முதன்மைக் கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் நடிக்க, அவரோடு சரண் சக்தி, பரணி, முல்லையரசி, தென்றல் ஆகியோர் நடிக்க, திரைக்கதை எழுதி, சுதாகர் தாஸுடன் சேர்ந்து வசனம் எழுதி, விபின் ராதாகிருஷ்ணன் இயக்கி இருக்கும் படம் ‘அங்கம்மாள்’.
பெருமாள் முருகன் எழுதிய ‘கோடித் துணி’ சிறுகதையில் இருந்து உருவாகி இருக்கும் படம் இது.
தென் மாவட்ட கிராமம் ஒன்றில் வாழும் பெண்மணி அங்கம்மாள் (கீதா கைலாசம்), இளம் வயதிலேயே கணவன் இறந்த நிலையில் கஷ்டப்பட்டு குடும்பத்தைத் தூக்கி நிறுத்தி மூத்த மகனுக்கு (பரணி) கல்யாணம் செய்து வைத்து, பேத்தி பார்த்து, இளைய மகனை (சரண் சக்தி) டாக்டருக்குப் படிக்க வைத்து, நிமிர்ந்து விட்ட இறுமாப்பு அவளுக்கு உண்டு.
அது மற்றவர்களை எடுத்தெறிந்து அதட்டி அடக்கிப் பேசும் குணமாக இருக்கிறது.
வாயில் ஒரு சுருட்டு, ஒரு பழைய டி.வி.எஸ்-50 என்று ஊர் முழுக்க பால் கறந்து ஊற்றுபவள் அவள்தான்.
யார் என்ன செய்தலும் மருமகளை (தென்றல்) காரணமாக்குவது, பழி போடுவது சமயங்களில் அடிப்பதுகூட உண்டு.
சட்டை (ஜாக்கெட்) போடும் பழக்கம் இல்லாத அந்தக் கால ஆள் அங்கம்மாள். சட்டை போட்டால் மூச்சு முட்டும் என்பது அவளது கருத்து.
அங்கம்மாளின் டாக்டரான இளைய மகனுக்கும், திருநெல்வேலி இரண்டாம் நிலைத் தியேட்டர் அதிபர் ஒருவரின் மகளுக்கும் (முல்லையரசி) காதல்.
ஆனால், ஜாக்கெட் போடாத அம்மா, எப்போதும் யாரையும் அதட்டி அதிகாரமாகப் பேசும், வேலைக்கு ஏவும் போகாத குணம் என இவற்றை எல்லாம் பார்த்தால் காதலியின் பெற்றோர் என்ன நினைப்பார்களோ என்பது அவனது பயம்.
எனவே தனது அண்ணியின் உதவியை நாடுகிறான். இப்படியான ஒரு சமயத்தில் தனது இளையமகன்தான், தனது அண்ணி மூலம் இப்படிச் செய்கிறான் என்பதை உணர்ந்த அங்கம்மாள், ஜாக்கெட் போட சம்மதிக்கிறாள்.
ஆனால், பெண் வீட்டில் இருந்து வரும்போது எல்லோருக்கும் நல்ல உடை வேண்டும் என்பதால் துணி எடுக்கக் கடைக்குப் போக, மருமகள் முதன் முதலாக சுடிதார் அணிய ஆசைப்பட்டு சுடிதார் வாங்க, அங்கம்மாளுக்கு அது பிடிக்கவில்லை.
துணிகளை நெருப்பில் போட்டு எரித்துவிட்டு, மீண்டும் சட்டை போடாமல் சேலை கட்ட ஆரம்பிக்கிறாள். பிரச்சனை பெரிதாகிறது.
மீண்டும் மகனுக்காக ஒரு நாள் மட்டும் சட்டை போட ஒத்துக் கொள்கிறாள்.
மகன் அம்மாவின் பல் கறையை நீக்க பல் டாக்டரிடம் கொண்டு போவது என்று அவளை ஒரு சோதனை எலியாக மாற்றுகிறான்.
பெண் வீட்டார் வருகிறார்கள். டாக்டரின் காதலி ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில் வருகிறாள்.
பேசினால் மகன் வருத்தப்படுவானென்று அமைதியாக இருக்கிறாள் அங்கம்மாள். ஆனால், அவளுக்கு தன் சுயத்தை இழப்பது சுய இறக்கமாக மாறுகிறது.
வீம்பும் வீறாப்பும் கொண்ட அங்கம்மாள் என்ன செய்தாள் என்பதே படம்.
மலை உச்சியில் இருந்து எப்போதாவது அடிக்கும் உச்சிமலைக் காத்து, தரைக்கு வந்தால் அது பெரும் இழப்புகளை ஏற்படுத்தும்.
எனவே உச்சிமலைக் காத்து ஊருக்குள் அடித்தால் அது தீய சகுனம் என்பது நம்பிக்கை.
அப்போது மலையில் இருந்து ஒரு பூ தரைக்கு வரும். அந்தப் பூ எப்படி இருக்கும் என்பது பலருக்கும் தெரியாது.
இந்த விஷயம் மீண்டும் படத்தில் வரும் இடம் அபாரம். அதைக் காட்சிப்படுத்திய விதமும் அபாரம். படம் முழுக்கவே காற்றும் ஒரு கதாபாத்திரமாக வருவது சிறப்பு.
சாமுவேலின் ஒளிப்பதிவுதான் படத்தில் கவரும் முதல் விஷயம். நீண்டு பறந்து விரிந்த நிலம், ஆகாயம்.
மனிதர்களையே பார்த்திருக்காதோ என்று யோசிக்க வைக்கும் இடங்கள், அவ்வளவு பரந்த விஸ்தீரணத்தில் குட்டிப் பாம்பென வளைந்து நெளிந்து வரும் பாதைகள்,
இந்த வீட்டில் தலை வைத்துப் படுத்தாள் எதிர் வீட்டில் கால் நீட்டலாம் என்னும் அளவுக்கு குறுகலான கிராமியத் தெருக்கள் என்று ஒளிப்பதிவும் இயக்கமும் சேர்ந்து பங்களித்து இருக்கும் விதம் அபாரம்.
முகமது மஃபூல் மன்சூரின் இசை தேவையான இடங்களில் மட்டுமே இசைக்கிறது. பிரதீப் சங்கரின் படத்தொகுப்பு மிகச் சிறப்பு.
பேச்சு, தொனி, பாவனை, பார்வைகளும் வார்த்தைகளுமாக கலந்து பேசும் விதம், அர்த்தம் உள்ள மவுனம் என்று பிரமாதப்படுத்தி இருக்கிறார் கீதா கைலாசம்.
இவர் நடிக்கிறாரா இல்லை அந்த ஊரில் நிஜமாக வளையவரும் பெண்ணா என்பதே தெரியாத அளவுக்கு மருமகளாகவே மாறி இருக்கிறார், மருமகளாக நடித்திருக்கும் தென்றல்.
கீதா கைலாசம் ஒரு வகையில் உயரம் தொட்டால், தென்றல் இன்னொரு வகையில் சிகரம் தொடுகிறார்.
காதலியாக வரும் முல்லையரசியின் யதார்த்த மை வண்ணம் கூட அழகு.
ஆனால், டாக்டராக வரும் சக்தி சரண்தான் யாருக்குமே சம்மந்தம் இல்லாத தோற்றத்தில் இருக்கிறார்.
அதுவும் அங்கம்மாளுக்கு கல்யாணத்துக்கு முன்பே ஒரு காதல் இருந்து, இப்போதும் அது நேசமாக இருக்கிறது என்று வேறு சொல்கிறார்களா? அது வேறு குழப்புகிறது.
ஒரு தியேட்டர் அதிபரின் கறுப்பான பெண் இவனைக் காதலிக்க அவனது தோற்றமும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று இந்தப் படத்தின் படைப்பாளிகள் சொல்ல வருவதாக எடுத்துக் கொண்டாலும் கூட, அவரது தோற்றைப் பொருத்தம் ஏற்க முடியவில்லை.
முதல் காட்சியில் அங்கம்மாள் தனது பேத்திக்கு பச்சை குத்த முயலும்போது மங்கு வரும் என மருமகள் கோபப்பட்டு மாமியாரைப் பேசுகிறாள். உடனே அங்கம்மாள் மருமகளை அடிக்கிறாள்.
அதன் பின்னர்தான் அங்கம்மாள் மருமகளை அடிக்கிறாரா? எனில் அதன் முன்பு அங்கம்மாள் மருமகள் விஷயத்தில் நல்லவளாக இருந்தாலா? அடிக்கவே இல்லையா? எனில் அது அங்கம்மாள் கேரக்டருக்கு பொருந்தவில்லையே.
இல்லை முன்பிருந்தே அவள் அப்படித்தான் எனில், மற்றக் காட்சிகள் மாமியாரிடம் பயப்படும் மருமகள், அந்த பச்சை குத்தும் காட்சியில் மட்டும் மாமியாரிடம் கோபப்படுவது எப்படி சாத்தியம்?
ஒரு நிலையில் அம்மாவும் இளைய மகனும் பேசும் காட்சியில், மகன் “ஒருவேளை அண்ணி கிட்ட சொல்லாம, நான் நேரடியா வந்து ஜாக்கெட் போடச்சொல்லி இருந்தா போட்டுருப்பியா” என்று கேட்க, “போட்டிருந்தாலும் போட்டிருப்பேன்” என்கிறாள் கேரக்டர் அசாசிநேசன்.
இதுபோன்ற விசயங்கள் எழுத்துக்கு ஓகே. ஆனால் ரத்தமும் சதையுமாக மனிதர்கள் நடிக்கும்போது அது வேண்டாத காட்சியாகவே மாறும்.
இத்தனைக்கும் இளைய மகனுக்கு அம்மா மீது பயம் இல்லை. முதல் காட்சியிலேயே அம்மா சொன்னதை கேட்க முடியாது என்கிறான்.
அப்படி தைரியமாக பேசும் அவன் நேரடியாக அம்மாவிடம் போய் ஜாக்கெட் போடு, அப்பத்தான் நீ ஆசைப்படுற அந்த பணக்கார சம்மந்தம் அமையும் என்று சொல்ல வேண்டியதுதானே?
எதுக்கு அண்ணியை விட்டுக் கேட்கச் சொல்ல வேண்டும்? இங்கேயும் ஒரு கேரக்டர் அசாசினேஷன்.
ஒரு சிறுகதையை திரைக்கதையாக மாற்றும்போது அதிக கவனம் வேண்டும். நீளப்படுத்த எழுதும் காட்சிகள் ஆழத்தைக் குறைத்து விடும்.
பெருமாள் முருகன் நல்ல எழுத்தாளர். விவசாயம், இயற்கை பற்றிய அவரது கவனித்தலும் பதிவுகளும் அவரது நாவல்களில் அபாரமாக இருக்கும். வித்தைகக்காரர். அதில் மாற்றம் இல்லை.
ஆனால், யதார்த்தம் என்ற பெயரில் கெட்ட வார்த்தைகளை அதிகம் எழுதுவார். இந்தப் படத்திலும் அது இருக்கிறது.
குறிப்பாக அவரது கதையின் இயல்பான, முதன்மையான பெண் கதாபாத்திரங்களை இழிவுபடுத்தும்படி எழுதுவார்.
எங்கோ ஒரு பகுதியில் ஏதோ ஒரு காலத்தில் வந்தவர்கள் செய்த அல்லது செய்ததாக சொல்லப்பட்ட விஷயத்தை எல்லாம் அந்த பகுதியின் பூர்வ குடி மக்கள் மீது சுமத்தி இப்போது அந்தப் பகுதியில் வாழும் மக்களை கூனிக் குறுகச் செய்வார்.
அதன் பின்னால் ஒரு சுயலாப அரசியலும், வன்மமான மொழி அரசியலும் அவரிடம் உண்டு.
இந்தப் படமும் அதற்கு பலியாகி இருக்கிறது.
எனினும் படத்தில் மேக்கிங் அருமையாக இருக்கிறது.
அதே நேரம், இந்தப் படமும் ஒண்டிமுனியும் நல்லபாடனும் படத்தைப் போல்தான் (ஆனால், அங்கம்மாளைவிட அது நல்ல படம்) திரையரங்க வெற்றிக்கு வாய்ப்பில்லாத படம்.
உலகப் படவிழாக்களில் கலந்துகொண்டு விருது பெறாமல் வந்திருக்கிறது அங்கம்மாள்.
அப்படி விருது பெறாததற்கு நான் மேலே சொன்ன கதாபாத்திரச் சீர்குலைவுகளே காரணமாக இருக்கும்.
எனினும் அங்கம்மாள்.. தங்கம்மாளும் இல்லை. தகரம்மாளும் இல்லை.
— சு.செந்தில் குமரன்