தமிழகத்தில் 2026-ல் விஜய்யின் ஆட்சி வருமா என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இப்போது அவர் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படமே வெளிவருமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
தணிக்கை வாரியத்தில் ஆரம்பித்து, உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று மாறி மாறி ஓடிக்கொண்டிருக்கிறார்கள் ‘ஜனநாயகன்’ படக்குழுவினர்.
தேர்தல் வேறு நெருங்குவதால், அதற்குள் படம் வெளியாகுமா அல்லது தேர்தல் முடிந்த பிறகாவது வெளிவருமா என்பதுதான் விஜய் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.
விஜய்யின் கடைசி படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருந்த படம் ஜனநாயகன்.
எச்.வினோத் இயக்கத்தில் தயாரான இப்படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கு யு/ஏ சான்றிதழ் கிடைக்கும் என்று முதலில் சொல்லப்பட்டது.
ஆனால், குறித்த நேரத்துக்குள் இந்த படத்துக்கான சான்றிதழை வழங்காத தணிக்கை வாரியம், படத்தை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்ப உத்தரவிட்டதால் தங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி படத்தின் தயாரிப்பு நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி. ஆஷா உடனடியாக ஜனநாயகனுக்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.
உயர்நீதிமன்றத்தின் கருத்து:
தணிக்கை வாரியம் இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய, இந்த வழக்கில் தங்கள் பதில் மனுவை தாக்கல் செய்ய தணிக்கை வாரியத்துக்கு தனி நீதிபதி போதிய அவகாசம் வழங்கவில்லை என்று கூறி தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்திருக்கிறது உயர் நீதிமன்றம்.
தனி நீதிபதி இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ‘ஜனநாயகன்’ படத்தில் அந்நிய சக்திகள் நாட்டில் பிரச்சினை ஏற்படுத்துவது போலவும், மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிப்பது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்ட புகார் தீவிரமானது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதைவைத்து பார்க்கும்போது இப்போதைக்கு படம் வெளியாவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே கூறப்படுகிறது.
தயாரிப்பு நிறுவனம் செய்த தவறு:
‘ஜனநாயகன்’ படத்துக்கு ஏற்பட்ட சிக்கல் பற்றி முன்னாள் தயாரிப்பாளர் ஒருவர் கூறும்போது,
“ஒரு படத்தை சென்சாருக்கு அனுப்பினால் அதன் நிலை என்ன என்று தணிக்கை வாரிய அலுவலகத்துக்கு தொடர்ந்து சென்று விசாரிக்க வேண்டியது தயாரிப்பு நிறுவனத்தின் கடமை.
ஆனால், ‘ஜனநாயகன்’ படத்தைத் தயாரித்த கே.வி.என் புரொடக்சன்ஸ் நிறுவனம் அப்படி செய்யவில்லை. தங்கள் படத்துக்கு சிக்கல் ஏதும் வராது என்று நினைத்து அசட்டையாக இருந்துவிட்டது.
மலேசியாவில் நடந்த அதன் இசை வெளியீட்டு விழாவில் அவர்கள் கவனம் செலுத்தினர்.
அதெல்லாம் முடிந்த சில நாட்களுக்கு பிறகே அவர்கள் தணிக்கை சான்றிதழ் பற்றி விசாரித்தபோது அதில் சிக்கல் இருந்ததை தெரிந்துகொண்டுள்ளனர்.
குறிபிட்ட காலத்துக்குள் தங்களுக்கு தணிக்கை சான்றிதழை அளிக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
தணிக்கை வாரியம் சொன்னபடி படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியிருந்தால் இந்த அளவுக்கு சிக்கல் வந்திருக்காது. ஒரு வாரம் தள்ளியாவது படம் வெளிவந்திருக்கும்.
ஆனால், ஜனநாயகன் தயாரிப்பாளர்கள் நீதிமன்றத்துக்கு போனது, தணிக்கை வாரியத்துக்கு கோபத்தை கொடுத்துள்ளது.
தங்களுக்கு எதிராக வழக்கு தொடரும் படங்களுக்கு அவர்கள் அவ்வளவு லேசில் தணிக்கை சான்றிதழ் கொடுத்துவிட முடியாது. அவர்களுக்கென்று சில அதிகாரங்கள் இருப்பதால் நீதிமன்றமும் இதில் ஓரளவுக்கு மேல் தலையிட முடியாது” என்கிறார்.
இந்த சிக்கல்கள் காரணமாக சென்சார் சம்பந்தமாக தொடர்ந்த வழக்கினை வாபஸ் வாங்குவதற்கு கேவிஎன் புரொடக்ஷன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தணிக்கை வாரியம் மறு ஆய்வுக்கு செல்லுமாறு கூறினால், அதனை ஏற்கவும் முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
ரிலீஸை தள்ளிப்போடச் சொல்லும் விநியோகஸ்தர்கள்:
‘ஜனநாயகன்’ படத்தின் பட்ஜெட் பெரியது என்பதால் அது அதிக விலைக்குதான் விற்கப்படும்.
அப்படி விற்கும்போது அதை அதிக விலை கொடுத்து வாங்கும் விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் அதிக லாபம் கிடைக்க, விடுமுறை நாளில் படம் வரவேண்டும்.
அதற்காகத்தான் ஜனவரியில் பொங்கல் நேரத்தில் இப்படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டது.
ஆனால், திட்டமிட்டபடி பொங்கலில் படம் வெளியாகாதது விநியோகஸ்தர்களையும் தியேட்டர் உரிமையாளர்களையும் கடுமையாக பாதித்துள்ளது.
இனி பிப்ரவரி மாத இறுதிக்குள் பிரச்சினைகள் முடிந்து இப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்தாலும், மார்ச் மாதம் பள்ளித் தேர்வுகள் நடப்பதால் தியேட்டருக்கு ரசிகர்கள் வர மாட்டார்கள் என்பது விநியோகஸ்தர்களின் கருத்தாக உள்ளது.
அதனால் இனி தேர்வுகளும், தேர்தலும் முடிந்து மே மாதத்தில் இப்படத்தை வெளியிட்டால் போதும் என்பதே விநியோகஸ்தர்களின் கருத்தாக உள்ளது.
தேர்தல் விதி அனுமதிக்குமா?
மார்ச் மாதத் தொடக்கத்துக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வர வாய்ப்புகள் உள்ளதால், ‘ஜனநாயகன்’ தியேட்டரில் வெளியாக ஏதாவது சிக்கல்கள் இருக்குமா என்ற கேள்வியும் உள்ளது.
முன்பு எம்.ஜி.ஆரும், சிவாஜியும் தீவிர அரசியலில் இருந்த சமயத்தில் அவர்கள் நடித்த படங்கள் தேர்தல் நேரத்தில் வெளியாகி உள்ளன.
தூர்தர்ஷன் சேனலில் மட்டும் அவர்கள் படங்கள் ஒளிபரப்பாகவில்லை. அதனால் இப்போது தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்தாலும் ‘ஜனநாயகன்’ வெளிவரத் தடைகள் ஏதும் இருக்காது என்று தவெகவினர் சொல்கிறார்கள்.
ஆனால், அப்போதைய தேர்தல் கமிஷன் வேறு, டி.என்.சேஷன் காலத்துக்கு பிறகான தேர்தல் கமிஷன் வேறு என்பதை அவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இப்படத்தின் டிரெயிலரிலேயே அரசியல் வசனங்கள் இருப்பதாலும், அரசியல்வாதிகளை விஜய் சாட்டையால் அடிப்பதுபோல் காட்சிகள் இருப்பதாலும், அது தேர்தலை பாதிக்கும் என்று தேர்தல் ஆணையம் கருதலாம்.
இப்போது தேர்தல் கமிஷனின் அதிகாரம் அதிகமாக இருப்பதால், அவர்கள் நினைத்தால் தேர்தல் முடியும்வரை படத்தை வெளியிடாமல் தடை செய்ய முடியும்.
விஜய்யால் சமாளிக்க முடியுமா?
திரைப் பிரபலம் ஒருவர் அரசியலுக்கு வரும்போது அவர் நடித்த படத்துக்கு இதுபோன்ற சிக்கல்கள் வருவது புதிதல்ல.
முன்பு எம்.ஜி.ஆர் தீவிர அரசியலுக்கு வந்தபோது, அவர் நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்கு பல்வேறு சிக்கல்கள் வந்தன. ஆனால் அதையெல்லாம் முறியடித்து படத்தை வெளியில் கொண்டுவந்தார் எம்ஜிஆர்.
இப்போது விஜய்யால் அதை செய்ய முடியுமா என்பதுதான் கேள்வி.
இதுபற்றி நேற்று செய்தியாளர்களிடம் பேசிய விஜய்யின் அப்பா சந்திரசேகர், “உண்மையான விடுதலையை அனுபவிக்கணும் என்று யாராவது புதியவர் அரசியலுக்கு வரும்போது இடையூறுகள் ஏற்படுவது வழக்கம்.
அதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. ஜெயிக்கணும்னா இதையெல்லாம் எதிர்கொள்ளனும். இதுல அரசியல் இருக்கா, இல்லையான்னு மக்களுக்கு நல்லா தெரியும்.
மாற்றத்தை ஏற்படுத்த வருபவர்கள் இதுபோன்ற பல தடைகளை எதிர்கொள்ளணும். விஜய் இதேமாதிரி எவ்வளவோ தடைகளை எதிர்கொள்வார்” என்று கூறியுள்ளார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் சொன்னபடி விஜய் இந்த சவாலை சமாளிப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
– பி.எம். சுதிர்