அண்மையில் பார்த்த படத்தின் பெயர் விலாயத் புத்தா.
இந்தப் படத்தை தேர்வுசெய்ய மூன்று காரணங்கள். 1. இப்படத்தின் மூலக்கதை ஜி.ஆர். இந்துகோபன் எழுதிய நாவல். 2. தொடக்கத்தில் இந்நாவலை திரைக்கதையாக்க முயன்றவர் சமீபத்தில் மறைந்த சச்சி. 3. பிரித்விராஜ்.
நாவலை எழுதிய ஜி.ஆர். இந்து கோபனே ராஜேஷ் பின்னாடனோடு சேர்ந்து திரைக்கதை எழுதியிருக்கிறார்.
இந்த நாவல் தமிழிலும் வந்திருக்கிறது. நான் படிக்கவில்லை. ஒருவேளை இது நாவலாக நன்றாக இருந்திருக்கலாம். அதற்காக நாவலில் எழுதப்பட்ட முழுவதும் ஒரு திரைக்கதைக்கு தேவைப்படுவதில்லை.
முன்னாள் ஆசிரியரும் இப்போதைய பஞ்சாயத்து தலைவருமான பாஸ்கரன் மாஸ்டர் (ஷம்மி திலகன்), சந்தனக் காடுகளுக்கு பெயர் பெற்ற மலைப்பாங்கான மறையூரில் வசிப்பவர். ஓர் இரவு செப்டிக் டேங்கில் விழுந்துவிடுகிறார்.
அங்குதான் நாயகி சோலைக்கல் சைதன்யா (பிரியம்வதா) தன் அம்மா செம்பகத்தோடு (ராஜஸ்ரீ) வசிக்கிறார்.
அந்த நேரம் பார்த்து நாயகியை ஒருதலையாக நேசிக்கிற மாஸ்டரின் மகன் அனிலும் அங்கு வருகிறான்.
குழியில் விழுந்த பாஸ்கரன் மாஸ்டரை ஊரே சேர்ந்து பொக்லைனால் தூக்குகிறது. சைதன்யா,
செம்பகம் இருவரும் ஒடுக்கப்பட்ட வகுப்பினர். மாஸ்டர் செம்பகத்தைப் பார்க்க போய்தான் மலக்குழியில் விழுந்ததாக எதிர்க் கட்சியினர் பேசுகின்றனர். மாஸ்டரின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வருகிறது.
மலக்குழியில் விழுந்த தன்னை இறந்தபிறகு, தன் தோட்டத்தில் உள்ள விலாயத் புத்தா சந்தன மரத்தால் எரிக்க வேண்டும். அப்போதுதான் தன் ஆன்மா மணக்கும் என நம்புகிறார் மாஸ்டர்.
இதே ஊரில் சந்தன மரங்களை வெட்டி விற்பவன் டபுள் மோகன் (பிரித்விராஜ்). விலாயத் புத்தா சந்தன மரத்தை (அபூர்வ வகை) விற்றால், நிறைய பணம் கிடைக்கும் என மாஸ்டரிடம் பேரம் பேசுகிறான் மோகனன். அது தன்னை எரியூட்ட தேவை என மறுத்துவிடுகிறார்.
செப்டிக் டேங்கில் மாஸ்டர் விழும்போது படம் elevate ஆகிறது. தொடர்ந்து, மோகனனின் சந்தனமரக் கடத்தல், காதல், சாதித் தீண்டாமைக்காக போராடுவது என இலக்கற்று திரைக்கதை அலைகிறது.
இதன் காரணமாக மாஸ்டர் vs மோகனன் rivalry சரியாக வேலை செய்யவில்லை. அய்யப்பனும் கோஷியும், டிரைவிங் லைசன்ஸ் போல் மாறியிருக்க வேண்டிய படம். பாதியில் படுத்துக் கொள்கிறது. ஷம்மி திலகன், பிரித்விராஜ் நடிப்பு உதவாமல் வீணாகிறது.
பத்மராஜன், வின்சென்ட், வைக்கம் முகம்மது பஷீர் படைப்புகள் திரையாக்கம் பெற்றபோது, அவற்றில் திரை வடிவத்துக்கு தேவையானதை மட்டுமே எடுத்துக் கொண்டார்கள்.
அறிமுக இயக்குனரான ஜெயன் நம்பியார் மினிமலிசத்தில் நம்பிக்கை கொள்ளாமல் நீண்ட காட்சிகளால் சலிப்படைய வைக்கிறார்.
எடிட்டிர் என்று ஒருவர் இருக்கிறாரா? என்பதே சந்தேகமாக இருக்கிறது. (அந்த வகையில் நான் பார்த்த இன்னொரு படமான மாஸ்க்கில் எடிட்டர் அற்புதம் செய்திருக்கிறார்).
மலக்குழி vs சந்தனம் என்கிற இருமை எதிர்வு, ஆதிக்கசாதி vs ஒடுக்கப்பட்ட சாதி, அதிகாரம் vs சுதந்திரம், இப்படி விரிவாகச் சிந்திக்கத் துண்டுவதற்கான space-ஐ உருவாக்கியிருக்க வேண்டும்.
ஆனால், இத்தகைய முரணை கூர்மைப்படுத்தும் புள்ளியிலிருந்து விலகிய இயக்குநரின் தேர்வின்மையால் படம் அயற்சியை உருவாக்குகிறது.
நாயகி தீண்டத்தகாத மலைவாழ் சமூகத்தவள். அவளை சுதந்திரமான கிளர்ச்சியாளராகக் காட்ட brown face குறியீடு உத்தி.
ஹாலிவுட், பாலிவுட்டில் பரிட்சிக்கப்பட்டவை. இருவரது நெருக்கமான பாலியல் காட்சிகள் இயக்குநர் எதிர்பார்க்கும் கலகத் தன்மையை வழங்காமல் படத்தின் இலக்கை திசைதிருப்பவே செய்திருக்கிறது.
நன்றி: கரிகாலன் முகநூல் பதிவு