யார் இந்த பாக்யஸ்ரீ போர்சே…?

‘ஒரே படத்துல ஓஹோன்னு வரப் போற பாரு’ என்று ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் சச்சுவைப் பார்த்து நாகேஷ் சொல்வதாக ஒரு வசனம் உண்டு. அந்தப் படத்தில் நாகேஷ் இயக்குனராக முயற்சிப்பவராகவும், சச்சு நடிக்க வாய்ப்பு தேடும் இளம் பெண்ணாகவும் தோன்றியிருப்பார்கள்.

அந்த வார்த்தைகள் மிகச்சரி என்பது போலப் பல திரைப் பிரபலங்களின் வாழ்க்கை ஒரு நாளில் மாறியிருக்கிறது.

ஆனால், அப்படிக் கிடைத்த புகழைத் தக்க வைக்கப் படாத பாடு பட வேண்டியிருக்கும். அந்த காலகட்டத்தைத் திறம்படக் கையாண்டவர்கள் நீடித்த புகழைப் பெற்று நட்சத்திரங்களாக மலர்வார்கள்.

இன்றைய ‘இன்ஸ்டாகிராம்’ யுகத்தில் மிகச்சில ஷாட்கள் அந்த மாயாஜாலத்தை நிகழ்த்திவிடுகின்றன.

ஒரு சில ‘இன்ஸ்டா ரீல்’களால் புகழடைந்தவர்கள் எண்ணற்றோர் உண்டு. அந்த வரிசையில், சமீபகாலத் திரை பிரபலங்களும் இன்றைய இளசுகளின் மனங்களைக் கொய்து வருகின்றனர்.

அந்த வரிசையில் ஒருவராக இடம்பெற்றிருக்கிறார் பாக்யஸ்ரீ போர்சே.

பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா, கியாரா அத்வானி போன்ற ‘நேஷனல் க்ரஷ்’களை ஓரம் தள்ளும் வகையில் புகழ் பெறுவார்களோ என்று எண்ணத்தக்க புதுமுகங்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

புதிய வரவு!

மகாராஷ்டிரா மாநிலத்தைப் பூர்விகமாகக் கொண்டவர்கள் பாக்யஸ்ரீயின் பெற்றோர். அவர்கள் நைஜீரியாவின் லாகோஸ் நகரில் இருந்தபோது இவர் பிறந்தார். அங்கே பள்ளிப் படிப்பை முடித்தவர், மும்பைக்கு கல்லூரி பயில வந்தார்.

எம்பிஏ படித்தபோது, மாடலிங் வாய்ப்புகள் பாக்யஸ்ரீயைத் தேடி வந்தன. அப்படி பல பிராண்ட்களின் விளம்பரப் படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

அதிலொன்றுதான் ‘கேட்பரி டெய்ரி மில்க்’ சாக்லேட் விளம்பரம். அதற்குக் கிடைத்த வரவேற்பு, பாக்யஸ்ரீயைத் திரையுலகுக்கு அழைத்து வந்தது.

‘யாரியான் 2’ இந்திப் படத்தில் நாயகியாக அறிமுகம் ஆனார் பாக்யஸ்ரீ போர்சே. தொடர்ந்து கார்த்திக் ஆர்யன் உடன் ‘சந்து சாம்பியன்’னில் தோன்றினார். இரண்டுமே ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றன.

விளம்பரப் படங்கள், இந்திப் படங்களில் தலைகாட்டுகிற ‘பளிச்’ முகங்களைத் தனது ஜோடியாக நடிக்க வைப்பதில் ஆர்வம் காட்டி வருபவர் நடிகர் ரவி தேஜா. அவரது கடந்த காலப் படங்களைப் பார்த்தால் அதனைப் புரிந்துகொள்ள முடியும்.

அப்படி ரவி தேஜாவின் ஜோடியாக ‘மிஸ்டர் பச்சன்’ படத்தில் நடித்தார் பாக்யஸ்ரீ போர்சே. அந்தப் படம் பெரிதாக வரவேற்பைப் பெறாதபோதும், ‘ஜிக்கி’ உட்படப் பாடல்களில் பாக்யஸ்ரீ தோன்றியவிதம் ரசிகர்களை ஈர்த்தது.

கவனம் ஈர்க்கிற முகம், காந்தமாகக் கவரும் கண்கள், வாளிப்பான உடல்வாகு என்று சட்டென்று ரசிகர்களை வசீகரிக்கிற விதத்தில் அப்படத்தில் இருந்தது அவரது இருப்பு. அதன் பலனாக, சில படங்களில் இடம்பிடிக்கிற வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன.

வரும் நாட்களில் வெளியாகவிருக்கிற அப்படங்கள் பாக்யஸ்ரீயை ‘நேஷனல் க்ரஷ்’ ஆக்கவல்ல உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதாக, அவரது ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றன.

எகிறும் எதிர்பார்ப்பு!

விஜய் தேவரகொண்டாவின் ஜோடியாக பாக்யஸ்ரீ போர்சே நடித்துள்ள ‘கிங்டம்’ இப்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.

கௌதம் தின்னனூரி இயக்கியிருக்கிற இந்தப் படமானது உளவாளியாக வருகிற நாயகனின் சாகசங்களையே முன்னிறுத்தும் என்று தோன்றுகிறது. அதையும் மீறி, இதில் பாக்யஸ்ரீயின் பாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரப்படவும் வாய்ப்பிருக்கிறது.

ஆனால், அந்த படத்தைத் தாண்டுகிற வகையில் பாக்யஸ்ரீயின் இருப்பு இருக்குமென்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது ‘காந்தா’.

ராணா, துல்கர் சல்மான் தயாரிக்கிற இந்த படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார்.

அறுபதுகளில் தயாராகிற ஒரு தமிழ் சினிமா படப்பிடிப்பைக் காட்டுவதாக இருக்கிறது இதன் உள்ளடக்கம். இதில் புதுமுக நடிகையாகத் தோன்றுகிறார் பாக்யஸ்ரீ.

இன்னொரு புறம் மகேஷ் பாபு. பி இயக்கத்தில் ராம் போத்தினேனி ஜோடியாக ‘ஆந்திரா கிங் தாலுகா’ படத்தில் நடித்து வருகிறார். இதுவும் தொண்ணூறுகளில் நிகழ்கிற மாதிரியான ஒரு பீரியட் பிலிம் தான்.

இந்தப் படத்தில் ஒரு பிரபல நாயகனின் ரசிகராக வருகிறார் ராம். அவரது காதலியாக வருகிறார் பாக்யஸ்ரீ. நிச்சயமாக, இதில் நாயகிக்குத் தனி முக்கியத்துவம் உண்டு என்பதாகவே இதன் ‘டீசர்’ அமைந்திருக்கிறது.

இது போக அல்லு அர்ஜுன் – அட்லீ கூட்டணியில் உருவாகிற படத்தில் நான்கு நாயகிகளில் ஒருவராக நடிக்கவிருக்கிறார் பாக்யஸ்ரீ.

பிரபாஸ், அகில் நாகார்ஜுனா படங்களிலும் இவர் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வந்திருக்கின்றன.

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் யாமி கவுதம் விளம்பரப் படங்கள் வழியே ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் எளிதாக நுழைந்தார்.

சட்டென்ற கவன ஈர்ப்பை உருவாக்கினார். அதிகளவில் அவர் படங்கள் நடிக்கவில்லையே தவிர, அவருக்கான வரவேற்பும் அவர் ஏற்படுத்திய வசீகர அலையும் நிச்சயம் பிரமிப்புக்குரியதே.

கிட்டத்தட்ட அப்படியொரு வரவேற்பு பாக்யஸ்ரீக்கும் கிடைக்குமோ என்ற எண்ண வைக்கிறது அவரது படத் தேர்வுகள்.

திரையுலகில் ‘ஓஹோ’ன்னு வருவாரா இல்லையா என்பதை இந்தப் படங்களில் அவரது இருப்பு தெளிவுபடுத்திவிடும்..!

– மாபா

Comments (0)
Add Comment