட்சியமைப்பு இருக்கும் என்ற எண்ணம் இருக்கிறது. ‘பேட் கேர்ள்’ பொறுத்தவரை, அது ஓரளவுக்கு உண்மை.
ஆனால், அதையும் தாண்டி வழக்கத்திற்கு மாறான சிந்தனைப் போக்கையும் செயல்படும் குணத்தையும் கொண்டவராக உள்ளது நாயகி பாத்திரமான ரம்யா.
அப்பாத்திரத்தைப் புரிந்துகொள்ளவும், கிளைமேக்ஸில் அது அடையும் உணர்வுமயமான திருப்தியை நாம் கண்டறியவும் நிச்சயம் ஒரு பக்குவம் தேவை.
அதற்கும் ‘வயது வந்தோருக்கு மட்டும்’ எனும் நிபந்தனை பொருந்தும்.
தற்காலச் சூழலில் ஒரு இளம்பெண் கொண்டிருக்கிற சுதந்திரப் போக்கின் பின்னணியில் முந்தைய தலைமுறை பெண்களின் ஏக்கமும் தவிப்பும் உள்ளதாக ஒரு இடத்தில் சொல்லப்படுகிறது.
‘பேட் கேர்ள்’ படத்திற்கான தேவையை அந்த இடத்தில் உணர முடியும். அதுவே இப்படத்தின் பலம்.
மற்றபடி, இந்த படம் செல்வராகவன் காண்பித்த ‘துள்ளுவதோ இளமை’யின் பெண் ‘வெர்ஸன்’ ஆகத் தெரியலாம்; கௌதம் மேனன், மணிரத்னம் படங்களில் வருகிற உயர் நடுத்தர வர்க்கத்து பெண்களின் வாழ்வை ‘பூதக்கண்ணாடி’ கொண்டு பார்க்கிற அனுபவத்தைத் தரலாம்;
‘அழகும் அறிவும் நிரம்பிய ஒரு பெண் ஊர் வெறுக்கும் ரவுடியைத் தேடிப் பிடித்து காதலிப்பதைக் காட்டுகிற’ கமர்ஷியல் ஆக்ஷன் படங்களில் இருக்கிற உள்ளடக்கத்தின் இன்னொரு பக்கமாக நாம் உணரலாம்.
இப்படிப் பல சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது ‘பேட் கேர்ள்’. இப்படியொரு கதையில் ஒவ்வொரு அசைவையும் ‘நகைச்சுவையாக’ மாற்றியிருக்கலாம்.

மாறாக, படம் பார்க்கிற பெண்கள் நாயகி பாத்திரத்தோடு தங்களைக் குறிப்பிட்ட சதவிகிதமாவது ஒப்பிட்டுக் கொள்ள வேண்டும் என்று முயற்சித்திருக்கிறார் இயக்குநர் வர்ஷா பரத்.
அதனால், இப்படம் முழுக்க முழுக்க அவர் விரும்பிய ஒரு உலகமாக்க் காட்சியளிக்கிறது.
அதில் லாஜிக் மீறல்களைத் தேடாமல், நமது விருப்பங்களோடு பொருத்திப் பார்க்காமல் இருப்பதே நல்லது. ஏனென்றால், அதுவே இப்படத்தின் யுஎஸ்பி.
அஞ்சலி சிவராமனின் நடிப்பு இப்படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கிறது என்றே சொல்லலாம்.
வெவ்வேறு வயதுகளில் நிகழ்வதாக வரும் இக்கதையில் அதற்கேற்ற உடல்வாகையும் உடல்மொழியையும் வெளிப்படுத்துவது சாதாரண விஷயமல்ல. அதனைச் சிறப்புறச் செய்திருக்கிறார் அஞ்சலி.
இந்தப் படத்தில் அஞ்சலியின் தாயாக நடித்துள்ளார் சாந்திப்ரியா. ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படம் பார்த்தவர்களுக்கு அவரது ‘இரண்டாவது இன்னிங்ஸ்’ அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஒருசேரத் தரும்.
சுந்தரி எனும் பாத்திரமாகவே இப்படம் முழுக்க அவர் வந்து போயிருக்கிறார்.
இந்தக் கதையில் அஞ்சலி, அவரது தாயாக வரும் சாந்திப்ரியா மற்றும் பாட்டியாக வருபவர் என மூன்று தலைமுறை பெண்களுக்கு இடையிலான முரண்கள் விளக்கப்பட்டிருக்கிறது.
பாட்டியின் சடலம் வீட்டில் வைக்கப்பட்டிருக்க, ‘அந்த விஷயம் பாட்டி என்கிட்ட சொன்னது’ என்று சாந்திப்ரியாவும் அஞ்சலியும் வாதம் பண்ணுகிற காட்சியில் சிரிப்பையும் மீறிய ஒன்று நம்மை ஆட்கொள்கிறது.
அது, தலைமுறை தலைமுறையாகப் பெண்கள் மீது சுமத்தப்படுகிற அடிமைத்தளைகள் மீதான விமர்சனம்.
அது போன்ற சில காட்சிகள் ‘பேட் கேர்ள்’ளை வெறுமனே ‘கம்மிங் ஆஃப் ஏஜ்’ சினிமா என்று சொல்ல விடாமல் தடுக்கின்றன.

அஞ்சலியின் தோழியாக வருகிற சரண்யா ரவிச்சந்திரன், பள்ளி மற்றும் அலுவலக தோழிகளாக வருபவர்கள், காதலர்களாக வரும் ஹ்ருது ஹாரூண், டீஜே அருணாச்சலம், சஷாங்க் பொம்மிரெட்டிபல்லி, தந்தையாக நடித்த எம்.ஜே.ஸ்ரீராம் என இதில் நடித்த அனைவருமே சிறப்பான நடிப்பைத் தந்திருக்கின்றனர்.
வித்தியாசமான காட்சிக்கோணங்கள், பெண் மனதைச் சொல்லும் பின்னணியை வார்த்த தயாரிப்பு வடிவமைப்பு, நான்லீனியர் முறையில் கதை சொல்ல உதவியிருக்கிற படத்தொகுப்பு உத்திகள்,
பாத்திரங்களின் உணர்வெழுச்சியைச் சார்ந்து அமைந்துள்ள பின்னணி இசையமைப்பு எனப் பல விஷயங்கள் ‘பேட் கேர்ள்’ளை வித்தியாசமான திரையனுபவம் கொண்டதாக மாற்றுகின்றன.
ஒளிப்பதிவாளர்கள் ப்ரீத்தா ஜெயராமன், ஜெகதீஷ் ரவி, பிரின்ஸ் ஆண்டர்சன், படத்தொகுப்பாளர் ராதா ஸ்ரீதர், தயாரிப்பு வடிவமைப்பாளர் சண்முகராஜா, இசையமைப்பாளர் அமித் திரிவேதி ஆகியோர் அதன் பின்னிருக்கின்றனர்.
மேலும் ஒலி வடிவமைப்பு, ஒப்பனை, ஆடை வடிவமைப்பு, டிஐ எனப் பல தொழில்நுட்பங்கள் இதில் சிறப்புறக் கையாளப்பட்டிருக்கின்றன.
இதுவரை சினிமாவில் பிரதானமாக முன்வைக்காத வகையில் இந்த படத்தில் வரும் ரம்யா பாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் வர்ஷா பரத்.

மகளின் அசட்டுத்தனத்தை அல்லது திசைகளற்ற துணிச்சலை ஏற்றுக்கொள்ளத் தாய் தயாராக இருந்தும், ‘நீயாக சொந்தக்காலில் நின்றபிறகு நினைத்ததை எல்லாம் செய்’ என்று சொன்னபிறகும், நாயகி பாத்திரம் அவற்றை ஏற்றுக்கொள்வதாக இல்லை; அதற்கேற்பத் தனது வாழ்வை மாற்றிக்கொள்வதாக இல்லை.
அந்த ஒரு கேள்விக்கு இன்னும் பலமாகப் பதில் சொல்லியிருக்கலாம். அதனைத் தவிர, இப்படத்தோடு நாம் ஒன்ற வேறெந்தத் தடையும் இல்லை.
டீசரை பார்த்து பயந்தது போன்று மோசமான அம்சங்கள் ஏதும் உள்ளடக்கத்தில் இல்லை.
‘அது போதுமே’ என்பவர்களுக்கு இந்த ‘பேட் கேர்ள்’ வழக்கத்திற்கு மாறான திரையனுபவத்தை நிச்சயம் தரும். அதே நேரத்தில், அது ‘எல்லோருக்குமானதாகவும்’ இருக்காது என்பதையும் மனதில் பதித்துக் கொள்ள வேண்டும்!
– உதயசங்கரன் பாடகலிங்கம்