அண்ணனின் மளிகைக் கடையில் அவருக்கு உதவியாக இருந்த லிங்குசாமிக்கு இளம் வயதிலேயே சினிமாக் கனவு இருந்தது.
சொல்லாமல் கொள்ளாமல், சொந்த ஊரான கும்பகோணத்தில் இருந்து கோடம்பாக்கம் வந்த அவர், ஃபிரிலேன்ஸ் சினிமா நிருபராக வேலைப் பார்த்துக்கொண்டே உதவி இயக்குநர் ஆகும் முயற்சியில் ஈடுபட்டார்.
‘என்றும் அன்புடன்’ படத்தை இயக்கிய பாக்யநாதனிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தார் லிங்குசாமி. அவரது நண்பர் பிருந்தா சாரதியும், பாக்யநாதனுடன் பணியாற்றினார்.
பாக்யநாதன் படம் தாமதம் ஆனதால், ஏ.வெங்கடேஷிடம் ‘மகா பிரபு’ படத்தில் உதவியாளராகச் சேர்ந்த லிங்குசாமிக்கு சில மாதங்களிலேயே ‘ஆனந்தம்’ படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.
படம் சூப்பர் ஹிட் அடித்தது. அடுத்து இயக்கிய ‘ரன்’ படமும் நல்ல ஓட்டம். அடுத்து டைரக்ட் செய்த சிலப் படங்கள் தோற்ற நிலையில், ஆக்ஷன் கதை ஒன்றை தயார் செய்தார்.
நடிகர் விஜயை நேரில் சந்தித்து தனது கதையைக் கூறினார். லிங்குசாமி பாதிக்கதையைச் சொல்லி இருப்பார். விஜய்க்கு பொறுமை இல்லை.
முழுக்கதையை கேட்காமல் ‘போதும், இனிமேல் வேண்டாம்’ என சலிப்புடன் சொல்லி விட்டார்.
‘இன்னும் 10 நிமிடம் மட்டும் கேளுங்க, உங்களுக்குக் கதை புரியும்’ என்று லிங்குசாமி கெஞ்சியும் விஜய், தொடர்ந்து கதையை கேட்காமல் அவரை வழி அனுப்பி வைத்துள்ளார்.
லிங்குசாமி அப்செட். அந்தக் கதையை விஷாலிடம் லிங்குசாமி சொல்ல, தான் ஹீரோவாக நடிப்பதுடன், தயாரிக்கவும் செய்கிறேன் என உறுதி அளித்தார். சொன்னபடி நடந்து கொண்டார்.
அந்தப் படம் தான் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ‘சண்டக்கோழி’. படம் மிகப்பெரிய வெற்றி.
விஷாலை வேறொரு லெவலுக்கு அந்தப் படம் கொண்டு சென்றதை கோடம்பாக்கம் அறியும்.
படம் வெளியான சில மாதங்கள் கழித்து விழா ஒன்றில் பங்கேற்ற லிங்குசாமியை சந்தித்த விஜய், ‘சண்டக்கோழி படம் சூப்பராக இருந்தது’ என பாராட்டியது தனிக்கதை.
– பாப்பாங்குளம் பாரதி.