வல்லமை – விழிப்புணர்வு ஊட்டுகிற படமா?

மிகச்சிறிய முடிச்சைக் கொண்டிருக்கும் ஒரு கதையை, சுமார் இரண்டு மணி நேரம் திரையில் பரபரப்பாகச் சொல்ல முடியும் என்று பல திரைப்படங்கள் நிரூபித்திருக்கின்றன.

கதை நிகழும் களங்கள் மிகப்பெரியதாக இல்லாமல் போனால்கூட அதனைச் சாதிக்க முடியும் என்று காட்டியிருக்கின்றன. அந்த நம்பிக்கையோடு வந்திருக்கிற ஒரு திரைப்படம் ‘வல்லமை’.

கருப்பையா முருகன் எழுதி இயக்கித் தயாரித்திருக்கிற இப்படத்தில் பிரேம்ஜி, திவ்யதர்ஷினி, தீபா சங்கர், வழக்கு எண் முத்துராமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘வல்லமை’ தரும் திரையனுபவம் எத்தகையதாக உள்ளது?

‘வல்லமை’ கதை!

கிராமத்தில் வாழ்ந்து வரும் சரவணன் (பிரேம்ஜி) தனது மனைவி மறைவுக்குப் பிறகு மகள் பூமிகாவை (திவ்யதர்ஷினி) அழைத்துக்கொண்டு சென்னைக்கு வருகிறார். வந்த இடத்தில் சுவரொட்டிகள் ஒட்டி பிழைப்பு நடத்துகிறார்.

காது கேளாமை பாதிப்புள்ளவர் சரவணன். அதனால், அவரது நலன்களைக்கூட மகள் பூமிகாவே கவனித்துக் கொள்கிறார்.

பதின்ம வயதுப் பெண்ணாக மாறுகிற அவருக்குத் தாயாகவும் தந்தையாகவும் இருக்கிறார் சரவணன்.

திடீரென்று ஒருநாள் பூமிகா உடல்நலப் பாதிப்புக்கு உள்ளாகிறார்.

மருத்துவரிடம் காட்டும்போது, அவர் பாலியல்ரீதியில் பாதிக்கப்பட்டது தெரிய வருகிறது.

அது, அவரையும் அறியாமல் மயக்கத்தில் இருக்கும்போது நிகழ்ந்திருக்கிறது.

அந்த உண்மையை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறார் சரவணன். என்ன செய்வதென்றே அவருக்குத் தெரியவில்லை. மகளிடம் அது பற்றி எப்படிக் கேட்டால் பதில் கிடைக்கும் என்று புரியாமல் குழம்புகிறார்.

அவரது நிலையைக் காணும் பூமிகா, ‘டாக்டர் பேசுனதை நானும் கேட்டேன்பா’ என்கிறார்.

‘இப்படியொரு நிலைக்கு நம்மை ஆளாக்கினவனைக் கொல்லணும்’ என்கிறார்.

நடந்த சம்பவத்துக்குக் காரணமான கயவனை அவர்கள் கண்டறிந்தார்களா? அதன்பிறகு என்ன நடந்தது என்று சொல்கிறது ‘வல்லமை’யின் மீதி.

தினசரிகளில் அவ்வப்போது இது போன்ற பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான செய்திகளை நாம் எதிர்கொள்ள நேரிடுகிறது.

சம்பந்தப்பட்ட மனிதர்களுக்கு அச்சம்பவம் எத்தகைய வலியைத் தரும் என்று காட்டுகிறது இப்படம்.

ஆனால், அந்த ஒரு நோக்கம் மட்டுமே நல்லதொரு திரைப்படத்தைத் தந்துவிடுமா என்ற கேள்வியை எழுப்புகிறது இதன் திரைக்கதை ஆக்கம்.

இது போன்ற படங்கள் இளஞ்சிறுமிகள், சிறார்கள் மீதான பாலியல் அத்துமீறல்களையும் அது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்கான விழிப்புணர்வையும் எளிய மக்களுக்கு எடுத்துரைப்பதாக இருக்க வேண்டும். இப்படத்தில் அது நிகழவே இல்லை.

பக்குவம் பெருக்கியிருக்கலாம்!

நாக்கை ஒருபக்கமாகத் துருத்தி, கண் அடித்து, கை விரல்களை மடக்கி ‘ஸ்டைல்’ செய்து, ‘என்ன கொடுமை சரவணன் இது’ என்கிற ரேஞ்சில் காமெடி ‘பஞ்ச்’ பேசுகிற பிரேம்ஜியை இதில் பார்க்க முடியாது.

காரணம் கதை அப்படி. அதையும் மீறி, அவரது வழக்கமான உடல்மொழி ஆங்காங்கே தலைநீட்டிவிடுகிறது.

அதனைச் சமாளிக்கிறேன் பேர்வழி என்று சீரியசாக அவர் பேசுகிற வசனங்கள் மேடைப்பேச்சு போன்றிருக்கிறது.

பிரேம்ஜி மகளாக வரும் திவ்யதர்ஷினி ‘ஓவர் ஆக்டிங்’ ஏதுமில்லாமல் அந்தப் பாத்திரத்திற்குப் பொருத்தமாக வந்து போயிருக்கிறார்.

ஸ்கூல் ப்யூன் ஆக போராளி திலீபன், கான்ஸ்டபிளாக சூப்பர்குட் சுப்பிரமணி, இன்ஸ்பெக்டராக வழக்கு எண் சேதுராமன், குழந்தைகள் மருத்துவராக தீபா சங்கர், சுப்பிரமணியன் மாதவன், விது உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இவர்கள் அனைவருமே மூன்று நான்கு காட்சிகளில் வருகின்றனர், போகின்றனர். இவர்கள் நிலை தான் இப்படி என்றில்லை.

இதில் வில்லனாக நடித்திருக்கிறார் சி.ஆர்.ரஜித். அவருக்கும் திரைக்கதையில் தனியாகக் கிளைக்கதை இல்லை.

இதுவே ‘வல்லமை’ படத்தின் மிகப்பெரிய பலவீனமாக இருக்கிறது.

எந்த இடத்தில், எந்த விஷயத்திற்கு, எந்தப் பாத்திரத்திற்கு, எவ்வளவு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்? ஏன் அது தேவை என்கிற கேள்விகளுக்குப் பதில் காணும் வகையில் இதன் திரைக்கதை அமைக்கப்படவில்லை.

ஜிகேவி இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். வெங்கட்பிரபு பாடியிருக்கும் ‘மகளே என் மகளே’ பாடல் சட்டென்று மனம் கவர்கிறது.

பின்னணி இசை ஒவ்வொரு காட்சியிலும் ஆங்காங்கே வந்து போயிருக்கிறது. அதனைக் கொஞ்சம் சரிப்படுத்தியிருக்கலாம்.

சூரஜ் நல்லுசாமி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

ஒரு ஆவணப்படம் பார்த்த உணர்வைத் தரும் வகையில் ‘யதார்த்தம்’ திரையில் தெரிய மெனக்கெட்டிருக்கிறார்.

ஆனால், பின்பாதியில் திரைக்கதை வேகமெடுக்க வேண்டிய இடத்திலும் கூட கேமிரா மெதுவாகவே நகர்ந்திருக்கிறது.

கிடைத்த ஷாட்களைக் கொண்டு படத்தை சி.கணேஷ்குமார் தொகுத்தாரோ என்று எண்ண வைக்கிறது படத்தொகுப்பு.

நான்கைந்து ‘ரியல் லொகேஷன்’களில் காட்சிகள் மாற்றி மாற்றிப் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. அங்குக் காட்சிகளுக்குத் தேவையான சூழலை அமைக்க உதவியிருக்கிறார் கலை இயக்குநர் எஸ்.கே. அஜய்.

இதுபோக சண்டைக்காட்சி, ஒலி வடிவமைப்பு என்று சில தொழில்நுட்பக் கலைஞர்கள் இதில் பணியாற்றியிருக்கின்றனர்.

இந்தப் படத்தின் பட்ஜெட் மிகக்குறைவு. அதில் குறை இருப்பதாக நாம் கருதவில்லை.

ஆனால், எடுத்த கதையை முழுமையாகச் சொல்கிற அளவுக்குக் காட்சிகள் படத்தில் இருந்தாக வேண்டுமே? ‘வல்லமை’யில் அதனைத் தவறவிட்டிருக்கிறர் இயக்குநர் கருப்பையா முருகன்.

ஒரு விஷயம் நடந்து கொண்டிருக்கும்போதே, ‘அது முடிந்துவிட்டதா, இல்லையா’ என்று தெரியாமல் நாம் அடுத்த காட்சியைப் பார்க்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக, கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி அந்த வகையில் இருக்கிறது.

அதுபோக, பாலியல் அத்துமீறல் தொடர்பாகத் தந்தையும் மகளும் பேசுகிற காட்சிகளில் வசனங்கள் ‘செயற்கையாக’ இருக்கின்றன.

அந்தக் காட்சிகளில் தெரிந்திருக்க வேண்டிய ‘உணர்வுக் கொந்தளிப்பு’ சிறிது கூடத் திரையில் வெளிப்படவில்லை.

‘அது தேவையில்லை’ என்று இயக்குநர் கருதியிருக்கலாம். அது அவரது சுதந்திரம். ஆனால், அதற்கான காரண காரியங்களைத் திரையில் விளக்கியாக வேண்டும். அதனைச் செய்யத் தவறியிருக்கிறார் கருப்பையா முருகன்.

‘வல்லமை’ எப்போது முழுமையாகத் தயாரானது? எவ்வளவு காலம் கிடப்பில் இருந்தது என்று நமக்குத் தெரியாது.

ஆனால், ஜென்ஸீ தலைமுறையைச் சேர்ந்த சிறுமியர் இப்படத்தைக் கண்டு விழிப்புணர்வு அடைகிற வகையில் இதன் உள்ளடக்கம் இல்லை.

இப்படியொரு கதையில் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளின் பங்களிப்பு ஒரு காட்சியிலாவது காட்டப்பட்டிருக்க வேண்டும்.

இதில் நடனம் கற்றுத் தருகிற ஆசிரியை காட்டப்பட்ட அளவுக்கு, வேறு ஆசிரிய பாத்திரங்கள் காட்டப்படவில்லை.

அதன் பின் என்ன காரணங்கள் இருந்தாலும் அது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.

ஒரு திரைப்படம் என்ன நோக்கத்திற்காக உருவாக்கப்படுகிறதோ, அது பூர்த்தியாகாமல் போவது வருத்தம் தரும் விஷயம். ‘வல்லமை’ மிகச்சுமாரான எழுத்தாக்கத்தால், காட்சியாக்கத்தால், நல்லதொரு வாய்ப்பை ‘மிஸ்’ செய்திருக்கிறது.

நகைச்சுவை நடிகராக அறியப்படுகிற பிரேம்ஜியை வைத்து இப்படியொரு கதையைத் திரையில் சொல்ல வேண்டும் என்கிற ஐடியா மிகச்சிறப்பானது.

ஆனால், அது மட்டுமே போதாது என்பதாக உள்ளது ‘வல்லமை’.

– உதயசங்கரன் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment