கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் ஐந்திற்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்கள் வெளியாகி இருக்கின்றன.
அதில் சத்தமே இல்லாமல் வெளியாகி பெரும் வெற்றியை பெற்று கவனம் ஈர்த்துள்ளது அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம்.
பொதுவாக சில படங்கள் வெளியாவதற்கு முன்பாகவே, பத்திரிக்கையாளர்களுக்கும் விமர்சகர்களுக்கும் திரையிடப்படும். அப்படி வெளியாவற்கு முன்பே இந்தப் படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.
சமீபத்திய ‘கொட்டுக்காளி’ போல இந்தப் படத்தையும் மக்கள் கைவிட்டு விடுவார்களோ, என எதிர்பார்த்த வேளையில் படத்திற்கு ஆரம்பத்திலேயே சிவப்புக் கம்பள வரவேற்பு கிடைத்தது.
‘நல்ல படம்’ என வாய்மொழி விமர்சனங்களும் பரவ, படம் குறிப்பிடத்தக்க வெற்றியை சாத்தியமாக்கி இருக்கிறது. ஒரு வித்தியாசமான கதைக் களத்தில், கதை சொன்ன விதத்தில் சொல்லி அடித்திருக்கிறது இந்தப் படம்.
படத்தில் அப்படி என்ன விஷேசம்…? எனத் தேடினால், படத்தில் கதாபாத்திரங்களை தனித்தனியாக மனதில் பதியும்படி வடிவமைத்தது தான் ஆகச்சிறப்பு.
இதற்காக படத்திற்கு திரைக்கதை அமைத்த விதத்தில் படம் வேறு தளத்திற்கு செல்கிறது.
கிரிக்கெட்டைக் கதைக் கருவாக வைத்துக் கொண்டு, ஈகோவை அதற்கான மையச் சரடாக சொருகி, பார்வையாளர்களுக்கு ஆகச்சிறந்த காட்சி அனுபவத்தைத் தந்திருக்கிறார், இயக்குநர் பச்சமுத்து தமிழரசன்.
‘ஒரு படத்திலாவது தனக்கான அங்கீகாரம் கிடைக்காதா?’ என எதிர்பார்த்து காத்திருந்த துணை நடிகர்களையும் சிறப்பாக நடிக்க வைத்து அவர்களுக்கான அடையாளத்தைத் தந்திருக்கிறார்.
பெரும்பாலும் தமிழ்ப் படங்களில் ஹீரோயின்களுக்கு பெரிதாக வேலை இருக்காது. ஒரு சில காட்சிகளுக்குப் பிறகு அவர்களின் கேரக்டர்கள் விட்டேத்தியாக விடப்பட்டு இருக்கும்.
ஆனால், இங்கே தான் இந்தப் படம் தனித்து நிற்கிறது. படத்தில் பெண் கதாபாத்திரங்கள் தான், ஆண் கதாபாத்திரங்களை செயல்பட வைக்கிறார்கள். அவர்களைச் சுற்றியே திரைக்கதை பின்னப்பட்டு இருக்கிறது.
அம்மா, மகளாக திரைப்படம் முழுவதும், ரசிக்க வைக்கும் சஞ்சனாவும், ஸ்வாஸிக்காவும் இறுதிக் காட்சியில் கோவிலில் சூடம் கொளுத்துவது வரை கதையோடு வியாபித்து இருக்கிறார்கள்.
நல்ல கதையை ரசிக்கும்படி சொன்னால், மக்கள் கொண்டாடுவார்கள். 2.30 மணி நேரம் என்பது மனது சம்மந்தப்பட்ட விஷயம் அதில் அலுப்பு தட்டி விட்டால் கதையோடு ஒன்ற விடாமல் செய்து விடும்.
நான் இரண்டாவது முறையாக இந்தப் படத்தை பார்த்தேன், எங்கேயும் சிறிய அலுப்பு கூட எட்டி பார்க்கவில்லை. கதை ஏற்கனவே தெரிந்து விட்டதால், சுவாரஷ்யம் மட்டும் மிஸ்ஸிங். அதுதான் படத்தின் மேஜிக்.
அன்பு, பூமாலை, யசோதை, துர்கா என்ற இந்த நான்கு கதாபாத்திரங்களும் தான் படத்தின் தூண்கள்.
படத்தில் பெயிண்டராக வரும் கெத்து அடைமொழியுடன் அழைக்கப்படும் அட்டகத்தி தினேஷின் கேரக்டர் மாஸாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிகம் வசனங்கள் இல்லாமல், உடல் மொழியால் கவர்கிறார்.
அன்பு கேரக்டரில் ஹரிஷ் கல்யாணும், யசோதையாக ஸ்வாஸ்ஸிகாவும், துர்காவாக சஞ்சனாவும் மாறுபட்ட நடிப்பால் மனம் கவர்கின்றனர்.
வெறுமனே ஒருவரை நடிக்க அழைத்தோம், அவரை பாதி படத்திலேயே கழட்டி விட்டோம் என்று இல்லாமல் படம் முழுவதும் அவர்களை பம்பரமாக சுழல விட்டிற்கிறார் இயக்குநர். இதுதான் ஒரு டைரக்டர், சக நடிகர்களுக்கு தரும் அங்கீகாரம்.
படத்தில் பாலையாவாக நடித்துள்ள அந்த சிறுவனுக்கும், படத்தின் எதிர்பாரா ட்விஸ்டாக அமைந்த காளி வெங்கட் மகளுக்கும் கூட சிறு இடங்கள் என்றாலும் அவர்களும் இறுதியில் மாஸான என்ட்ரி தருகிறார்கள்.
லப்பர் பந்துகள் உடைந்து விடாமல், இருக்க அதில் ஊசியை வைத்து குத்தி விட்டு விளையாடுவது கிராம வழக்கம். உள்ளே இருக்கும் காற்றின் அழுத்தத்தால் பந்து, அடிக்கும் போது உடைந்து விடாமல் இருக்கக் கண்டுபிடிக்கப்பட்ட சின்ன டிரிக் தான் அது!
அதுபோல இந்த லப்பர் பந்திலும், ஈகோ எனும் ஊசியை வைத்து, கதாபாத்திரங்கள் சந்திக்கிற இடங்களில் படம் அலுப்பு தட்டாமல் இருக்க, அதிலுள்ள எதிர்மறை அதிர்வுளைக் குறைத்து ரசிக்க வைத்ததில் முழுவெற்றி கிடைத்திருக்கிறது இந்த அறிமுக இயக்குனருக்கு!
நன்றி: மகாலிங்கம் கணபதி முகநூல் பதிவு.